ஸ்பெஷல்

குளிர்கால உடல் தொந்தரவுகள்: பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன?

தினமணி

வெயில் காலத்தைவிட குளிர்காலத்தை சமாளிப்பது சற்று கடினம்தான். ஏனெனில், குளிர் காலத்தில் காய்ச்சல், சளி, சருமம் வறண்டு போதல் உள்ளிட்ட உடல் தொந்தரவுகள் அதிகம் ஏற்படும். அவ்வாறு சளி, இருமல் வந்தாலே உடல் சோர்வாகக் காணப்படும். எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் வெளியில் வாட்டும் குளிரே பல உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும். 

குளிர்காலத்தில் ஏற்படும் உடல் தொந்தரவுகள் என்ன? அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம். 

சாதாரண சளி

ஜலதோஷம்/சளி என்பது வைரஸ்களால் ஏற்படும் மேல் சுவாசக் குழாய் தொற்று. இது முக்கியமாக வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களைத் தாக்குகிறது. தொண்டை எரிச்சல், சளியுடன் இணைந்த இருமல், மூக்கு ஒழுகுதல், தும்மல், கண்களில் நீர் வடிதல், தலைவலி மற்றும் குறைவான காய்ச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். 

வயிற்றுப் பிரச்னைகள் 

குளிர்காலத்தில் வேகமாகப் பரவும் நோரோ வைரஸால் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படுகிறது. வயிற்றுப்  பகுதியில் ஏற்படும் அழற்சியினால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு ஏற்படலாம். அதிக குளிர், தலைவலி, சோர்வு மற்றும் தசை வலி போன்றவற்றையும் உணரலாம்.

வறண்ட சருமம்

பொதுவாக குளிர்காலத்தில் சுற்றுச்சூழல் காரணமாக குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று இருக்கும். மேலும், தண்ணீர் குடிப்பது குறைவதால் சருமம் வறண்டு போகிறது. 

ஆஸ்துமா

ஆஸ்துமா என்பது மூச்சுக்குழாய் குறுகி, வீக்கமடைந்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவது ஆகும். இது இருமல் மற்றும் மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும். சில நபர்களுக்கு இந்த அறிகுறிகள் குளிர்காலத்தில் வெளிப்படும். குளிர்ந்த வறண்ட காற்று காற்றுப்பாதைகளை எரிச்சலடையச் செய்து, அதிக சளியை உற்பத்தி செய்வதனால் ஆஸ்துமா ஏற்படுகிறது. 

காய்ச்சல்

குளிர்காலத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவுகிறது. வைரஸின் பாதிப்பு அதிகம் இருந்தால் உடலுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும். பொதுவாக இளம் வயதினர், வயதானவர்களை பாதிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிக காய்ச்சல், குளிர், தொண்டை வலி, குமட்டல், வீங்கிய நிணநீர் மற்றும் தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 

சுகாதாரம்

வயிற்றுப் பிரச்னைகள், ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான மிக முக்கியமான வழிகளில் தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது. இது உங்களிடமிருந்து அடுத்தவருக்கு தொற்று பரவாமலும் தடுக்க உதவுகிறது.

யோகா

சுவாசப் பிரச்னைகளை சரிசெய்யும் மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகாவை செய்வது மேல் சுவாசக் குழாயில் உள்ள அதிகப்படியான சளியை அகற்றி, எந்த தடையும் இன்றி சுவாசிக்க உதவும். இதனால் இது ஆஸ்துமா நிலைகளிலும் உதவுகிறது. முறையான யோகா பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள கோளாறுகளும் படிப்படியாக நீங்கும். 

மூலிகை வைத்தியம்

துளசி: துளசி நல்ல கிருமி நாசினி, வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஜலதோஷம், காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது சளியை திரவமாக்க உதவுகிறது. இருமல், ஆஸ்துமாவை சரிசெய்யும். தேநீர், சூப் ஆகியவற்றில் சேர்க்கலாம். 

மஞ்சள்: மஞ்சள் ஒரு சிறந்த ஆன்டிவைரஸ். இன்ஃப்ளூயன்ஸா வைரஸுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் என்பதால் அழற்சியை சரி செய்கிறது. தினமும் உணவுப் பொருள்களில் மஞ்சள் சேர்த்துக்கொள்ள குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம். 

உணவு முறைகள்

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்: வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தும். தொற்றுக்கு எதிராக போராடவும் உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளில் நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, புரோக்கோலி, மிளகு, எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை. 

தண்ணீர்: போதுமான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவும். குறிப்பிட்ட கால இடைவெளியில் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யுங்கள். 

சூடான சூப்கள்: சூப்கள் நமது குளிர்கால மெனுவில் சேர்க்கப்படும் ஒரு சிறந்த உணவாகும். ரோஸ்மேரி, இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் போன்ற குளிர்காலத்திற்கு ஏற்ற பல்வேறு மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதை மேலும் மேம்படுத்தலாம். 

உடற்பயிற்சி

நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மிதமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. உடலின் வெப்பத்தை உயர்த்தவும், இதய செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும் கார்டியோ அல்லது யோகா பயிற்சிகளில் நாம் ஈடுபடலாம். இதனால் உடல் உறுப்புக்கள் பாதிப்பின்றி இயங்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT