செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

யாதவர்களின் கோட்டை மதேபுரா

By - மணிகண்டன் தியாகராஜன்| DIN | Published: 29th April 2019 03:42 AM

சௌதரி ராஜேந்திர யாதவ், சரத் யாதவ், லாலு பிரசாத், பப்பு யாதவ் என யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கோட்டையாக விளங்கி வருகிறது பிகார் மாநிலத்தில் உள்ள மதேபுரா.

சுபௌல், அராரியா, ககாரியா ஜன்ஜர்பூர் ஆகிய தொகுதிகளுடன் சேர்த்து இத்தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. 

மதேபுரா தொகுதியில் லோக் தாந்திரிக் ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் களம் கண்டார். எனினும் இவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்தத் தொகுதிக்கு கடந்த 23-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 59.12 சதவீத வாக்குகள் பதிவாகின. 

இதுவரை, மதேபுரா தொகுதியில் 4 முறை (1991, 1996, 1999, 2009) போட்டியிட்டு வெற்றி பெற்றார் சரத் யாதவ்.

மதேபுரா தொகுதியில் 1998, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட சரத் யாதவை ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் தோற்கடித்தார். 2014 மக்களவைத் தேர்தலில் மற்றொரு ராஷ்ட்ரீய ஜனதா தள வேட்பாளரிடம் வீழ்ந்தார் சரத் யாதவ்.

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் மக்களவைத் தொகுதியில் 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.பி.யானார் சரத் யாதவ். அதே தொகுதியில் 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வென்றார். பின்னர், 1989-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள பதாயூன் தொகுதியில் வென்றார் சரத் யாதவ்.

மாநிலங்களவை உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார். முதல்முறையாக மாநிலங்களவைக்கு 1986-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இரண்டு முறையும் அவர், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவரை ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) வெளியேற்றியது. மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் தகுதியிழக்கச் செய்தது ஜேடியு.

2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் மதேபுரா தொகுதியில் போட்டியிடுகிறார் சரத் யாதவ். அதுவும், ஒரு காலத்தில் தன்னை வீழ்த்திய லாலு பிரசாத் கட்சியின் சின்னத்திலேயே நிற்கிறார் என்பது வியப்பூட்டும் மற்றொரு செய்தி. இவரை எதிர்த்து, ஜன அதிகார் லோக் தாந்திரிக் கட்சியின் தலைவர் பப்பு யாதவ் என்றழைக்கப்படும் ராஜேஷ் ரஞ்சன் போட்டியிட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தினேஷ் சந்திர யாதவ் களத்தில் உள்ளார்.

மதேபுரா தொகுதியில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்தத் தொகுதியில் தங்கள் கூட்டணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று நிதீஷ் கருதுகிறார். இது அவருக்கு கௌரவ பிரச்னையாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

வெள்ள பாதிப்பு, விவசாயம், சாலை வசதிகள் இல்லாமை ஆகியவை இந்தத் தொகுதியில் பிரதான பிரச்னைகளாக உள்ளன. இவையெல்லாம் இத்தேர்தலில் பிரதிபலிக்கும் என்று தெரிகிறது.  பிகாரில் பல்வேறு தொகுதிகளில் சுயேச்சையாகவும், சமாஜவாதி, லோக் ஜனதா கட்சி, ஆர்ஜேடி கட்சி சார்பிலும் பப்பு யாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

2014 தேர்தலில் ஆர்ஜேடி சார்பில் போட்டியிட்ட பப்பு யாதவ், சரத் யாதவை இதே தொகுதியில் வீழ்த்தினார். முன்னாள் எம்.பி.யான தினேஷ் சந்திர யாதவுக்கு கடுமையான போட்டியாக பப்பு யாதவும், சரத் யாதவும் இருப்பார்கள்.

ஒரே சமூகத்தைச் சேர்ந்த மக்களும், குர்மி, எஸ்சி ஜாதி வாக்குகளும் இந்தத் தொகுதியில் முக்கியப் பங்காற்றும் என்று கூறப்படுகிறது. மதேபுரா தொகுதியில் எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது யாதவ சமூகத்தைச் சேர்ந்தவராகதான் இருக்கப் போகிறார் என்பது மட்டும் உண்மை! 

மதேபுரா தொகுதியில் இதுவரை வென்றவர்கள்


வெற்றி பெற்ற வேட்பாளர்    ஆண்டு    கட்சி
பி.பி.மண்டல்     1967    சம்யுக்த /  சோஷலிஸ்ட் கட்சி
பி.பி. மண்டல்     1968   (இடைத்தேர்தல்)    சுயேச்சை
சௌதரி ராஜேந்திர யாதவ்    1971             காங்கிரஸ்
பி.பி.மண்டல்    1977    பாரதிய லோக் தளம்
சௌதரி ராஜேந்திர யாதவ்    1980    காங்கிரஸ்
சௌதரி ராஜேந்திர யாதவ்    1984    காங்கிரஸ்
சௌதரி ராஜேந்திர யாதவ்    1989    காங்கிரஸ்
சரத் யாதவ்    1991    ஜனதா தளம்
சரத் யாதவ்    1996    ஜனதா தளம்
லாலு பிரசாத் யாதவ்    1998    ஆர்ஜேடி 
சரத் யாதவ்    1999    ஐக்கிய ஜனதா தளம்
லாலு பிரசாத் யாதவ்    2004     ஆர்ஜேடி
பப்பு யாதவ்    (இடைத்தேர்தல்)    ஆர்ஜேடி    
சரத் யாதவ்    2009    ஐக்கிய ஜனதா தளம்
பப்பு யாதவ்    2014    ஆர்ஜேடி
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க விருப்பம்: சூர்யா
மக்களவைத் தேர்தலில் வென்று எம்.பி. ஆன கருணாஸ் பட கதாநாயகி!
ஒடிஸாவில் ஆட்சியமைக்க நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் அழைப்பு
சிக்கிமில் புதிய அரசு இன்று பதவியேற்பு
குடியரசுத் தலைவரிடம் புதிய எம்.பி.க்கள் பட்டியல் சமர்ப்பிப்பு