பங்களாதேஷைச் சேர்ந்த 20 வயது ஆரிஃபா சுல்தானாவுக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. அட, 20 வயதுப் பெண்ணுக்கு குழந்தை பிறப்பதில் என்ன பெரிய அதிசயம் இருந்து விட முடியும் என்கிறீர்களா?
ஆரிஃபா விஷயத்தில் அதிசயம் தான். ஆரிஃபாவுக்கு கடந்த மாதம் பிறந்தது ஒரே ஒரு குழந்தை, சரி அப்படியெனில் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க அவர் மேலும் ஓராண்டு அல்லது 10 மாதங்களாவது காத்திருக்கத்தான் வேண்டுமில்லையா? ஆனால் ஆரிஃபாவுக்கு முதல் குழந்தை பிறந்த அடுத்த மாதமே இரண்டாவதாகவும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறது. இது மருத்துவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியைக் கிளப்பியது. அதெப்படி சாத்தியம்?! என்று அவர்கள் மூளையைக் கசக்கி யோசித்ததில் தெரிய வந்தது ஆரிஃபாவுக்கு இருந்த இரண்டாவது கருப்பை உண்மை.
கடந்த மாதம் ஆரிஃபாவுக்கு சுகப்பிரசவத்தில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அப்போது கருப்பையில் மீண்டும் இரட்டைக் குழந்தைகள் இருப்பது மருத்துவர்களுக்குத் தெரியாமல் போனது பேரதிசயம். ஆனாலும் அந்த அதிசயம் நிகழ்ந்ததின் காரணம் ஆரிஃபாவின் இரண்டாவது கருப்பையில் குழந்தை உண்டாகி இருந்ததே!
தனக்கு இரண்டு கருப்பைகள் இருப்பதும் அதில் முதல் குழந்தை பிறந்த பின்னும் கூட இரண்டாவது கருப்பையில் டபிள் டிலைட்டாக இரட்டைக் குழந்தைகளைச் சுமந்து கொண்டிருந்ததும் ஆரிஃபாவுக்குமே தெரியாமல் தான் இருந்திருக்கிறது. முதல் குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த 28 நாட்களில் மீண்டும் தனக்கு பனிக்குடம் உடைதல் நிகழவே ஆச்சர்யபட்டுப் போன ஆரிஃபா உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்ததில் அவருக்குப் பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவரான ஷீலா போடருக்கும் பேரதிர்ச்சி.
அந்த அதிர்ச்சி தந்த பதட்டம் நீங்காமலே ஷீலா அறுவை சிகிச்சைக்கு தயாராக இம்முறை கடந்த வெள்ளியன்று ஆரிஃபாவுக்குப் பிறந்தது ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள்.
ஆரிஃபா கடந்த செவ்வாய் அன்று ஆரோக்யமான தனது மூன்று குழந்தைகளுடன் வீடு திரும்பி விட்டதாகத் தகவல்.
ஆரிஃபா சிகிச்சை பெற்ற ஜெசூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவரான திலீப் ராய், தனது 30 ஆண்டுகால மகப்பேறு மருத்துவர் வாழ்வில் இப்படியொரு கேஸை இதுவரை சந்தித்ததே இல்லை என்கிறார்.
ஏழைப்பெண்ணொருத்தி எவ்வித சுகவீனங்களும் இன்றி மூன்று குழந்தைகளைப் பிரசவித்தது ஆரோக்யமானதே என்றாலும் கூட ஆரிஃபா முதலில் சிகிச்சைக்குச் சென்ற ஹுல்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர்கள் ஆரிஃபா சுல்தானாவின் இரண்டாவது கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் வளர்வதை தங்களது சிகிச்சையின் போதும் குழந்தைப் பேற்றுக்கான சோதனைகளின் போதும் கண்டுபிடிக்காமல் விட்டது மிகப்பெரிய மருத்துவத் தவறுகளில் ஒன்று என்று கண்டிக்கவும் தவறவில்லை அவர்.
மருத்துவருக்கு இப்படி ஒரு கவலை என்றால்.. இப்போது ஆரிஃபாவுக்கு வேறொரு கவலை பிரதானமாக விஸ்வரூபமெடுத்து அச்சுறுத்தி வருகிறது.
தனக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டது என்று நிம்மதியாக இருந்த நேரத்தில் மீண்டும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது மனம் முழுக்க மகிழ்ச்சியை நிரப்பினாலும் கூட இந்த மூன்று குழந்தைகளையும் எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோம் என்ற கவலை தான் கடந்த ஒரு வாரமாக ஆரிஃபாவை ஆட்டிப் படைக்கிறது.
ஆரிஃபாவின் கணவருக்கு மாதச் சம்பளமாகக் கிடைப்பது 6000 டாக்கா மட்டுமே. அமெரிக்க டாலரில் சொல்வதென்றால் மாதம் $70 மட்டுமே. இதை வைத்துக் கொண்டு இந்த மூன்று குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை எப்படி என்னால் ஆரோக்யமாக வளர்க்க முடியும் என்று தெரியவில்லை. அந்தக் கவலை தான் என்னை வாட்டுகிறது என்கிறார் ஆரிஃபா.
ஆரிஃபாவின் மனக்கிலேசம் அவரது கணவரான சுமோன் பிஸ்வாஸுக்கு இல்லை. அவரது முகத்தில் பெருமிதம் கூத்தாடுகிறது. இந்த எதிர்பாராத குழந்தைச் செல்வம் அல்லா கொடுத்தது. அவர்களை ஆரோக்யத்துடன் அளித்ததற்காக அல்லாவுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். எப்பாடு பட்டாவது என் குழந்தைகளை மகிழ்வுடன் வளர்க்க நான் உழைப்பேன் என்கிறார் அவர்.