‘உலகின் எந்த மூலைக்குச் சென்ற போதும் திரும்ப வரத் தூண்டும் ஒரே இடம் என் வீடு’: ராணா டகுபதி!

வீடு என்பது நாங்கள் வாழ்வதற்காக மட்டும் அல்ல, உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் நான் திரும்பி வர விரும்பும் ஒரே இடமாகவும் இந்த வீடு தான் என்னை ஈர்க்கிறது.
‘உலகின் எந்த மூலைக்குச் சென்ற போதும் திரும்ப வரத் தூண்டும் ஒரே இடம் என் வீடு’: ராணா டகுபதி!

ஒவ்வொருவருக்குமே அவரவர் வீடு சொர்க்கம் தான். அது ஏழைக்கேற்ற எள்ளுருண்டை மாளிகையாக இருந்தாலும் சரி அம்பானி வீட்டு அம்பாரி மாளிகையாக இருந்தாலும் சரி. அவரவர் வீடு தான் அவரவருக்கு செளகர்யமான இடம். கையில் காசு இருந்தால் உலகம் முழுவதும் சுற்றி விட்டு வரலாம். ஆனால், எங்கே எந்த மூலையில் சுற்றி விட்டு வந்தாலும், இங்கே அக்கடாவென்று ரிலாக்ஸாக உட்கார வீடு எனும் ப்ரியம் சமைக்குமொரு கூடு வேண்டும். இல்லையேல் வாழ்க்கை ருசிக்காது. பாகுபலி புகழ் ராணா டகுபதி தனது வீட்டைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் சில சுவாரஸ்யங்களைப்பற்றீ இப்போது தெரிந்து கொள்வோம்.

ராணாவின் வீடு அவரது தாத்தா டி ராமா நாயுடுவால் கட்டப்பட்டது. ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் அரசு கூவிக் கூவி வீட்டுமனைகளை விற்ற போது சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த டோலிவுட் சினிமாக்காரர்கள் பலருக்கு அங்கே இடம்பெயர பெரிதாக விருப்பங்கள் இல்லாதிருந்த நாட்கள் அவை. அப்போது துணிந்து ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் இடம் வாங்கி ஸ்டுடியோ கட்டி அருகிலேயே வீட்டையும் கட்டி குடியிருக்கச் சென்றவர்கள் சிலர் மட்டுமே. அதில் முதன்மையானவர் டி. ராமாநாயுடு எனும் திரை ஜாம்பவான். அந்த வீட்டில் இப்போதும் கூட்டுக் குடும்பமாக அவரது மகன்களும், பேரன்களும் வசித்து வருகின்றனர்.

தாத்தா மீது எத்தனை ப்ரியமோ அதே விதமாக அவர் கட்டிய வீட்டின் மீதும் அதீத ப்ரியம் உண்டு ராணாவுக்கு. 

தனக்குள் மிகச்சின்ன வயதிலேயே சினிமா ஆர்வம் புகுந்து கொண்டதற்கு காரணமும் இந்த வீடு தான் என்கிறார் ராணா. ஏனெனில் வீட்டின் கீழ்தளத்தில் எடிட்டிங் ஸ்டுடியோ இருப்பதால் சதா நேரமும் ஏதாவது ஒரு திரைப்படத்திற்கான எடிட்டிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கும். சிறுவனான தனக்கு அப்போது அந்த சுற்றுப்புறத்தில் விளையாடுவதற்கான வேறு நண்பர்கள் யாரும் கிடைத்திராத பட்சத்தில் பொழுது போக்காக எடிட்டிங் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்.

வீட்டினுள் நுழைந்ததுமே நீள அகலமான அழகான ஹால் வரவேற்கிறது. ஹாலில் விருந்தினர்களை அமர வைக்க, வீட்டினர் ஓய்வு நேரத்தில் அமர்ந்து ஏதாவது பணியில் ஈடுபட, நண்பர்களுடன் ஜாலியாகப் பேசி கொண்டாடிக் களிக்க என வெவ்வேறு மூலைகளில் நான்கைந்து சோபா செட்கள் போடப்பட்டிருக்கின்றன. இவற்றில் ராணாவுக்குப் பிடித்தது என்றால் கார்னரில் இருக்கும் படிப்பறை போன்ற லுக் தரும் சோபா தான். பெரும்பாலான நேரங்களில் ராணா தனியே அமர்ந்து புத்தக வாசிப்பில் ஆழ்வது இங்கே தானாம்.

வரவேற்பறையிலேயே ஹோம் தியேட்டர் ப்ரொஜெக்டர் இருக்கிறது. அங்கே உட்கார்ந்து கொண்டு நேரம் போவதே தெரியாமல் உலக சினிமாக்கள் அத்தனையையும் பார்ப்பது தனது வழக்கம் என்கிறார் ராணா. வரவேற்பறையிலிருந்து பிரிந்து மேலேறும் ஒரு சின்ன மேடை அறையின் மீது நண்பர்களுடன் சோஷியலாக கலப்பதற்கென்று பிரத்யேகமாக பார் ஒன்று வைத்திருக்கிறார். இந்த பாரில் தாக சாந்தி செய்து கொண்டே தான் சினிமா திரைக்கதை டிஸ்கஸன்கள் எல்லாம் நடத்தப்படும் என்கிறார் ராணா.

பார் மேடையில் ஒரு செவ்வக ஸ்க்ரீன் போன்ற அமைப்பு இருக்கிறது. அதை ஏதோ நவீன  ஸ்பீக்கர் என்று  நினைத்துக் கொள்கிறார்கள் பலர், நிஜத்தில் அது ஒரு அழகான சேர். அதை இழுத்துப் போட்டு உட்கார்ந்தால் நம் உடலமைப்பு ஏற்றவாறு அது தன் வடிவத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்கிறது. அதை வெளிநாட்டில் இருந்து இம்போர்ட் செய்து வரவழைத்திருப்பதாகச் சொன்னார் ராணா. தவிர ராணாவுக்கு என்றே ஒரு ஸ்பெஷல் ஹேபிட் இருக்கிறது. ஃபாரின் சரக்குகளை அலங்கரிக்கும் வண்ண வண்ண பாட்டில்களில் திரவம் தீர்ந்ததும் அவற்றை மிக அருமையாக கட் செய்து அழகழகான ஸ்பூன் ஸ்டாண்டுகள், பென் ஸ்டாண்டுகள் போன்ற ஹோல்டர்களாக டிஸைன் செய்து வைத்திருக்கிறார். பார்க்க அழகாக இருக்கிறது. இது ராணாவின் சிறந்த ஹாபிகளில் ஒன்றாம். தவிர அவரது அப்பா சுரேஷ் டகுபதி தீவிரமான ஃபுட்பால் ரசிகர் என்பதால் உலகெங்கும் எங்கே மேட்ச் நடந்தாலும் சென்று பார்க்கும் ஆர்வம் உண்டாம் அவருக்கு. அப்படி உலகம் சுற்றும் போது வீட்டை அலங்கரிக்கத் தேவையான ஏதோவொரு பொருளை வாங்கி வரும் பழக்கமும் குடும்பத்தில் ராணா உட்பட அனைவருக்குமே உண்டாம்.

இது தவிர, தனது அலுவலக அறை முழுதும் நிறைய காமிக்ஸ் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார் ராணா. காமிக்ஸ் என்பது என்ன வடிவில் இருந்தாலும் அது ராணாவுக்குப் பிடித்தமே. அந்தக் கால துப்பறியும் கதாபாத்திரங்களை மையமாகக்கொண்ட திரைக்கதைப்புத்தகங்கள் உட்பட மார்வெல், அவெஞர்ஸ், டிஸ்னி பிரின்சஸ் புத்தகங்களுடன் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராணக்கதைகள் வரை பல்வேறு புத்தகங்கள் நிறைந்து கிடக்கின்றன. ராணாவின் அலுவலக அறைக்குள். 

இந்த வீடு என்பது நாங்கள் வாழ்வதற்காக மட்டும் அல்ல, உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் நான் திரும்பி வர விரும்பும் ஒரே இடமாகவும் இந்த வீடு தான் என்னை ஈர்க்கிறது. வீட்டின் மீதான எனது அபிமானம் இப்படித்தான் பிணைந்திருக்கிறது என்கிறார் ராணா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com