உள்ளாட்சித் தேர்தல் 2019

ஒரத்தநாடு: கஜா புயலின் போது சேவை செய்தவர் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு

26th Dec 2019 04:02 PM | வெ. பழனிவேல்

ADVERTISEMENT


ஒரத்தநாடு: கஜா புயல் தாக்கத்தின் போது சேவை உள்ளத்ததோடு  பணியாற்றியவர் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு. மேலும்  உள்ளாட்சி நிர்வாகிகளைப் போட்டியின்றித் தேர்வு செய்த கிராமத்தினர்.

தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாடு அருகே ஊர் வளர்ச்சியடைய வேண்டும், அதே நேரம் தேர்தலால் ஏற்படும் பகையும் வேண்டாம் என முடிவெடுத்து, உள்ளாட்சி நிர்வாகிகளை போட்டியின்றி கிராம மக்கள் ஒன்றிணைத்து தேர்ந்தெடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில், ஒரு ஊரில் ஏதேனும் ஒரு சில பதவிகளுக்கு வேண்டுமானால் போட்டியின்றி சிலர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். அதையும் தாண்டி, ஏலம், மிரட்டல் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதுபோல் எதுவும் இல்லாமலும்,  பல்வேறு கட்சிகள், ஜாதிகளைச் சேர்ந்தவர்களையும்,  தங்களது ஊரின் வளர்ச்சிக்காகவும், தேர்தலால் ஏற்படும் பகைகள் வேண்டாம் எனக் கருதியும், மக்கள் ஒன்று கூடி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கீழவன்னிப்பட்டு பஞ்சாயத்து தலைவராக தினகரன்  என்பவரையும், வார்டு உறுப்பினர்களாக வேதவள்ளி, கலாவதி, பாரதி, சுமித்ரா, மகாலிங்கம், கருப்பையன் ஆகியோரை போட்டியின்றி தேர்ந்தெடுத்துள்ளனர்.

இது குறித்து அவ்வூரைச் சேர்ந்த சந்திரகுமார் கூறியதாவது; எங்கள் பஞ்சாயத்தில் முதல் முறையாக தேர்தலில் நடேசன் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு நடந்த தேர்தலில் போட்டி ஏற்பட்டு, தேர்தல் பகை ஊரின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் பெரிய அளவிற்கு பாதித்தது. இது அனைவர் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முன் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்க எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது முயற்சி பலனளித்துள்ளது.

ADVERTISEMENT

கஜா புயலில் பெரும் பாதிப்புக்குள்ளான போது குடிக்க தண்ணீர் இன்றி தவித்த மக்களுக்கு ஜெனரேட்டர் மூலம் குடிநீர் அளித்த சேவை, மூடுகின்ற நிலையிலிருந்த அரசு தொடக்கப்பள்ளியை தத்து எடுத்து பல்வேறு வசதிகளை உருவாக்கி முன்மாதிரி பள்ளியாக செயல்படச் செய்த தினகரன் மற்றும் அவருடைய சகோதரர் ராமச்சந்திரனால், கிராமமே பயனடைந்து வருகிறது. இப்படி சேவை உள்ளம் கொண்டவரை தேர்ந்தெடுக்கலாம் என ஒத்த கருத்துடன் முடிவெடுத்து தேர்வு செய்துள்ளோம் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT