செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கதை!

DIN | Published: 02nd May 2019 01:35 AM

இதுவரை நான்கு மக்களவைத் தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நாட்டின் அனைத்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் இவை பயன்படுத்தப்பட்டுள்ளன.  ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையை விரைவுபடுத்த இந்தத் தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

மக்களவைத் தேர்தலோ, சட்டப் பேரவைத் தேர்தல்களோ நடைபெறும் போதெல்லாம் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள், வேட்பாளர்களின் தகுதிகள் போன்றவை கேள்விக்கு உள்ளாவதைப் போலவே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. முக்கியமாக தேர்தல்களில் தோல்வியுறும் கட்சிகள், வாக்கு இயந்திரங்களில் ஏற்படும் தில்லுமுல்லுகள்தான் தோல்விக்குக் காரணம் என்று குற்றம்சாட்டுகின்றன. இதுவரை நான்கு மக்களவைத் தேர்தல்களிலும், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வாக்கு இயந்திரங்கள் பயன்பட்டு வந்தபோதிலும் இத்தகைய பேச்சுக்கள் இன்றும் தொடர்ந்து எழுகின்றன.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியாவில் வாக்குச் சீட்டு வாக்குப் பெட்டி முறையின் மூலம் நடைபெற்று வந்த தேர்தல்களில் பல்வேறு பிரச்னைகளும், சிக்கல்களும் இருந்து வந்தன. பலம் பொருந்திய வேட்பாளர் ஒருவர் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி, எல்லா வாக்குச் சீட்டுகளையும் தனக்கு சாதகமாகப் போடுவது சில இடங்களில் காணப்பட்டது.  வாக்குப் பெட்டியையே மாற்றி வைத்து தில்லுமுல்லுகள் நடைபெற்றதும் உண்டு. வாக்காளரை சரியாக, உறுதியாக அடையாளம் காட்டும் நடைமுறையும் அக்காலத்தில் கிடையாது.
ஒவ்வொரு பொதுத் தேர்தலும் நடந்து முடியும் போது தேர்தல் ஆணையம் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் பெருமூச்சு விடும். தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியிடப்படும் வரை பதற்றம் நீடிக்கும்.
இதையெல்லாம் முடிவுக்குக் கொண்டு வரவே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 
வாக்கு இயந்திரத்தை வர்த்தக ரீதியாக வடிவமைத்தது, மும்பை ஐஐடி தொழிலக வடிவமைப்புத் துறையினர்தான். பிறகு 1989இல் வாக்கு இயந்திரங்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்திய மின்னணு கழகம் ஆகியவற்றுடன் தேர்தல் ஆணையம் தயாரிக்கத் தொடங்கியது.
மறைந்த தமிழ் எழுத்தாளர் சுஜாதா, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த காலத்தில், அவரது மேற்பார்வையில் வாக்கு இயந்திரங்களின் உருவாக்கம் தொடங்கியது. நாட்டின் ஆறு முக்கிய நகரங்களில் நடைபெற்ற அரசு கண்காட்சிகளில் பொதுமக்களின் முன்னிலையில், இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்முறையை விளக்கிப் பல நிகழ்ச்சிகளை அவர் நடத்தினார் .
கேரளத்தின் வடக்கு பறவூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு கடந்த 1982இல் நடைபெற்ற  இடைத்தேர்தலின்போதுதான் மின்னணு வாக்கு இயந்திரங்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. 
அதிலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குச் சாவடிகளில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்கள் மற்றும் தில்லி யூனியன் பிரதேசத்தில் சில தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை முறையில் பயன்படுத்தப்பட்டன.
சட்டப் பேரவைத் தேர்தல்களைப் பொருத்தவரையில், முதன் முதலில் கோவா பேரவைக்கு 2003இல் நடைபெற்ற தேர்தலில்தான் மின்னணு வாக்கு இயந்திரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன. அதையடுத்து, 2004இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பற்றிய சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் அப்போது முதலே எழுப்பப்பட்டன. இருந்தபோதிலும், ஐயப்பாடுகளை மீறி, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் பெரும் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்ட பாஜக, 138 தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியடைந்தது.
அதைத் தொடர்ந்து வாக்கு இயந்திரங்கள் பற்றிய தங்களது சந்தேகங்களை வலுவாக எழுப்பியது பாஜக. அதற்கு அடுத்தபடியாக, 2009 மக்களவைத் தேர்தலிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அப்போது ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, 2010 பிப்ரவரியில் மின்னணு வாக்கு இயந்திரங்களின் தில்லுமுல்லுகள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கை சென்னையில் நடத்தினார். 
அதையடுத்து, யாருக்கு வாக்களித்தோம் என்பதை சீட்டு மூலம் வாக்காளர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி,  2011ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், வாக்களித்த வேட்பாளரின் சின்னத்துடன் கூடிய உறுதிச் சீட்டை வழங்கலாம் என்று  யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் சீட்டை வழங்கக் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி 2012 ஜனவரியில் ரிட் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எந்த உத்தரவையும் வெளியிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
 எனினும், இதுதொடர்பாக நிபுணர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் தேர்தல் ஆணையம் விரிவாக ஆலோசனை நடத்த வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 
இதனிடையே, யாருக்கு வாக்களித்தோம் என்ற உறுதிச் சீட்டுகள் வழங்குவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, மும்பை ஐஐடியின் முன்னாள் இயக்குநரான பேராசிரியர் பி.வி.இந்திரேசன் தலைமையிலான நிபுணர் குழுவை 2010 அக்டோபரில் தேர்தல் ஆணையம் அமைத்தது. 
அந்தக் குழுவின் பரிந்துரைப்படி  லடாக், திருவனந்தபுரம், மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி, கிழக்கு தில்லி, ராஜஸ்தானில் ஜெய்சால்மர் ஆகிய தொகுதிகளில் பரிசோதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, வாக்களித்த வேட்பாளரின் சின்னத்தை, வாக்கு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள கருவியின் கண்ணாடி வாயிலாக வாக்காளர்கள் காணும் விதமாகவும், இந்த ஒப்புகைச் சீட்டுகள் தேர்தல் ஆணையத்துக்குக் கிடைக்கும் விதமாகவும் கள ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அந்த ஒப்புகை  உறுதிச்சீட்டுகளின் பிரதிகளுடன் வேட்பாளர்கள் பெறும் வாக்குகள் சரிபார்க்கப்படும் என்றும் உறுதியளித்தது.  அதையடுத்து, இந்தப் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்றும், 2019 மக்களவைத் தேர்தலில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
முதல் கட்டமாக, 2013 செப்டம்பரில் நாகாலாந்தின் நோக்சென் பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் அறியும் ஒப்புகை இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டது.
அதையடுத்து, 2014 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெள தொகுதி, குஜராத்தின் காந்திநகர், கர்நாடக மாநிலத்தின் தெற்கு பெங்களூரு தொகுதி, மத்திய சென்னை, ஜாதவ்பூர், ராய்ப்பூர், பாட்னா சாகிப், மிúஸாரம் ஆகிய 8 தொகுதிகளில் சோதனை முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்து கொண்டனர். 
அதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் கண்ணாடித் திரை வாயிலாக உறுதி செய்து வருகின்றனர். எனினும், வாக்கு இயந்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறைந்தபாடில்லை. அதிலும், 2014 முதல் பாஜக பெற்று வரும் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு எதிர்ப்புக் குரல்கள் மிக உரக்க ஒலிக்கின்றன.
குறிப்பாக, அமெரிக்காவில் தற்போது அடைக்கலம் புகுந்துள்ள இந்திய ஹேக்கரான சயீத் சுஜா என்பவர் காணொலி மூலம் அளித்த பேட்டியில், 2014 மக்களவைத் தேர்தலில் வாக்கு இயந்திரங்களில் ஏராளமான மோசடிகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டினார். மேலும், வாக்கு இயந்திரங்களை தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்திய மின்னணு கழகத்தில் பணியாற்றியதாகவும் கூறிக்கொண்டார். இது தொடர்பாக, தில்லி காவல்துறையில் தேர்தல் ஆணையம் புகார் அளித்தது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் சதி உள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது. அதே நேரத்தில், அந்தப் பெயரில் தங்கள் நிறுவனத்தில் யாரும் பணியாற்றவில்லை என்று இந்திய மின்னணு கழகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது. சயீத் சுஜாவின் பேட்டியை வெளியிட்ட இந்திய பத்திரிகையாளர் கூட்டமைப்பு, சுஜாவின் உள்நோக்கத்தை தெரிந்து கொள்ளாமல் பேட்டியை வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்தது.
இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்தது; காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தெலங்கானாவில் கே. சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
இதன் பிறகும், தற்போதைய மக்களவைத் தேர்தலில் மோசடிகள் நடைபெறக் கூடும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 
இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சில மாதங்களுக்கு முன் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர். தற்போதைய மக்களவைத் தேர்தலில் ஏப்.11இல் நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவின்போது 4,800க்கும் மேற்பட்ட வாக்கு இயந்திரங்கள் பழுதடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சிகள், மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. 
அதே நேரத்தில், வாக்கு இயந்திரங்களில் இருந்த குளறுபடிகளை ஏற்கெனவே சரிசெய்துவிட்டதாகவும், தற்போது தவறுகள் ஏதேனும் இருந்தால் எதிர்க்கட்சிகள் நிரூபிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் பலமுறை அழைத்த பிறகும், இதுவரை அந்த அழைப்பை எந்த எதிர்க்கட்சியும் ஏற்றதாகத் தெரியவில்லை.
கிட்டத்தட்ட நூறு கோடி வாக்காளர்கள் கலந்து கொள்ளும் இந்திய மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும். ஆயினும், மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் தற்போதைக்கு முடிவுக்கு வரும் என தோன்றவில்லை.
 சந்திர. பிரவீண்குமார்

விவரங்கள் விரல் நுனியில்!
தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்களை இடம் பெறச் செய்ய முடியும். அதிகபட்சமாக, ஒரு வாக்குச்சாவடியில் நான்கு இயந்திரங்களை வைத்து நோட்டா உள்பட 64 வேட்பாளர்களின் பெயர்களைப் பதிக்க முடியும்.
ஒவ்வொரு இயந்திரவாரியாக, வாக்குச் சாவடி வாரியாக, தொகுதிவாரியாக  என பல முறைகளில் எந்த ஒரு வேட்பாளரும் எத்தனை வாக்குகள் பெற்றார் என்னும் விவரங்களை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் அறிய முடியும். எனினும், சில வகை புள்ளிவிவரங்களை வெளியிடுவது, உசிதமல்ல என்பதால் அதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

 விலை ரூ.17,000
மின்னணு வாக்கு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 1989-90 காலகட்டத்தில் ஓர் இயந்திரத்தின் விலை ரூ.5,500ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போதைய இயந்திரத்தின் விலை ரூ.17,000ஆக உள்ளது. 
ஒரு இயந்திரத்தின் காலம் 15 ஆண்டுகளாகும். வாக்கு இயந்திரத்தின் விலை அதிகமாக இருந்தபோதிலும், போக்குவரத்து செலவுகள், பாதுகாப்புப் பணிகள், வாக்குச்சீட்டு காகிதத்துக்கான செலவு உள்ளிட்டவை வெகுவாகக் குறைகின்றன.
வாக்குச்சீட்டு முறை இருந்த காலத்தில், ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின்போதும் தோராயமாக 10,000 டன் காகிதம் பயன்படுத்தப்
பட்டதாம்.

பயன்படுத்தும் நாடுகள்
உலகில் ஜனநாயக ரீதியாகத் தேர்தல்கள் நடைபெறும் 120 நாடுகளில் 31 நாடுகளில் மட்டுமே மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன அல்லது சோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில், அதிக அளவிலான வாக்காளர்களுக்கு (சுமார் 100 கோடி வாக்காளர்கள்) வாக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவது, இந்தியாவில்தான்.
 மின்னணு வாக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தும் பிற நாடுகள்: 
பெல்ஜியம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரேஸில், கனடா, எஸ்டோனியா (மின்னணு வாக்கு இயந்திரத்தை சட்ட ரீதியாக அமல்படுத்திய முதல் நாடு), பின்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, கஜகஸ்தான், லிதுவேனியா, நார்வே, பிலிப்பின்ஸ், ருமேனியா, எகிப்து, வெனிசூலா, ஜோர்டான், மாலத்தீவு.
இவை தவிர, நேபாளம், பூடான், நமீபியா, கென்யா, பிஜி ஆகிய நாடுகள், நம் நாட்டின் பாரத் எலக்ட்ரானிஸ் நிறுவனத்திடம் இருந்து மின்னணு வாக்கு இயந்திரங்களை வாங்குகின்றன. ஜோர்டான், மாலத்தீவு, எகிப்து ஆகிய நாடுகளுக்கு வாக்கு இயந்திரம் தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை இந்தியா அளித்து வருகிறது.
 இந்தியா உள்பட 4 நாடுகளில் நாடு முழுவதும் மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்தப்படுகின்றன. 11 நாடுகளில் சில இடங்களிலும், சிறிய தேர்தல்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. 5 நாடுகள் சோதனை முறையில் இயக்குகின்றன. 11 நாடுகளில் சோதனை செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மின்னணு வாக்கு இயந்திரங்களின் பயன்பாடு சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க விருப்பம்: சூர்யா
மக்களவைத் தேர்தலில் வென்று எம்.பி. ஆன கருணாஸ் பட கதாநாயகி!
ஒடிஸாவில் ஆட்சியமைக்க நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் அழைப்பு
சிக்கிமில் புதிய அரசு இன்று பதவியேற்பு
குடியரசுத் தலைவரிடம் புதிய எம்.பி.க்கள் பட்டியல் சமர்ப்பிப்பு