வாக்குக் கணிப்பில் நம்பிக்கையில்லை: ராகுல் காந்தி சிறப்புப் பேட்டி

பிரசாரத்துக்காக இந்தியா முழுவதும் சுற்றி வந்ததில் மக்களின் குரல் உங்கள் காதில் விழுவதாகக் கூறுகிறீர்களே, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
வாக்குக் கணிப்பில் நம்பிக்கையில்லை: ராகுல் காந்தி சிறப்புப் பேட்டி


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ஜி.எஸ். வாசுவும், கர்நாடக மாநிலத்தின் பதிப்பாசிரியர் சாந்த்வனா பட்டாச்சார்யாவும், ராகுல் காந்தியுடன் அமிருதசரஸ் நகரத்துக்கு விமானத்தில் சென்றபோது அவர்களுக்குப் பேட்டி அளிக்கப்பட்டது. அதிலிருந்து சில பகுதிகள்.


பிரசாரத்துக்காக இந்தியா முழுவதும் சுற்றி வந்ததில் மக்களின் குரல் உங்கள் காதில் விழுவதாகக் கூறுகிறீர்களே, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த ஆட்சியில் நமது நாடு பல்வேறு நிலைகளில் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அந்தப் பிரச்னைகள் அவ்வளவு எளிதில் தீர்வு கண்டுவிட முடியாதவை. வேலையில்லாத் திண்டாட்டம், சீர்குலைந்துவிட்டிருக்கும் பொருளாதாரம், வேளாண் இடர்  உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்னைகள் அவை. இவற்றில் இருந்தெல்லாம் இந்தியாவை மீட்டெடுக்க அடுத்து அமைய இருக்கும் அரசு மிகவும் சிரமப்பட்டாக வேண்டும்.
மோடியின் பிரசாரம் வெறுப்பின் அடிப்படையிலானது; உங்கள் அணுகுமுறை அன்பின் வழியில் ஆனது என்று கூறுகிறீர்கள். நீங்கள் மிகவும் மென்மையானவர் என்ற கருத்து உங்களுக்கு பாதகமாக அமையாதா?
அரசியலில் அன்பான அணுகுமுறை இருக்கக் கூடாது என்று நீங்கள் கூறுகிறீர்களா? என்னைப் பொருத்தவரையில் அரசியலில் வெறுப்புணர்வையும், கோபத்தையும் வெளிக்காட்டுவது முட்டாள்தனமான விஷயம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை நான் கட்டித் தழுவி பதிலளித்தபோது, நான் உள்ளார்ந்த அன்பு, நேர்மையுடன் நடந்து கொண்டேன். அரசியல் ரீதியாக அது எனது அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அமைந்தது. அதை அழுத்தமாகவே நான் பதிவு செய்தேன் என்று நினைக்கிறேன்.
இந்த முறை அரசு அமைவதில் நீண்ட இழுபறி  இருக்கும் என்று கருதுகிறீர்களா?
நான் அப்படி நினைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வந்தவுடன் விரைவிலேயே புதிய ஆட்சி அமையும். பாஜக மற்றும் பிரதமர் மோடி மீது பரவலாகவே அதிருப்தி காணப்படுகிறது. தேர்தல் முடிவு வெளியாகும் மே 23-ஆம் தேதி அவை தெளிவாக வெளிப்படும்.
காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவாகும் பட்சத்தில், மற்ற கட்சியைச் சேர்ந்தவரை பிரதமராக ஏற்பீர்களா? ஏனெனில், கர்நாடகத்தில் இதே போன்ற சூழலில் முதல்வர் பதவியைக் காங்கிரஸ் விட்டுக் கொடுத்ததே?
நமது நாட்டில் ஆட்சியாளர்களை முடிவு செய்வது மக்கள்தான். மக்கள் என்ன முடிவு செய்துள்ளனர் என்பது மே 23-ஆம் தேதி தெரியவரும். அதன்படி நாங்கள் செயல்படுவோம். மக்களின் முடிவு தெரியாமல், ஊகத்தின் அடிப்படையில் நான் கருத்துக் கூறுவது சரியாக இருக்காது. தேர்தல் முடிவுகள் கிடைத்த பிறகு, இது தொடர்பாக நாங்கள் ஆலோசித்து முடிவெடுப்போம்.
காங்கிரஸ் ஆட்சி அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, இவை இரண்டையும் தாண்டி மூன்றாவது யோசனை பரிசீலனையில் உள்ளதா?
அதை மக்கள் முடிவு செய்வார்கள். 23-ஆம் தேதி மக்கள் என்ன தீர்ப்பைத் தருகிறார்களோ, அதை நான் ஏற்றுக்கொள்வேன். அவர்கள் தங்களது கருத்தைத் தெளிவுப்படுத்துவதற்கு முன்னால், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. தேர்தல் முடிவுகள் வெளிவந்து, தெளிவான எண்ணிக்கைகள் வெளியான பிறகு அவற்றின் அடிப்படை முடிவு செய்வோம்.
காங்கிரஸ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது அணி ஆட்சி அமைவதை ஏற்று, செயல்பட தயாராக இருக்கிறீர்களா?
அதற்கு நான் ஏற்கெனவே பதிலளித்துவிட்டேன். தேர்தலுக்குப் பின் வரும் நிகழ்வுகள் குறித்து இப்போதே கருத்துக் கூறுவது சரியாக இருக்காது. பிரதமர் மோடியை தேர்தலில் தோற்கடிப்பதும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தவறான கொள்கைகளை வீழ்த்துவதும்தான் எனது நோக்கம். நாட்டின் அரசமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். ஜனநாயக அமைப்புகள் உறுதியாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இதனை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா, இல்லையா என்பது தேர்தல் முடிவில் தெரியவரும். அதன் பிறகுதான் ஆட்சி அமைப்பது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பது சரியாக இருக்கும்.
தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது குறித்து உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா?
தேர்தலில் மோடி தோல்வியடையப் போகிறார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. மக்களின் முடிவு தெளிவாகத் தெரிந்தபிறகு, அதனை மதித்து நடப்பதுதான் சரியாக இருக்கும். மக்களின் முடிவு என்ன என்பது தெளிவாக்கப்படட்டும். அதற்குப் பிறகு உங்களது கேள்விகள் குறித்து ஆலோசனை செய்வோம்.
வாக்குக் கணிப்புகள் வெளிவந்திருக்கின்றன...
வாக்குக் கணிப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது. மக்களின் விருப்பம் எது என்பதைத் தெரிந்து கொள்வதே சரியானது. மக்கள் யாரைத் தேர்வு செய்துள்ளனர் என்பது மே 23-ஆம் தேதி தெரிந்துவிடும். அந்த முடிவின்படி செயல்படுவோம்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைவருக்கும் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் (நியாய்) நீங்கள் விரும்பிய அளவில் மக்களைச் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறதே?
நான் அப்படி நினைக்கவில்லை. எனக்கு அப்படி எந்த தகவலும் வரவில்லை. உண்மையில், இந்தியாவில் இப்போது இரு கருத்துகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. ஒன்று, "காவலரே திருடர்'; மற்றொன்று "நியாய்'. தேசத்தின் காவலர் என்று கூறிக்கொள்பவரே திருடராக இருப்பதை அனைவரும் அறிந்துவிட்டதால், நாங்கள் பெரிய அளவில் "நியாய்' திட்டத்தை பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. பிரதமர் மோடி ரூ.5.5 லட்சம் கோடியை 15 தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி என்ற பெயரில் வழங்கினார். இதில் பலர் தலைமறைவாகிவிட்டனர். விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். இந்த அரசே ஊழலின் மொத்த உருவமாக உள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு என்பது இந்த அரசின் ஊழலின் சிறிய பகுதிதான். இன்னும் வெளிப்பட வேண்டியது அதிகமுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. அடித்தட்டு மக்களின் வாழ்க்கை இருளடைந்துவிட்டது. அவர்களின் நிலையை மேம்படுத்த நேரடியாக பணத்தை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவேதான் "நியாய்' திட்டத்தின் மூலம் மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தைச் செலுத்த இருக்கிறோம். ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கும் இந்தப் பணம், சிறு வணிகர்கள், சிறு, நடுத்தர தொழில்களில் இருப்பவர்களுக்கு வருவாயாகச் செல்லும்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறவும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தோல்வியடையவும் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மோசமான செயல்பாடுகள்தான் காரணம் என்று கூறப்பட்டது. நீங்கள் அமைக்கும் புதிய அரசிலும் அதே தவறுகள் தொடராது என்பது என்ன நிச்சயம்?
இது மிகவும் ஆழமான சிறந்த கேள்வி. இப்போது நாட்டில் உள்ள பொருளாதார கட்டமைப்பு முழுவதும் 1990-களில் ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் சிறந்த சிந்தனைகளில் இருந்து தோன்றி வளர்க்கப்பட்டது. இதில் சில சிக்கல்கள் இருந்தாலும், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சிறப்பாக இருந்தது. வாஜ்பாய் ஆட்சியிலும், மன்மோகன் சிங் ஆட்சியிலும்கூட அந்தப் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்தன. 2004 - 2009 காங்கிரஸ் ஆட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
அதற்குப் பிறகு என்ன ஆனது...?
2009-இல் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். அப்போதுதான், 1991-இல் தொடங்கிய பொருளாதார முறை சரியாக செயல்படவில்லை என்பதை உணரத் தொடங்கினோம். சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து மக்கள் நலப் பொருளாதாரமாக மாற்றும் முயற்சிதான் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். 2012-இல் பொருளாதாரத்தை மேம்படுத்த நாங்கள் சில திட்டங்களை அமல்படுத்தினோம். ஆனால், அவை நினைத்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதால் அவற்றைக் கைவிட்டோம்.
மோடியின் ஆட்சியிலும் அதே நடைமுறை தொடர்கிறதா?
பிரதமர் மோடி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தபோது, 2012-இல் நாங்கள் அமல்படுத்தி, சரிவராது என்று கைவிட்ட பொருளாதார முடிவுகளை மீண்டும் கையில் எடுத்தார். இந்தியாவுக்கு ஒத்துவராத கொள்கைகளை அமல்படுத்தி, கடந்த 5 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார நிலையை சீரழித்துவிட்டார். 2012-ஆம் ஆண்டு மன்மோகன் ஆட்சியில் நாங்கள் கண்ட சில தோல்விகளை, பிரதமர் மோடி மீண்டும் 5 ஆண்டுகளாக அமல்படுத்தி அதே தோல்வியிடத்தில் நின்று கொண்டிருக்கிறார். 
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் உங்களுடைய பொருளாதாரக் கொள்கை முற்றிலும் மாறுபடும் என்கிறீர்களா?
நாட்டுக்குத் தேவையான சிறந்த பொருளாதாரக் கொள்கையை எங்கள் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளோம். மக்களின் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்வது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மீண்டும் புதிய வடிவில் அமல்படுத்துவது எங்கள் கொள்கையாக உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உத்வேகம் அளிக்கும் கொள்கையை நாங்கள் அமல்படுத்துவோம். இதன் மூலம் நமது நாடு உற்பத்தித் துறையில் சீனாவின் போட்டியை சமாளிக்க முடியும். நாட்டின் வேளாண்மைத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் திட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம். நாட்டுக்கு இரண்டாவது பசுமைப் புரட்சிக்கான தேவை உள்ளது. இதனை தெளிவாக திட்டமிட்டு அமல்படுத்துவோம். உணவுப் பதப்படுத்துதல், வேளாண்மைத் துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற வேளாண்மைத் துறை சார்ந்த தொழில்களில் கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறோம்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் இவை குறித்துக் கூறப்பட்டுள்ளவே?
பிரதமர் மோடிக்கு கடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைத்தது. ராஜீவ் காந்திக்குப் பிறகு வேறு எந்த இந்தியப் பிரதமருக்கும் இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததில்லை. தனக்கு கிடைத்த வாய்ப்பை ராஜீவ் காந்தி சிறப்பாக பயன்படுத்தி நாட்டில் தொலைத் தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். பொருளாதார மேம்பாட்டுக்கான அடிக்கல்லை நாட்டினார். எதிர்காலத்தில் கணினி மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்பதை கணித்து அத்துறைக்கான வாய்ப்பு வசதிகளை உருவாக்கினார். அதற்கு நேர்மாறாக, மோடி தனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பை வீணாக்கிவிட்டார். நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்துவிட்டார். இதற்கு அவரது ஆணவப்போக்கும், பிறரது கருத்துகளையும், யோசனைகளையும் ஏற்கக் கூடாது என்ற மனோபாவமும்தான் காரணம். 
நரேந்திர மோடியின் ஆட்சியிலும் பல வளர்ச்சிப் பணிகளும் பொருளாதார முன்னேற்றங்களும் நடந்திருக்கின்றனவே. அவர் என்ன செய்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?
அவர் பொருளாதார விஷயங்களை அமல்படுத்தும் முன் மன்மோகன் சிங் போன்ற வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்டிருக்க வேண்டும். மாநில விஷயங்களை அணுகும்போது, மாநிலக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, அவர்களைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
இப்போது மோடிக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் உங்கள் கட்சியின் ஆட்சியில் பின்பற்றப்பட்டதா?
மோடியின் போக்கு எங்களுக்கு சிறந்த பாடம். மேலும் எங்கள் ஆட்சியில் யாரும் மோடியைப் போன்ற ஆணவப் போக்குடன் நடந்து கொள்ளவில்லை. நாங்கள் ஆட்சி அமைத்த பிறகு மக்கள் குரலுக்கு மதிப்பளிப்போம். எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்போம். ஏனெனில், இந்தியாவின் வளர்ச்சிக்கு இது தேவை. உலகின் மேம்பாட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பு இப்போது முக்கியமானது. அமெரிக்கா, சீனா போல இந்தியாவும் இப்போது சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவமும், அங்கீகாரமும் பெற்றுள்ளது. உலகையே நாம் வடிவமைக்கப் போகிறோம். எங்கள் ஆட்சியில் ஆணவப் போக்கு இருக்காது; பணிவு இருக்கும். கோபம் இருக்காது; அன்பு இருக்கும். 
கேரளத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து நீங்கள் அளித்துள்ள விளக்கம் மூலம், தென்மாநிலங்கள் மீது காங்கிரஸ் கூடுதல் எதிர்பார்ப்பு வைத்துள்ளது என்று தெரிகிறது. ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர் ராவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவீர்களா?
இந்தியாவில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மத்தியப் பகுதி என எங்கு சென்றாலும் இந்தியா எப்போதும் இந்தியாதான். நாகபுரியில் இருக்கும் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் இருந்து இந்தியா இயக்கப்படுகிறது என்ற எண்ணம் தென்னிந்தியாவில் உள்ளது. முக்கியமாக தமிழகத்துக்குச் சென்றபோது அந்த மாநில மக்களின் உணர்வுகள் எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அதனை மாற்ற வேண்டியது அவசியம். தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு என பல பகுதிகள் இருந்தாலும் இந்தியா, எப்போதும் ஒரே இந்தியாதான் என்ற எண்ணத்தை அவர்களுக்கு உருவாக்க வேண்டியது அவசியம். நமது குரல் தில்லிக்கு கேட்காது; நமது கருத்துக்கும், நலனுக்கும் மதிப்பு தர மாட்டார்கள் என்ற எண்ணம் இந்தியர்கள் யாருக்கும் இருக்கக் கூடாது. அதனால்தான் தென்னிந்தியாவில் போட்டியிடுவது என்கிற முடிவே எடுத்தேன்.
ஆட்சி-அதிகாரம் என்பது விஷம் போன்றது என்று ஒருமுறை கூறினீர்கள். இப்போதும் அதே கருத்தில்தான் உள்ளீர்களா?
நிச்சயமாக, அந்தக் கருத்தில் எவ்வித மாற்றமுமில்லை. ஆனால், நாம் ஆட்சி-அதிகாரத்தைக் கையாள வேண்டியுள்ளது. அதில் பணியாற்ற வேண்டியுள்ளது. நாம் கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தினால் ஆட்சி-அதிகாரம் என்ற விஷம் நம்மை அழித்துவிடும். உரிய விழிப்புணர்வுடன் நாம் அதனை அணுக வேண்டும்.
இது மோடிக்கும் பொருந்துமா?
நிச்சயமாக அவருக்கும் பொருந்தும். அவரைத் தோற்கடிக்கும் வரையில் நாங்கள் போராடுவோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர் ஆட்சி- அதிகாரத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்று சிலர் கூறுவதை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால், கொள்கை அளவில் மோடியை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. 
கொள்கை அளவில் மட்டும்தான் நீங்கள் மோடியை எதிர்க்கிறீர்களா?
உண்மையைச் சொல்லப்போனால், நரேந்திர மோடி இந்தியாவை சிறப்பாக வழிநடத்தினார் என்கிற நிலைமை ஏற்பட்டிருந்தால், மகிழ்ச்சி அடைந்திருப்பேன். கொள்கை ரீதியாக அவரை எதிர்த்திருப்போம், தேர்தலில் தோற்கடிக்கவும் செய்திருப்போம். ஆனால், பிரதமராக நரேந்திர மோடி சிறப்பாக செயல்பட்டார் என்று மக்கள் சொன்னால் நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். கொள்கை ரீதியாக எதிர்த்தாலும், மகிழ்ந்திருப்பேன். வாஜ்பாயின் சாதனைகளை மக்கள் கூறும்போது எனக்கு வேதனையோ, வெறுப்போ ஏற்படுவதில்லை. மகிழ்ச்சிதான் ஏற்படுகிறது. இந்தியாவுக்கு அவர்களால் வளர்ச்சி ஏற்படுமானால் எனக்கு மகிழ்ச்சிதான்.
காங்கிரஸ் மட்டுமல்லாமல் அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராகக் களமிறங்கி இருப்பதற்குக் காரணம் அதுதானா?
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டது, நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் மீது தாக்குதல் தொடுத்தது, ஆர்எஸ்எஸ் என்ற ஒற்றை அமைப்பு மூலம் இந்தியாவை கட்டுப்படுத்த நினைத்தது போன்ற மத்திய அரசின் செயல்பாடுகள்தான் நாங்கள் அவர்களை முழுவீச்சில் எதிர்க்க காரணம். மற்றபடி தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை. மேலும், அரசியல் ரீதியாகவும் நாட்டில் பிளவை ஏற்படுத்த பாஜக அரசு முனைப்பு காட்டியது. ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி-யை மோசமாக அமல்படுத்தியது ஆகியவை பொருளாதாரத்தை மிகவும் மோசமாக்கியது. தென் பகுதி மக்கள், தலித், சிறுபான்மையினர், பழங்குடியினரின் குரல்களுக்கு இந்த அரசு மதிப்பளிக்கவில்லை. விவசாயிகளும், நலிவடைந்த மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே, இது மோடி என்ற ஒற்றை மனிதரை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலன் சார்ந்ததே எங்கள் நோக்கம்.
ஹிந்துத்துவ எதிர்ப்புக் கொள்கையை கடைப்பிடிக்கும் நீங்கள், திடீரென்று ஹிந்து கோயில்களுக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறீர்கள். பூணூல் அணிந்துகொண்டு பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுகிறீர்கள். இவையெல்லாம் அரசியலுக்காகத்தானே?
யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அனைத்து கருத்துகளையும் நான் மதிக்கிறேன். நாட்டில் உள்ள கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள், தேவாலயங்கள் என எங்கு வேண்டுமானாலும் செல்ல எனக்கு உரிமை உண்டு. இதில் ஓரிடத்துக்கு நான் சென்றால், ஏன் ஒரு தரப்பை திருப்திப்படுத்த முயலுவதாக கருத வேண்டும்? இது தவறான கருத்து.
கடைசியாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பிரதமர் மோடியும், அவரது கட்சியினரும் கடந்த 5 ஆண்டுகளாக என்னை பலவாறு தவறாக விமர்சித்துள்ளனர். ஆனால் நான் அவர்களை ஒருமுறைகூட தரக்குறைவாக விமர்சித்ததில்லை. அவரது பெற்றோரையும், குடும்பத்தையும் நான் அவதூறாக பேசியதில்லை. பிரதமர் மீது எனக்கு எப்போதும் அன்பு உண்டு. தேர்தலுக்குப் பிறகும் அந்த அன்பு தொடரும். இந்தத் தேர்தலில் "அன்பு' வெல்லும். "வெறுப்பு' தோற்கும். இந்தியாவின் அடிப்படைப் பண்பான அன்பும் அரவணைப்பும் தேர்தல்களைக் கடந்து தொடரும். மக்களை வெறுப்பின் அடிப்படையில் பிரிக்க முற்படுவதும், துவேஷமும் வெற்றி பெறாது.          
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com