ஸ்பெஷல்

அவர்கள் வெறும் 5000 க்கும் குறைவானவர்களே, ஆயினும் அரசு முடிவை எதிர்த்து திடமாய் வென்றிருக்கிறார்கள்!

20th May 2019 01:00 PM | கார்த்திகா வாசுதேவன்

ADVERTISEMENT

 


‘எங்கள் காடுகளை என்ன செய்வது என்று நாங்களே முடிவு செய்வோம்’: அமேசான் பழங்குடி மக்கள்!

இப்படியான அபூர்வமான தீர்ப்புகளையும், நிஜத்தில் சிறு முயல்குட்டி, அச்சுறுத்தும் வனராஜா சிங்கத்தை பாழும் கிணற்றில் தள்ளிக் கொன்ற கதையையும் நீங்கள் அடிக்கடி உங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே தான் இதை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளில் ஒன்றாகக் கருத வேண்டியதாயிருக்கிறது.

கடந்த மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி, திடீரென நூற்றுக்கணக்கான வோரானி பழங்குடி இன ஆண்களும், பெண்களும் வெகு தீரத்துடன் நீண்ட பேரணியாக ‘புயோ’ நகரச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். புயோ நகரமே, ஈக்வடார் தேசத்தின் தெற்கு மாகாணத் தலைநகரம். பழங்குடிகள் காடுகளில் தானே வசிப்பார்கள். நகரங்களில் பேரணி செல்வது ஏன்? காரணம் இருக்கிறது. அவர்கள் ஈக்வடார் அரசை எதிர்த்து தாங்கள் மேற்கொண்ட சட்டப்போராட்டத்தில் நியாயமாகக் கிட்டிய வெற்றியைக் கொண்டாடவே அவ்விதமாகப் பேரணியாகச் சென்றனர். என்கிறார்கள் என்கிறார்கள் அங்கத்திய ஊடகத்தினர்.

ADVERTISEMENT

ஆம், இது நிச்சயம் பேசப்பட வேண்டிய வெற்றி தான்! ஏனெனில், அம்மக்கள் வாழும் காட்டுப்பகுதி அழுத்தமான அடர் வனம். நகர மக்கள் அங்கே செல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு சாலை வசதி ஏதும் கிடையாது. லேசான சிறு படகுகள் மற்றும் சிறு விமானங்கள் மூலம் மட்டுமே அவர்கள் வசிக்கும் அடர்ந்த காட்டுக்குள் நம்மால் நுழைய முடியும். அப்படிப்பட்ட நிழல் காணாப் பசுங்காட்டுக்குள் வசித்துக் கொண்டு சாலை வசதிகளோ அல்லது அரசின் இன்னபிற வசதிகளோ கூட சென்றடைய முடியாத பகுதியில் வாழும் மக்கள் தங்கள் உரிமைக்காக அரசையே எதிர்த்துப் போராடி வென்றால் அது லேசான காரியமில்லையே! 

‘அரசாங்கம் எங்கள் அனுமதி இல்லாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு எங்கள் காடுகளை விற்க முயற்சிக்கிறது. எங்களது வெப்பமண்டலக் காடுகளே எங்கள் வாழ்க்கையும் வாழ்வாதாரமுமாக எப்போதும் இருந்து வருகிறது. எங்கள் நிலங்களை என்ன செய்வது என்று நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். நாங்கள் எங்களது காடுகளை ஒருபோதும் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்க மாட்டோம். இன்று, நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது... இந்தப் பரந்து விரிந்த அமேசான் காடுகள் அனைத்தும் வோரானி பழங்குடி மக்கள் மற்றும் அவர்களைப் போன்ற பிற பழங்குடி இன மக்களுக்கு மட்டுமே சொந்தம் என. நீதிமன்றத்தின் இந்த தெளிவான முடிவை நாங்கள் மதிக்கிறோம். அந்த எண்ணெய் நிறுவனங்கள் மீது அரசு கொண்டிருக்கும் ஆர்வத்தைக் காட்டிலும் எங்களது உரிமை, எங்களது காடு, எங்களது வாழ்வு விலை மதிப்பற்றது.’

- இப்படித் தீரமுடன் உரைத்து தங்களது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஈக்வடார் நாட்டைச் சார்ந்த அமேசான் வனப்பகுதியின் வோரானிய பழங்குடி மக்கள்.

காடுகளையும், நிலங்களையும் அபகரிக்க நினைக்கும் எந்த ஒரு அரசாங்கமும் முன்னெச்சரிக்கையாகப் பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம் போன்றதே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அப்பாவி மக்களின் நிலங்களையும், வனப்பகுதிகளையும் கையகப்படுத்துகிறோம் எனும் அறிவிப்பு. இந்த அறிவிப்பின் மீது பூசப்படும் முலாம்களே, பொருளாதாரத்தை மேம்படுத்த எண்ணெய் எடுக்கிறோம், கனிமங்களை வெட்டி எடுக்கிறோம் எனும் மாய்மாலங்கள். இப்படி உலகம் முழுவதிலுமாகப் பல்லாயிரக்கணக்கான நிலங்கள் கையகப்படுத்தப் பட்டிருக்கின்றன.

அந்தக் கணக்கில் ஒன்றாகத்தான் இவர்களது போராட்டமும் ஆகி விடக்கூடும் என்று எதிர்பார்த்தது ஈக்வடார் நாட்டு அரசாங்கம். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணத்துடன் ஈக்வடார் அரசு தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அமேசான் காட்டில் வசிக்கும் வோரானி பழங்குடி இன மக்களின் பூர்விக பூமியில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் ஏக்கம் நிலங்களை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை வழங்கி இருந்தது. ஈக்வடார் அரசு இதற்காக, அங்கு வசிக்கும் பழங்குடி இன மக்களிடம் அனுமதி எதுவும் பெற்றிராத நிலையில் அரசின் இந்த பொறுப்பற்ற அராஜக முடிவை எதிர்த்து வோரானியப் பழங்குடி இனமக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன் தங்களது போராட்டத்தை சட்டப்படி கையாளும் முடிவில் நீதிமன்றத்தையும் நாடினர். சில வாரங்களுக்கு முன்பு மத்திய ஈக்வடார் பகுதியில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் தனியார் எண்ணெய் நிறுவனத்தை வெளியேற்றக் கோரி பழங்குடியினர் வழக்குத் தொடர்ந்தனர்.

பலநாடுகளுக்கும் பரந்து விரிந்து கிடக்கும் இந்த அமேசான் காடுகளில் தலைமுறை, தலைமுறைகளாக நாங்கள் மிக அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறோம். இந்தக் காடே எங்களது  அன்னை. அதை எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க நினைத்தால் எங்களால் அமைதியாக இருக்க முடியுமா? மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் மோதுவது என்பது எங்களைப் போன்ற அழிந்து வரும் மிகச் சொற்பமான பழங்குடி இனக்குழுவுக்கு வாழ்வா, சாவா போராட்டாம் போன்றதே. ஆனாலும் இது எங்கள் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, எங்களது வாழ்வே இது தான் எனும் போது நாங்கள் போராடித்தான் ஆக வேண்டும். எனவே தான் எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்றியே தீருவோம் எனும் எங்கள் போராட்டத்தில் மிக திடமாக நின்று சட்டப்பூர்வமாக இன்று அதில் வென்றிருக்கிறோம். என்கிறார் வோரானிய பழங்குடி இனத்தலைவரான நெமோந்தே நெங்கிமோ.

ஈக்வடார் நாட்டு சட்டத்தின் படி காடுகள் பழங்குடிகளுக்கே சொந்தம், அவர்களுக்கு அங்கு வசிக்க பூரண சுதந்திரமும், உரிமையும் உண்டு என்பதை வோரானிய பழங்குடிமக்கள் நீதிமன்றத்தில் தங்களது வாதமாக வைத்துப் போராடினர். வழக்கை விசாரித்த நீதிமதி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்து அவற்றைத் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. காட்டுநிலத்தின் மீது பழங்குடியினருக்கே முதலுரிமை என்று சட்டம் சொல்லும் போது அதை தனியாருக்கு விற்க முயலும் அரசின் நடவடிக்கை சட்டத்தை மீறிய செயல். சட்டத்தை மீறி ஒரு அரசு செயல்படுவதை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. எனவே பழங்குடிகளிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காட்டு நிலப்பகுதி அத்தனையையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டு அரசும், தனியார் எண்ணெய் நிறுவனங்களும் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என ஈக்வடார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சட்டப்போராட்டத்தில் ஈக்வடார் நாட்டு அரசாங்கம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அமேசான் காடுகளை தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்ததாகச் சிலர் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், நீதிமன்றம், அந்த வாதத்திற்கு சான்றுகள் இல்லையெனச் சுட்டிக்காட்டி அந்த வாதத்தை தள்ளுபடி செய்தது. எது எப்படியானாலும் அரசைக் காட்டிலும் மக்களின் வாழ்வுரிமை முக்கியமானது என்பதை மட்டுமே பிரதான காரணமாகக் கொண்டு நீதிமன்றம் வோரானிய பழங்குடி மக்களுக்குச் சாதகமாக இவ்வழக்கில் தீர்ப்பளித்திருப்பது உலகம் முழுவதிலும் வாழும் பழங்குடி இன் மக்களுக்கு ஒரு புதிய மறுமலர்ச்சியையும், உத்வேகத்தையும் வழங்கியிருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

அரசுக்கு எதிரான இந்த சட்டப்போராட்டத்தில் பழங்குடி மக்கள் வென்றதில் அப்படி என்ன அதிசயம்? தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும், எனினும் இறுதியில் தர்மம் வெல்லும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே என யாரும் எளிதில் இவ்விஷயத்தைப் பற்றிக் கருத்துக் கூறி விலகிச் செல்லலாம். ஆனால், பாருங்கள், ஈக்வடார் அரசை எதிர்த்துப் போராடிய வோரானிய பழங்குடி மக்களின் எண்ணிக்கை வெறும் 5000 க்கும் குறைவே என்பதை அத்தனை எளிதில் நாம் புறக்கணித்து விட முடியாது. இங்கே சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் டெல்டா பகுதி மக்கள் கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக அரசுகளை எதிர்த்துப் போராடிக் கொண்டே தான் இருக்கிறோம். இருப்பினும் மக்களுக்குச் சாதகமான முடிவொன்றை எட்ட முடியாத நிலையே இப்போதும் நீடித்து வருகிறது. அவர்கள் வெறும் 5000 க்கும் குறைவு தான் என்றாலும் தங்களது உரிமைகளுக்காக சட்டப்படி போராடி வென்றிருக்கிறார்கள் எனும் போது நம்மாலும் முடியும் என்ற உத்வேகம் நம் மக்களுக்கும் வரவேண்டும்.

ஏனெனில், அரசின் வளர்ச்சித் திட்டங்களைக் காட்டிலும் மனிதர்களின் வாழ்க்கை பெரிது. 

மக்களுக்காகத்தான் அரசே தவிர, அரசின் திட்டங்களுக்காக மக்களின் வாழ்க்கை அல்ல!

Tags : AMAZON rainforest saved A historic lawsuit. அமேசான் காடுகள் மீட்கப்படன வோரானிய பழங்குடியினரின் சட்டப்போராட்டம் ஈக்வடார் அரசு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT