ஆன்மிகம்

அனுமன் ஜயந்தியையொட்டி சுசீந்திரம் ஆஞ்சனேயருக்கு 16 வகை அபிஷேகங்கள்

25th Dec 2019 01:35 PM

ADVERTISEMENT

குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தானுமாலைய சுவாமி திருக்கோயிலில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சனேயர் தனிச் சன்னதியில் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். 

ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை திதியில் ஆஞ்சனேயர் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு ஆஞ்சனேயர் ஜயந்தி புதன்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ராமருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு மஞ்சள் தூள், அரிசி மாவு, நெய், விபூதி, இளநீர், தயிர், நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு, திரவியப்பொடி, குங்குமம், பன்னீர், சந்தனம், பால் உள்ளிட்ட 16  வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 

தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 3 மணி வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 12 மணிக்கு சிறப்புத் தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு ஸ்ரீ ராமபிரானுக்குப் புஷ்பத்தால் அபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சனேயருக்குப் புஷ்பத்தால் அபிஷேகமும் நடைபெறுகிறது. இரவு 10  மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் உள்ள பக்தர்களும், ஐயப்பப் பக்தர்களும் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காகப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT