கிச்சன் போர் அடிக்காம ஸ்டைலிஷ் & எவர் ஃப்ரெஷ்ஷா இருக்க... இதை ட்ரை பண்ணுங்களேன்!

சோர்வு எழும் போதெல்லாம். அதாவது கிச்சனுக்குள் நுழையும் போதே அலுப்பும், சலிப்பும் தட்டத் தொடங்கும் போது இவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டை முதலில் தொடங்கலாம்.
கிச்சன் போர் அடிக்காம ஸ்டைலிஷ் & எவர் ஃப்ரெஷ்ஷா இருக்க... இதை ட்ரை பண்ணுங்களேன்!

ரொட்டீனாக ஒரே வேலையைத் தினமும் செய்து கொண்டு, புழங்கிய பொருட்களையே மீண்டும் மீண்டும் புழங்கிக் கொண்டிருப்பது சில சமயங்களில் நமக்கு போர் அடிக்கலாம். அம்மாதிரியான சமயங்களில் சலிப்பு கூடக் கூட வீண் எரிச்சலே மிஞ்சும். அதைத் தவிர்ப்பதற்கு மாற்று முயற்சிகளை நாம் தான் மேற்கொள்ள வேண்டும். காசு செலவாகிறதே என்று பார்த்தால் சில அருமையான பொருட்களைப் பயன்படுத்திப் பார்க்கும் ஆவலான முயற்சிகளை நாம் புறக்கணித்தவர்களாகி விடுவோம்.

பழையன கழிதலும், புதியன புகுதலும் வலுவன கால வகையினனே! என்கிறது நன்னூல்...

அதற்கேற்ப நாம் நமது கிச்சனை புதிய மோஸ்தரில் மாற்ற முயற்சித்துப் பார்க்கலாம் வாருங்கள்.

பயன்படுத்த எளிதாக இருக்கிறதே என்று எப்போது பார்த்தாலும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் ஜார்களையே பயன்படுத்திக் கொண்டிருந்தால் அது சுத்த போர்.

இதோ இந்த வாட்டர் டிஸ்பென்ஸரைப் பாருங்கள் எத்தனை அழகென்று!

கண்ணாடியிலான இந்த மாடல் வாட்டர் டிஸ்பென்ஸர்கள் பார்க்க அழகாக இருப்பதுடன் நாம் ஒரு நாள் பயணதூரத்தில் பக்கத்தில் எங்கேனும் சுற்றுலா சென்றால் எடுத்துச் செல்ல வசதியாகக் கைப்பிடிகளுடன் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இதில் நம் இஷ்டப்படி நமக்குப் பிடித்த ஃப்ளேவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது புதினா இலைகள், ஸ்ட்ராபெர்ரி பழங்கள், சீரகம் என்று சேர்த்துக் கொண்டால் அழகான கண்ணாடி வாட்டர் பாட்டைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு ஆசையாக தண்ணீர் அருந்தத் தோன்றிக்கொண்டே இருக்கும்.

இதனால் தினசரி தண்ணீர் அருந்த சோம்பேறித்தனப்படும் சோம்பேறிகள் கூட திருந்தி விடுவார்கள். குழந்தைகளுக்கு இந்தவகை வாட்டர் டிஸ்பென்ஸர்களை ரொம்பப் பிடிக்கும். ஆனால், கவனமாகக் கையாள பெரியவர்கள் ஆரம்பம் முதலே கற்றுக் கொடுத்து விடவேண்டும். 

அடுத்தபடியாக தயிர் உறை ஊற்றி வைத்துப் பரிமாற ஸ்டெயின் ஸ்டீல் பாத்திரங்கள் மற்றும் கிண்ணங்களைக் காட்டிலும் இதோ இந்த மாதிரியான சுடுமண் பாத்திரங்களையும், கிண்ணங்களையும் பயன்படுத்தலாம்.

இவற்றில் தயிர் உறை குத்தினால் மறுநாள் ஃப்ரெஷ் ஆன தயிர் மணம் மண்வாசனை கலந்து சாப்பிடச் சொல்லி நம்மைத் தூண்டும். சுடுமண் பாத்திரத்தின் நிறமும், தயிரின் அரைவெண்மை நிறமும் கலந்து நம்மை உடனடியாகச் சுண்டி இழுக்கும்.

சப்பாத்திகளைச் சுட்டு ஹாட் பாக்ஸில் அடைத்தால் மேலே நீராவி வடிந்து சில நேரங்களில் சப்பாத்திகள் நீர்த்துப் போகின்றன. அதைத் தவிர்க்க இப்படியான மரத்தாலான ரொட்டி பாக்ஸ்களைப் பயன்படுத்தலாம். கையாளவும் எளிதானது. அத்துடன் நீராவியும் படியாது. மரமூடியே நீராவியை ஈர்த்துக் கொள்ளும்.

பழங்களை வைக்கவும் கூட சாதாரணக் கூடைகளைப் பயன்படுத்தாமல் மரத்தாலான கிரியேட்டிவ்வாக டிசைன் செய்யப்பட்ட கூடைகள் மற்றும் ட்ரேக்களைப் பயன்படுத்தலாம்.

பார்க்க அழகாக இருப்பதோடு பழங்களும் கண்களில் எளிதாகப்படுமாறு டிஸ்ப்ளே ஆகும்.

ஸ்பூன் மற்றும் போர்க்குகளை எங்கெங்கோ வைத்து விட்டு தேடிக் கொண்டிராமல் ஹோல்டரில் வைத்துப் பயன்படுத்தும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறதோ தெரியவில்லை.

அப்படிப் பழக்கமிருப்போர் இப்படியான அழகான ஸ்டாண்டுகள் மற்றும் ஹோல்டர்களைப் பயன்படுத்தலாம். பார்க்க அழகாக இருப்பதோடு பாந்தமாகப் பயன்படுத்தலாம்.

ஸ்பூன் மற்றும் போர்க்குகள் போலவே கத்திகளையும் இடம் மாற்றி வைத்து விட்டு அவஸ்தைப் படுபவர்கள் இப்படியான அழகழகான ஹோல்டர்களை மரத்திலும், மேட் ஃபினிஷிங் மெட்டல் வகையறாக்களிலும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

சில ஹோல்டர்கள் ஆர்டிஸ்டிக் வகையிலும் அழகழகாக மார்க்கெட்டில் வந்திறங்கியிருக்கின்றன. அவரவர் டேஸ்டுக்குத் தக்கவாறு வாங்கிப் பயன்படுத்த வேண்டியது தான்.

அப்புறம் இந்த காபி கப்புகள், காபி கெட்டில்களை ஸ்டெயின்லெள் ஸ்டீல், சைனாக் களிமண், கண்ணாடி தவிர்த்து காப்பரில் வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள். இவற்றைப் பராமரிப்பது கொஞ்சம் கஷ்டம், என்ற போதும் உடலுக்கு ஆரோக்யமானது என்பதால் முயற்சிக்கலாம். இவற்றிலும் அழகழகான டிசைன்கள் வந்து விட்டன. பாலிஷ்டாக வைத்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் மெனக்கெட்டால் உங்களுக்கொரு அழகான மாலை நேர காபி டைம் கிடைக்கும்.

காப்பர் கெட்டிலில் காபி வைத்து காப்பர் காபி கப்பில் அருந்திப் பார்த்தவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும். பழமையும், புதுமையுமானதொரு காம்பினேஷனில் பார்க்க ஸ்டைலாக இருக்கும்.

சாப்பிடுவதற்கான வட்டில்களைக் கூட தஞ்சாவூர் ஸ்டைலில் பெரிய பெரிய சில்வர் வட்டில்களாக வாங்கி அடுக்காமல் நல்ல கனமான பீங்கான் தட்டுக்களாக வாங்கி பயன்படுத்தலாம். இவற்றை மைக்ரோ வேவ் அவனில் வைத்து சூடுபடுத்தவும் பயன்படுத்தலாம் என்பதால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.

டிசைன் இல்லாத ப்ளைன் பீங்கான் வட்டில்கள் பாந்தமானவை. குழந்தைகளுக்கென்று பொம்மைகள், மலர்கள் அச்சிடப்பட்ட வட்டில்களும் கிடைக்கின்றன. அவரவர் டேஸ்டுக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

காய்ந்த திராட்சை, அத்திப்பழம், மலை நெல்லிக்காய் உள்ளிட்ட உலர்ந்த பழங்கள், பாதம், பிஸ்தா, வால்நட் உள்ளிட்ட கொட்டை வகைகளை தினமும் உண்டால் நல்லது என்கிறார்கள். பெரியவர்களுக்கு கட்டுப்படியாகாவிட்டாலும் குழந்தைகளுக்கு இவற்றை தினமும் ஒரு கைப்பிடி உண்ணும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.

ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் வகைகளில் வரும் அவற்றை அழகாக இம்மாதிரியான ஹோல்டர்களில்  சாப்பாட்டு நேரத்தில் டேபிளில் வைத்து விட்டால் போதும். நிச்சயம் ஆளாளுக்கு எடுத்து சாப்பிட்டு டிரேக்களை காலி செய்து விடுவார்கள். குழந்தைகளை இவற்றையெல்லாம் சாப்பிடச் சொல்லிக் கெஞ்ச வேண்டாம் பாருங்கள்.

கட்டக் கடைசியாக ஒரு விஷயம். மாடுலர் கிச்சன்காரர்கள் இப்போதெல்லாம் கிச்சன் சுவர்களில் பதிக்கும் டைல்ஸ்களில் அழகழகான டிசைன்களைப் பதித்துத் தருகிறார்கள். பார்க்க அழகாக இருக்கிறது. அதெல்லாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் இப்படியான ரஸ்டில் மெட்டல் வால் ஆர்ட்களைப் பதித்துக் கொள்ளலாம். கிச்சன் சுவர்களுக்கென்று ஸ்பெஷலாக டிசைன் கிரியேட் செய்வது அவரவர் கற்பனா சக்தியைப் பொருத்தது. நீங்கள் கேட்பதை செய்து தரக்கூடிய அளவுக்கு இப்போது இந்த மெட்டல் வால் ஆர்ட்டில் கலைத்திறன் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள்.

மேற்கண்டவற்றில் எல்லாவற்றையும் ஒரே நாளில் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது சோர்வு எழும் போதெல்லாம். அதாவது கிச்சனுக்குள் நுழையும் போதே அலுப்பும், சலிப்பும் தட்டத் தொடங்கும் போது இவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டை முதலில் தொடங்கலாம்.

பிறகு நீங்களே உணர்வீர்கள்... கிச்சன் என்பதும் படைப்பாளிகளுக்கான இடம் தான் என்பதை.

வீட்டின் அத்தனை அறைகளுமே படைப்பாளிகளுக்கானவையே. கிச்சனை மட்டுமல்ல வரவேற்பறை, குழந்தைகளின் படிப்பறை, படுக்கையறை, மாடி பால்கனி, மொட்டை மாடி, ஜன்னல்திட்டுகள், போர்ட்டிகோ பாடிப்படி வளைவுகள் என வீட்டின் அத்தனை இடங்களிலுமே நமது கலைத்திறனை, ஆர்வத்தை காட்டுவதற்கான இடங்களே. 

வாழ்க்கை கொஞ்சம் போரடிக்கத் தொடங்கும் போது, தினப்படி வேலைகள் கொஞ்சம் சலிக்கத் தொடங்கும் போது நாம் ஏன் இவற்றிலெல்லாம் மாற்றங்கள் செய்யத் தொடங்கக் கூடாது?!

Image Courtesy: 

snap deal, Elementry, pintrest, google.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com