நேருவுக்கு கைகூடியது மோடிக்கும் கிடைக்குமா?

நேருவுக்கு கைகூடியது மோடிக்கும் கிடைக்குமா?

தேர்தல்களில் ஒரு கட்சியின் வெற்றியைத் தீர்மானிப்பது அதன் சொந்த பலம் மட்டுமே அல்ல. எதிர்க்கட்சிகளின் பலவீனமும்தான்.


தேர்தல்களில் ஒரு கட்சியின் வெற்றியைத் தீர்மானிப்பது அதன் சொந்த பலம் மட்டுமே அல்ல. எதிர்க்கட்சிகளின் பலவீனமும்தான். சொந்த பலத்தைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் எதிராளிகளை ஒன்று சேர விடாமல் தடுப்பதும் அவர்களின் பலவீனத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மேற்கொள்ளும் பிரசார உத்திகளுமே இந்தியா போன்ற பல கட்சிகள் உள்ள நாடுகளில் வெற்றிக்கு காரணமாக இருக்கின்றன.

மகாத்மா காந்தி, காங்கிரஸில் நேருவுக்கு நிகரான தலைவராக இருந்த சர்தார் வல்லபபாய் படேல் போன்ற பெரும் தலைவர்களின் மறைவு போன்றவற்றுடன், பல்வேறு மாநிலங்களில் சுயாட்சி கோஷங்கள், உள்கட்சி மோதல்கள் என பல்வேறு பிரச்னைகளுக்கு இடையேதான் நாட்டின் முதல் மக்களவைத் தேர்தலை நடத்தும் முடிவை எடுத்திருந்தார் அன்றைய இடைக்கால அமைச்சரவையின் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு.

நாடு விடுதலை பெற்ற 4 ஆண்டுகளுக்குள் நடைபெற்ற முதல் தேர்தலுக்குள் காங்கிரஸை எதிர்க்க ஏராளமான எதிர்க் கட்சிகள் உருவாகியிருந்தன. காங்கிரஸில் இருந்து விலகிய ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோஷலிஸ கட்சி, ஜே.பி.கிருபளானியின் கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி போன்றவற்றுடன் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பாரதிய ஜன சங்கம், பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அம்பேத்கரின் பட்டியலினத்தவர் சம்மேளனம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இதைத் தவிர பல்வேறு மாநிலக் கட்சிகள் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருந்தன.

ஏழைகளுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகவும், தொழிலாளர்கள், விவசாயிகளின் நலன்களுக்குத் தாங்கள் போராடுவதாகவும் சோஷலிச கட்சியும், கிஸான் மஸ்தூர் பிரஜாவும் கூறின. 

அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்த பாரதிய ஜன சங்கமோ, 1947-இல் நடைபெற்ற பிரிவினையை ஏற்க மறுத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதே தனது கொள்கையாகக் கொண்டிருந்தது. இந்திய தேசத்தின் மீது அப்பழுக்கில்லாத பக்தி இல்லாதவர்களை காங்கிரஸ் கட்சி திருப்திப்படுத்த முயற்சிப்பதாக பாரதிய ஜன சங்கம் குற்றஞ்சாட்டியது.
சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரோ, பட்டியலினத்தவர்களை மேம்படுத்த காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. சுதந்திரம் பெற்றது இந்த மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனை அளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி எந்தவித நோக்கமும், கொள்கையும் இல்லாத கட்சியாக மாறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆயுதமேந்தி புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு தேர்தல் அரசியலில் இறங்கியிருந்தது. 
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என்பது, நிலச்சுவான்தார்கள், ஏகபோக உரிமையாளர்கள், தேசத் துரோகிகளின் ஆட்சி என்றும், நீண்டகால துயரத்தால் வருந்திக் களைத்த மக்களுக்கு நாங்களே மாற்று என்றும் கூறியது. இவர்களைத் தவிர அகாலி தளம், ஜார்க்கண்ட் கட்சி, ஹிந்து மகாசபா, முஸ்லிம் லீக், ராம ராஜ்ய பரிஷத் உள்ளிட்ட ஏராளமான பிராந்திய கட்சிகளும் காங்கிரஸை எதிர்த்தன.

இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது தீய சக்திகள் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு கேட்டையும் அழிவையுமே கொண்டு வருவார்கள் என்று முழங்கிய நேரு, மதவாதிகளே எனது முதல் எதிரிகள் என்றார். சோஷலிஸ்டுகள் அமெரிக்காவின் டாலர்களைப் பெற்று வருவதாகக் குற்றஞ்சாட்டிய நேரு, இந்தியாவின் எதிர்பார்ப்புகளை தெளிவாகவும், ஆணித்தரமாகவும் தனது பிரசாரங்களில் எடுத்துரைத்தார். 

எதிரணியினர் பிரிந்து கிடந்ததால் அந்த எதிர்ப்பு காங்கிரஸுக்கு கிடைக்கும் வாக்குகளைப் பெரிய அளவில் பாதிக்காது என்று நேரு உணர்ந்திருந்தார். அவர் கணித்ததைப் போலவே காங்கிரஸ் வென்றது. நேரு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். அதுமட்டுமல்ல, அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2 தேர்தல்களிலும் அவரே வென்றார். நேருவை பல முனைகளிலும் இருந்து எதிர்த்த எதிர்க் கட்சிகள் தங்களுக்குள் ஒன்றிணையாத காரணத்தால் பெரிய வெற்றியை அவர்களால் பெற முடியாமல் போனது. இந்திய கம்யூனிஸ்ட் (16), சோஷலிஸ கட்சி (12) ஆகியவற்றுக்கு மட்டுமே இரட்டை இலக்கங்களில் எம்.பி.க்கள் கிடைத்தனர். இந்தத் தேர்தல் வெற்றி நேருவின் தனிப்பட்ட செல்வாக்குக்கு கிடைத்த வெற்றி என்றே வரலாற்று அறிஞர்களால் புகழப்படுகிறது.

ஏறக்குறைய அதேபோன்ற அரசியல் சூழலில்தான் இன்றைய தேர்தலை எதிர்கொள்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. வளர்ச்சி, ஊழல் ஒழிப்பை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த பாஜகவுக்கு நாட்டின் பல்வேறு மாநில சட்டப் பேரவைகளும் கைவசமாகின. அதேநேரம், மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகள் பாஜக மீதான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் மேலும் வீரியமாக்கியுள்ளன.

பெரும்பான்மைக்குப் போராட வேண்டியிருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தாலும், பலமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இல்லாமல் இருப்பதையும், எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாதிருப்பதையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் மோடி. கூட்டணி என்ற அஸ்திவாரத்தை எதிர்க்கட்சிகள் எடுக்கக் கூடும் என்பதால்தான் அந்த விஷயத்திலும் போதிய கவனம் செலுத்தினார் மோடி.

அதனால்தான், தெலுங்கு தேசம், கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி போன்ற சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், அதை ஈடுகட்ட அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், அஸ்ஸாம் கண பரிஷத் போன்ற பலமான சில கட்சிகளை சேர்த்துக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு வரை பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ராகுல் காந்தி தலைமையில் திரள வேண்டும் என்று கூறி வந்த சிவசேனையைத் தக்க வைத்திருப்பதும் உத்திகளில் ஒன்றே.

அசுர பலத்துடன் நாட்டின் மிகப் பெரிய கட்சியாக உருவாகியிருக்கும் பாஜகவை எதிர்க்க மாநிலக் கட்சிகளின் தயவு தேவை என்பதை காங்கிரஸும் உணர்ந்தே இருக்கிறது. ஆனால், திமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் வெற்றி கண்டிருந்தாலும் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கட்சிகளான சமாஜவாதி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைத் தன்னுடன் சேர்ப்பதில் காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை.

ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்கத் தயங்குவதுடன் தானே பிரதமராக வர வேண்டும் என்ற கனவுகளுடன் காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்யும் மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், பாஜகவும் வேண்டாம் காங்கிரஸும் வேண்டாம், மாநிலக் கட்சிகள் அடங்கிய மூன்றாவது அணிதான் நல்லது என்று எண்ணும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருக்கும் இடதுசாரிகள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் என எதிராளிகள் பிரிந்து கிடக்கின்றனர். நேருவுக்கு கைகூடிய வெற்றி மோடிக்கும் கிடைக்குமா, வரலாறு திரும்புமா? 
பதிலளிக்கும் மே 23.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com