திங்கள்கிழமை 22 ஜூலை 2019

தலைநகரில் மும்முனைப் போட்டி!

By - வே. சுந்தரேஸ்வரன்| DIN | Published: 23rd April 2019 02:16 AM


நீண்ட இழுபறிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மக்களவைத் தேர்தலில் தலைநகர் தில்லியில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய மூன்று  கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.  காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் தில்லி மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஹரியாணா,  பஞ்சாப் ஆகியவற்றிலும் தங்களது  செல்வாக்கை அதிகரித்துவிடலாம் என நினைத்திருந்த  ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலின் கணக்கு தப்பாகிப் போனது.

தில்லியில் மே 12-இல் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுநடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரும், முதல்வருமான  கேஜரிவால் விரும்பினார். இதைத் தொடர்ந்து, சில மாதங்களாக இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. ஆனால், பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஒரு புறம் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை ஆம் ஆத்மி மேற்கொண்ட போதிலும், மறுபுறம் தலைநகரில் பகுதிவாரியாக பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்தது.  அதேபோன்று, தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித், தில்லியில் அமைந்துள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளின் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனையும் நடத்தி வந்தார். 

ஆம் ஆத்மியின் ஆசை

கடந்த காலங்களில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் அரசியலில் எதிர்எதிர் துருவங்களில் செயல்பட்டு வந்தன. 2014 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி 432 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், தில்லியின் அண்டை மாநிலமான பஞ்சாப்பில் மட்டுமே நான்கு இடங்களில் அக்கட்சி வெற்றிபெற முடிந்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் 2.05 சதவீதம் மட்டுமே அக்கட்சியால் பெற முடிந்தது. மேலும், கோவா,  ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் ஆம் ஆத்மியால் எதிர்பார்த்த வெற்றியை ஈட்ட முடியவில்லை. கூட்டணி பலம் இல்லாமல் போட்டியிட்டதும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது. 


இதனால், இந்த முறை ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் பேரன் துஷ்யந்த் சௌதாலா தலைமையிலான ஜன்நாயக் ஜனதா கட்சியுடன் (ஜேஜேபி) ஆம் ஆத்மி  கூட்டணி அமைத்துள்ளது. மேலும்,  தில்லியில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியை ஹரியாணாவிலும் தொடர்ந்தால் தங்களுக்கு பலன் அளிக்கும் எனவும் நினைத்தது. இதன் காரணமாக காங்கிரஸுடன் அக்கட்சி தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆம் ஆத்மியின் தந்திரத்தை புரிந்து கொண்டதாலோ என்னவோ, காங்கிரஸ் தலைமை கடைசி வரை தில்லியில் மட்டுமே கூட்டணி என்பதில் பிடிவாதமாக இருந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஓரிடத்தைக் கூட பெற முடியாமல் போனதால், இந்த முறை கூட்டணி அமைப்பதன் மூலம் சில இடங்களைப் பெறலாம் எனக் கருதியதே இதற்குக் காரணம்.

இந்தச் சூழலில், கடந்த மக்களவைத் தேர்தலில் தில்லியில் 7 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியதால், இந்த முறை அதுபோன்ற நிலையை எதிர் கொள்ளக் கூடாது; சிதறும் சிறுபான்மையினர் வாக்குகளின் இடைவெளியை காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதன் மூலம் பெற்றுவிட வேண்டும் என்ற ஆசைக் கனவில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மிதந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற அளவில் தில்லியிலும் வெற்றி பெற்று,  ஹரியாணாவிலும் காங்கிரஸின் ஆதரவு வாக்குகளை  பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் ஆம் ஆத்மி ஆர்வத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தையை  மேற்கொண்டு வந்தது.

பாஜக அச்சம்

கடந்த மக்களவைத் தேர்தலில் இரு துருவங்களாக இருந்த ஆம் ஆத்மியும், காங்கிரஸும் ஒருவேளை தேர்தல் கூட்டணி அமைத்தால் எப்படி சமாளிப்பது என்ற அச்சத்தில் இருந்த பாஜக, இரு கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்து வந்தது. மேலும், இக்கூட்டணிப் பேச்சுவார்த்தையை தில்லி பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தும் வந்தனர்.  2014 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி,  காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிட்டதால் சிறுபான்மையினரின் வாக்குகள் பிரிந்து சென்றது. இது தங்களுக்கு சாதகமாக அமைந்ததால் ஏழு தொகுதிகளிலும் பாஜக கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும், அத்தேர்தலில் பிரதமர் மோடியின் பிரசார அலையும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. இந்நிலையில்,  தற்போதைய மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால், முதலுக்கே மோசமாகிவிடும் என்று பாஜக கருதியது.

ஆம் ஆத்மி கட்சிக்கு தில்லியில் ஏற்கெனவே குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி பலம் உள்ளது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது அக்கட்சி அளித்த  வாக்குறுதிகளான இலவச குடிநீர்,  சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் போன்வற்றை அக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றியது. இந்த இரு விஷயங்களும் அக்கட்சிக்கு  மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுத் தந்துள்ளது எனலாம். மொஹல்லா கிளினிக் திட்டமும் அக்கட்சியின் செல்வாக்கை உயர்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால்,  தன் பலத்தை நம்பாமல் அக்கட்சி கூட்டணி பலத்தை நம்பியதும்,  முன்பு முற்றிலும் காங்கிரஸை எதிர்த்த நிலையில், தற்போது அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், காங்கிரஸை மிகப் பெரிய ஊழல் கட்சி என்ற கடுமையாக விமர்சித்து வந்த அரவிந்த் கேஜரிவால், தற்போது மோடி- அமித் ஷா கூட்டணியை வீழ்த்த காங்கிரஸுடன் கூட்டணி என்று கூறியது அவரது அரசியல் சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்திவிட்டது.

மும்முனைப் போட்டி: 

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், தில்லியில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களை மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு திங்கள்கிழமை  வெளியிட்டுள்ளது.

இதனால், தலைநகரில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையேயான மும்முனைப் போட்டி உறுதியாகிவிட்டது. ஆம் ஆத்மியும், காங்கிரஸும் கூட்டணி சேர்ந்தால்  உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி போன்று பலமான கூட்டணியை எதிர்கொள்ள  நேரிடும் என நினைத்திருந்த நிலையில், தற்போது வெற்றிக்கான நம்பிக்கைக் கதவுகள் திறந்திருப்பதாக பாஜகவின்  தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கருதுகின்றனர்.
எனினும்,  கடந்த 2014-இல் இருந்த அலை தற்போது இருக்குமா என்பதைப் பார்த்தாக வேண்டும். தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் நான்கு ஆண்டு கால ஆட்சி,  மத்தியில் பாஜகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சி, காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் அரசியல் வியூகம், கட்சிகளின் பிரசார யுக்திகள்  போன்றவை தேர்தலில் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தேசிய தலைநகரைப் பொருத்த வரையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நிலவிய நிச்சயமற்ற நிலை அரசியல் கட்சிகளைப் போலவே வேறு ஒரு தரப்பையும் கொதி நிலையில் வைத்திருந்தது!

காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே நடைபெற்ற பல கட்டப் பேச்சுவார்த்தை, பல நிலைகளில் பேச்சுவார்த்தையும் கூட்டணி உண்டு - இல்லை என்று இழுபறியாக இருந்த நிலையும் நாடு தழுவிய அளவில் அரசியல் நோக்கர்களை முள்முனையில் நிறுத்தின என்றால் அது மிகையில்லை.
இப்போது மும்முனைப் போட்டி என்பது உறுதியானதால், கட்சித் தொண்டர்கள் தங்களது கடமைகளில் முழு முனைப்பாக இறங்குவார்கள் என்பது போலவே, அரசியல் நோக்கர்களும் முழு மூச்சுடன் தங்கள் கணிப்புகளைத் தொடங்கிவிடுவார்கள்!

காங்கிரஸ் தயக்கம்

அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பங்கெடுத்தபோது மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை அரவிந்த் கேஜரிவால் கடுமையாக விமர்சித்து வந்தார். அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய பிறகும் முதல்வர் ஷீலா தீட்சித் ஆட்சியையும்,  மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியையும் கேஜரிவால் பல போராட்டங்கள் மூலம் கடுமையாக எதிர்த்ததை காங்கிரஸ் கட்சி மறந்துவிடவில்லை. இதனால், ஆம் ஆத்மியுடன்  கூட்டணி வைப்பதற்கு  காங்கிரஸின் தில்லி தலைவர்கள் பலரும் தயக்கம் காட்டியதாகக் கூறப்பட்டது.

இருந்தபோதிலும், கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, தில்லியில் காங்கிரஸ் 3, ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் போட்டியிடும்  வகையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. ஆனால்,  தில்லியில் மட்டுமே கூட்டணி என்று காங்கிரஸும், ஹரியாணாவிலும்  கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மியும் பிடிவாதமாக இருந்து வந்ததால், கடைசியில் சீ இந்தப் பழம் புளிக்கும் என இரு கட்சிகளும் கூட்டணிக் கதவை மூடிவிட்டன.

தில்லியின் அண்டை மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயக்கம் காட்ட மற்றொரு காரணமும் உண்டு. ஏற்கெனவே ஹரியாணா, பஞ்சாப், கோவா போன்ற மாநிலங்களில் காங்கிரஸுக்கு  கணிசமான வாக்கு வங்கியும், செல்வாக்கும் உண்டு. 
தங்களது வாக்குகள் ஆம் ஆத்மிக்கு செல்லவதையும்,  ஆம் ஆத்மி அந்த மாநிலங்களில் வளர்ச்சி பெறுவதையும் காங்கிரஸ் விரும்பவில்லை. இதைக் கருத்தில் கொண்டுதான், தில்லியில் மட்டும் கூட்டணிக்குத் தயார் என்று காங்கிரஸ் தொடர்ந்து கூறி வந்ததாக அரசியல் நோக்கர்கள்  கருதுகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க விருப்பம்: சூர்யா
மக்களவைத் தேர்தலில் வென்று எம்.பி. ஆன கருணாஸ் பட கதாநாயகி!
ஒடிஸாவில் ஆட்சியமைக்க நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் அழைப்பு
சிக்கிமில் புதிய அரசு இன்று பதவியேற்பு
குடியரசுத் தலைவரிடம் புதிய எம்.பி.க்கள் பட்டியல் சமர்ப்பிப்பு