அலுவலக ஆண்களை, பெண்கள் நெருங்கிய உறவுகளாகப் பாவிக்க வேண்டிய அவசியமில்லை: திலகவதி ஐபிஎஸ்! 

பணியிடங்களில் பெண்களுக்கு நேரக்கூடிய பாலியல் அத்துமீறல்கள் மற்றும் பணி நிமித்தமான அடக்குமுறைகளை ஒரு பாதுகாப்பு வரம்பில் நின்று எப்படிக் கையாள்வது என்பது குறித்தான கேள்விக்கு
அலுவலக ஆண்களை, பெண்கள் நெருங்கிய உறவுகளாகப் பாவிக்க வேண்டிய அவசியமில்லை: திலகவதி ஐபிஎஸ்! 

தினமணி.காம்  ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணலுக்காக திலகவதி ஐபிஎஸ் அவர்களுடனான உரையாடலில் பணியிடங்களில் பெண்களுக்கு நேரக்கூடிய பாலியல் அத்துமீறல்கள் மற்றும் பணி நிமித்தமான அடக்குமுறைகளை ஒரு பாதுகாப்பு வரம்பில் நின்று எப்படிக் கையாள்வது என்பது குறித்தான கேள்விக்கு பதில் கிடைத்தது. கேள்விக்கான பதிலை அவர் தனது சொந்த வாழ்வியல் அனுபவமொன்றின் மூலமாகவே பகிர்ந்து கொண்டார்.

திலகவதி ஐபிஎஸ் அளித்த  விளக்கத்தின் காணொலி...

பணியில் சேர்ந்த முதல்நாளே எனக்கு மெமோவுடன் தான் தொடங்கியது. நான் அப்போது ஒரு கொலை வழக்கு பற்றி விசாரிக்க நேரடியாகக் களத்துக்குச் சென்று பணியாற்ற வேண்டிய சூழல் இருந்ததால் அந்தப் பணியை முதலில் முடிக்க அங்கே சென்று விட்டேன். அதே நேரத்தில் வேலூரில் விவசாயப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. போராட்டத்தை சமரசம் செய்ய மாவட்ட ஆட்சியர் வந்திருந்தார். மாவட்ட ஆட்சியர் வரும் போது அதை முக்கியமாகக் கருதாமல் அவர் வரும்ப்போது அங்கே இல்லாமல் எங்கே ஊர் சுற்றப் போய்விட்டீர்கள் என்று கேட்டு என் மேலதிகாரி அப்போது எனக்கு மெமோ கொடுத்தார். இது தான் பணியேற்றிக் கொண்ட எனது முதல்நாள் அனுபவம். இந்த மெமோவை நான் அப்படியே தூக்கிப்போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றிருக்க வேண்டும் என்று என் மேலதிகாரி விரும்பினார். ஆனால், நான் அப்படிச் செய்ய விருப்பமற்று என் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டு நியாயமில்லை என்று விளக்கி மெமோவுக்கு பதில் அனுப்பினேன்.

இப்படித் தொடங்கி எனது பணிக்காலம் முழுவதுமே மெமோக்கள் மற்றும் அதற்கான எனது பதில்களால் நிரம்பியதாகத் தான் இருந்தது. இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. என் மீது கோபம் கொண்டு என் செயலை முடக்க நினைத்தவர்கள் என்னை எங்கே ட்ரான்ஸ்ஃபரில் அனுப்பனாலும் நான் அங்கே செல்லத் தயாராகவே இருந்தேன். ஒருமுறை என் மேலதிகாரி என்னை அழைத்து; காவல்துறை அதிகாரி பணிக்கு இப்படிப்பட்ட ஆக்ரோஷமான பதில்கள் எல்லாம் ஒத்துவராது. உங்களுக்கு மெமோ கொடுத்த அதிகாரியை நேரில் சந்தித்து, அவரிடம், சார், நான் உங்கள் சகோதரியைப் போல, உங்களது ஆணைக்கு கட்டுப்பட்டு வேலை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் பெண் அதிகாரி. எனக்குப் போய் ஏன் இப்படியெல்லாம் மெமோவுக்கு மேல் மெமோ தருகிறீர்கள், கொஞ்சம் தயவு செய்யுங்கள்’ என்று சொல்லிப்பாருங்கள், அவர் உங்கள் மீதான கோபத்தைக் குறைத்துக் கொண்டு பிறகு சமாதானமாகி விடுவார். விஷயத்தை இப்படிச் சமாளியுங்கள் என்றார்.

எனக்கு அதில் விருப்பமில்லை. நான் அந்த மேலதிகாரியைச் சந்தித்தேனே தவிர, எங்கள் இருவருக்கும் மேலதிகாரியாக இருந்தவர் சொன்னது போல தயவுபண்ணி என்னை உங்கள் சகோதரியாக நினையுங்கள் என்றெல்லாம் மன்றாடவில்லை. நியாயமான முறையில் என் மீதான குற்றச்சாட்டை மறுத்துப் பேசி விளக்கம் அளித்து விட்டு வந்தேன். என்னை விட வயதில் மூத்தவராக இருந்ததால் அவர் மேலதிகாரியாக இருந்து வந்தார், அதற்காக அவரிடம் போய் உறவுமுறை சொல்லி சமரசமாக வேண்டுமென்ற நிர்பந்தம் எனக்கு இல்லை.

நான் பெண்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புவது இதைத்தான்;

பெண்கள் இன்று அலுவலகம் சென்று பலதிறப்பட்ட ஆண்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது. அப்படியான சந்தர்பங்களில் பெண் என்பதற்காக ஆண்கள் நம்மை முடக்க நினைக்கும் போது, என்னை தங்கையாக நினைத்துக் கொள்ளுங்கள், அக்கா, அம்மாவாக, மகளாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கெஞ்சவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், பெரும்பாலான ஆண்கள் அப்படியெல்லாம் நினைப்பதில்லை என்பதே நிதர்சனம். அதே போல அந்த ஆண்களையும் அண்ணனாக, தம்பியாக, அப்பாவாக நினைத்துக் கொண்டு சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நியாயப்படி அலுவலகத்தில் ஆண்கள், பெண்கள் என்ற ஏற்றத்தாழ்வெல்லாம் பார்க்கக் கூடாது. எல்லோரும் சமம் எனும்போது அவர்களை சக ஊழியர்களாகக் கருதி, அதற்குண்டான மரியாதையை அளித்தால் போதும். அதுவே பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யக்கூடும்.
- என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com