LIVE

தமிழக பட்ஜெட் 2022-23: அறிய வேண்டிய முக்கியம்சங்கள்

DIN

2022-23 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையின் முக்கியம்சங்கள்..

 

பட்ஜெட்டில் உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு நல்ல தகவல்



தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு வழங்கும் என்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

தற்போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டு, தமது மருத்துவக் கல்வியைத் தொடர இயலாமல் தாயகம் திரும்பியுள்ள நமது மாணவ மாணவியர் அனைவரும் தமது மருத்துவக்கல்வியை தொடருவதற்கான  நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாணவர்கள் நமது நாட்டிலோ, பிற வெளிநாடுகளிலோ மருத்துவக் கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகள் மத்திய அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைகளின் அடிப்படையில், அவர்களது எதிர்கால மருத்துவக்கல்விக்கான அனைத்து உதவிகளையும் இந்த அரசு வழங்கும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

நில அளவையர்களுக்கு ரோவர் கருவிகள்

அரசு நிலங்களில் நிலஅளவைப் பணிகள் துல்லியமாகவும் எளிதாகவும் மேற்கொள்ள, “தொடர்ந்து இயங்கும் தொடர்பு நிலையங்களின் அமைப்பு” வலுப்படுத்தப்படும்.

நவீன முறையில் நிலஅளவைப் பணிகளை மேற்கொள்ள நில அளவையர்களுக்கு“ரோவர்”  கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

பரவலான சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அரசு நிலங்களின் பயன்பாடு அமைவது அவசியம்.

அரசு நிலங்களின் குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், அரசு நிலங்களை நியாயமான, வெளிப்படையான முறையில் குத்தகைக்கு விடுவதற்கும்ஒரு விரிவான நிலக்குத்தகைக் கொள்கை வகுக்கப்படும்

இடைச் சங்க கால பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கிய கொற்கையில் ஆழ்கடலாய்வு மேற்கொள்வதற்கு உகந்த இடத்தினை கண்டறிவதற்கு இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகத்துடன் இணைந்து இந்த ஆண்டு முன்கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள், இரண்டு இடங்களில் கள ஆய்வு மற்றும் கொற்கையில் முன்கள ஆய்வுப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாநிலத் தொல்லியல் துறை கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளுடன் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய மூன்று இடங்கள் உட்பட ஏழு இடங்களில் நடப்பாண்டில் அகழாய்வுகளை மேற்கொள்கின்றது.

வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்துக்கு ரூ.200 கோடி இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.340.87 கோடி பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ.2531 கோடி மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.808.01 கோடி கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி

21 மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு

தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்திடவும், பகுத்தறிவைப் பரப்பிடவும், பெண்ணடிமைத்தனத்தைஒழித்திடவும் தம் கடைசி மூச்சு இருக்கும்வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார்.

அவரின் சிந்தனைகளும் எழுத்துக்களும் காலத்தை வென்று இன்றும் ஒளிர்கின்றன. தனித்துவமிக்க அவரது எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்துச் சென்று, அவரது முற்போக்குச் சிந்தனையால் அனைவரையும் பயனடையச் செய்வது இந்த அரசின் கடமையாகும்.இதனை நிறைவேற்றும் விதமாக, உரிய அறிஞர் குழுவின் பரிந்துரைகளின்படி, பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும். இப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்

KFW என்ற ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய நகரங்களில் பேருந்து சேவைகளை நவீனமயமாக்க 2,213 பிளஸ் 6 பேருந்துகளும் 500 மின் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படவுள்ளது. 

இதற்காக போக்குவரத்துத் துறைக்கு 5,375.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மகளிருக்கு இலவச பேருந்து திட்டம்: மானியமாக ரூ. 1,520 கோடி ஒதுக்கீடு

மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தினால் மகளிர் பயணிகள் 40% லிருந்து 61% ஆக உயர்ந்துள்ளது. இத்திட்டம் சமூக, பொருளாதார நிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதில் மகளிர் இலவச பேருந்து பயண மானியமாக ரூ. 1,520 கோடியும், மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண மானியமாக ரூ. 928 கோடியும் டீசல் மானியமாக ரூ. 1,300 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

சிங்காரச் சென்னை 2.0

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கார சென்னை திட்டம் 2.0 திட்டத்துக்கு ரூ.500 கோடி.
திறன் மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.1,875 கோடி.
நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,737 கோடி.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு  ரூ.3,700 கோடி.

ஈவேரா மணியம்மை அம்மாள் விதவை தாயின் மகள்களின் திருமண நிதியுதவி திட்டம், முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார்  நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டங்கள் எவ்வித மாற்றமும் இன்றி செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உதவித் தொகை

தமிழகத்தில், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு..

தன்னார்வத் தொண்டாக மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் உடற்பயிற்சி பயிற்றுநர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுகிறது. 

மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கு ரூ. 450 கோடி ஒதுக்கீடு. 

 அரசின் உதவி பெறாத, தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்

 ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி வகுப்புகள் என பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1, 300 கோடி செலவு செய்யப்படும்.

 அறிவியல், தொழில்நுட்பம், கலை, மருத்துவம் துறையில் மேம்பட,  பின்தங்கிய 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும். மேலும் 15 மாவட்டங்களில் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும், இதற்காக ரூ. 125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களால் செயல்படுத்தப்படுகிறது. இதனால் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

தங்க நகைக் கடன் தள்ளுபடிக்கு ரூ.1,000 கோடி

வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட தங்க நகைக் கடன் தள்ளுபடிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வட்டியில்லா பயிர்க் கடன் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்படும். விழுப்புரம் மற்றும் ராமநாதபுரத்தில் ரூ. 10 கோடியில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு சிறப்பு குழு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக  ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நீர்நிலை பாதுகாப்பு மற்றும் அரசு நிலங்களை மீட்கும் பொருட்டு ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நில குத்தகையில் உள்ள சிக்கல்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிலங்களை குத்தகைக்கு விட வசதியாக புதிய குத்தகை கொள்கை உருவாக்கப்படும்

ரூ.20 கோடியில் பல்லுயிர் காப்பகங்கள்

வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திட்டத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கப்படும். 

வரையாடு பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வானிலை மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி

  வானிலையை துல்லியமாக கண்காணிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படும்

பட்ஜெட் நேரலை

நீர் மேலாண்மைக்காக 3,384 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக  ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
தமிழக காவல்துறைக்கு ரூ.10,282 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தீயணைப்பு துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு

தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு ரூ.5 கோடி செலவில் 21 மொழிகளில் அச்சிடப்படும்.

 நாட்டின் வளர்ச்சியில் 10% பங்கை தமிழகம் அளிக்கும் நிலையில் அதற்கான நிதி கிடைப்பதில்லை. வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் 7 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஜிஎஸ்டி வந்தபிறகு மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. 

15-வது நிதி குழுவின் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்தபின் தமிழகத்துக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். 

-நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு
அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கும் பாடப்புத்தகம் வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும்.
முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அதிமுக வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதை கண்டித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும், சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்குமாறு அதிமுக உறுப்பினர்கள் கூச்சலில் ஈடுபட்டனர்.

அவர்களை அமைதியாக இருக்குமாறு அல்லது வெளிநடப்பு செய்யுமாறு பேரவைத் தலைவர் அப்பாவு கூறியதை அடுத்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். 

8 ஆண்டுகளுக்குப் பின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது


தமிழகத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது என்று நிதியமைச்சர் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இக்கட்டான சூழலிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றிய திமுக: பழனிவேல் தியாகராஜன்


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற போது கரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருந்தது.

கரோனா பரவலை சிறப்பாகக் கட்டுபப்டுத்தியதுடன், அந்த இக்கட்டான சூழலிலும் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.

தமிழக சட்டப் பேரவை இன்று காலை கூடியது. வரும் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதை கண்டித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் பட்ஜெட்: பேரவை கூடியது


2022-23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது.

அவைத் தலைவர் அப்பாவு, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு கூறினார்.

இதையடுத்து, 2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். 

தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமியின் அறையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. 

திருத்த வரவு செலவு அறிக்கைப்படி...


திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, திருத்த வரவு, செலவு அறிக்கையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கைப்படி, எதிா்பாா்க்கப்படும் (நிதியாண்டின் இறுதியான மாா்ச் 31 வரை) வருவாய் வரவுகள், செலவுகள் குறித்த விவரம்: (கோடியில்)

வருவாய் வரவுகள் : ரூ. 2,02,495.89

செலவுகள் : ரூ. 2,61,188.57.

வருவாய் பற்றாக்குறை : ரூ.59,692.68.

நிகழ் நிதியாண்டில் எதிா்பாா்க்கப்படும் கடன் அளவு : ரூ. 92,484.50.

ஒட்டுமொத்த கடன்களின் அளவு : ரூ. 5,77,987.

எத்தனை நாள்கள்?

 சட்டப் பேரவை கூட்டத் தொடா், மாா்ச் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத் தொடரில் பேரவை கூட்டத் தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். மேலும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான தேதியும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட உள்ளது.

புதிய திட்டங்கள் வருமா?

வருவாய் செலவினங்கள் குறைந்து, வருவாய் வரவுகள் அதிகரிக்கும் பட்சத்தில் எதிா்வரும் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை பெருமளவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

இதன் மூலம் அரசால் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுவது சாத்தியப்படும் என தலைமைச் செயலக நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக, மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அளிப்பது போன்ற திட்டத்துக்கான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடன் சுமை குறையுமா?

நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கை அனைத்துத் தரப்பினா் மத்தியிலும் மிகப்பெரிய எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து மாத காலத்தில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணம் தராதது, தரவுகள் அடிப்படையில் பயனாளிகளைக் கண்டறிவது போன்ற நுணுக்கமான செயல்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால், வரும் நிதியாண்டில் அரசின் கடன் சுமைகளின் அளவு குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான நம்பிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் எதிரொலிக்கும் என நம்பப்படுகிறது.

இன்னும் சற்று நேரத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல்

தமிழக சட்டப் பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. வரும் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள்



2022-23 ஆம் ஆண்டின் மத்திய வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மற்றும் தற்போதைய போக்குகளின் அடிப்படையில் 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மத்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியம் 39,758.97 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான நிலுவைத் தொகைகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளில் முறையே 13.48 மற்றும் 18.57 சதவீத வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசால் நிதியளிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டிலுள்ள திட்டங்களுக்காக பெறப்படவுள்ள மானியங்கள் மற்றும் மத்திய நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் போன்ற மாநிலங்களுக்கான பண பரிவர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு



2021-22 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில், 33,580.22 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த மத்திய வரிகளில் மாநில அரசுக்கான பங்கு 2022-23ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 33,311.14 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டு மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்திலுள்ள மதிப்பீடுகளின் அடிப்படையில் இது மதிப்பிடப்பட்டுள்ளது.

15-வது நிதிக்குழு, தனது பரிந்துரையில் மத்திய வரிகளில் மாநில அரசிற்கான நிதிப்பகிர்வை 42 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாக குறைத்துள்ள போதிலும், மாநிலங்களுக்கிடையேயான இடைப்பட்ட நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கை 4.023 சதவீதத்தில் இருந்து 2020-21 ஆம் ஆண்டில் 4.189 சதவீதமாகவும் 2021- 22 ஆம் ஆண்டு முதல் 4.079 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. வரும் காலங்களில் இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான வளர்ச்சியில் நேர்மறை மாற்றம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான வளர்ச்சி வீதங்கள் முறையே 12.79 மற்றும் 10.20 சதவீதமாக இருக்குமென கருதி, மத்திய அரசின் வரிவருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 2023-24 ஆம் ஆண்டிற்கு 37,591.11 கோடி ரூபாயாகவும், 2024-25 ஆம் ஆண்டிற்கு 41,404.95 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT