உடல் நலம்

இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்

18th Jan 2022 03:00 PM

ADVERTISEMENT


ஒருவரை பார்த்ததுமே அவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும்.

இப்படியான சூழல்கள் பலவகைப்படும். ஒருவர் நம்மிடம் வந்து என்னைத் தெரியவில்லையா? என்று ஆரம்பித்தாலே நமது மூளை நிலைதடுமாறிவிடும்.  அய்யய்யோ எனக்குத் தெரியாது என்று நமது மூளையானது இரண்டு கைகளையும் வானை நோக்கித் தூக்கிவிட்டு தலைதெறிக்க ஓடிவிடுவதும் உண்டு. அப்போதுதான் நாம் அசடுவழிய.. தலையை சொரிந்தபடி தெரியாது என்று சொல்லலாமா? தெரியும் என்று சொல்லி சமாளிக்கலாமா? என ஆழ்ந்த யோசனையில் இருப்போம். அதற்குள் நம்மைப் பார்த்து உற்சாகம் கொப்பளிக்க ஓடி வந்தவர் ஏற்கனவே ஃபியூஸ் போன பல்பாகியிருப்பார்.

இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை

சரி.. ஒருவரைப் பார்த்ததும் இவர் நமக்கு நன்றாக தெரிந்தவராயிற்றே என்று சொல்லும் மூளையானது.. ஆவர் யார்? எப்படித் தெரியும் என்பதை சொல்ல மறுத்துவிடும். அவ்வளவுதான் அவரைப் பற்றி நாம் யோசிப்பதற்குள் அந்த இடம் காலியாகிவிடும்.

ADVERTISEMENT

இப்படி யார், என்ன பெயர், எப்படித் தெரியும் என்று குழம்பும் சூழ்நிலைகள் பலவிதம். ஆனால், அவற்றைக் கண்டுபிடிக்கும் விதம்மட்டும்தான் புதுவிதம்.

அதாவது, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆராய்ச்சியில், இதுபோல ஒருவரின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை நினைவில் கொண்டு வருவதற்கு சிறந்த வழி உறக்கம் என்று தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

நமது நினைவாற்றலை புதுப்பித்து, முகம் - பெயரை கண்டறிய, எந்த இடையூறும் அற்ற மிக மெல்லிய உறக்க அலையே போதுமானது என்கிறது அந்த ஆய்வு முடிவு.

நேச்சர் பார்ட்டனர் அறிவியல் இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே இருக்கும் ஆய்வுகளும், இந்த புதிய ஆய்வும் கூறுவது என்னவென்றால், மிக ஆழ்ந்த உறக்கம் மூலமாக, நமது நினைவாற்றலின் திறன் அதிகரித்து, அது புதுப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் நாம் மறந்த பல விஷயங்களை மீண்டும் நினைவுகூற முடியும் என்கிறார் பிஎச்டி மாணவரான நாதன் வொய்ட்மோர்.

அதேவேளையில், ஆழ்ந்தஉறக்கமற்ற தன்மை, நிச்சயம் நினைவாற்றலுக்கு உதவாது, ஏற்கனவே இருக்கும் சிக்கலை பெரிதாக்கும் என்றும் கூறுகிறார்கள்.

எனவே, யாரையாவது பார்த்ததும் பெயர் நினைவில் வரவில்லையா? வெகு நாளாகத் தேடிக் கொண்டிருக்கும் நண்பரின் முகம் மறந்துவிட்டதா? எங்கும் தேடி அலைய வேண்டாம். ஒரு தலையணை இருந்தால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு (ஏற்கனவே மறந்ததுதான் பிரச்னையே என்கிறீர்களா?) நன்கு ஆழ்ந்து உறங்குங்கள். பிறகு அமைதியாக உங்கள் நண்பரின் முகத்தை அல்லது பெயரை நினைவுகூருங்கள். நிச்சயம் நினைவில் வரும். அப்படியும் வரவில்லை.. வேறு என்ன மீண்டும் உறங்குங்கள்..
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT