கல்யாணத்துக்கு மட்டும் தான் அனுமதி குப்பைக்கு இல்லை... கட்டுங்க ஃபைன்! குப்தா ஃபேமிலியிடம் கறார் காட்டிய உத்தரகாண்ட் முனிசிபாலிட்டி!

திருமணம் முடிந்ததும் அந்த ஏரியாவில் குவிந்த குப்பைகளைக் கண்டதும் ஒரு மாநில அரசுக்கே மலைப்புத் தட்டியதென்றால் அதிசயம் தான். மொத்தமாகச் சொல்வதென்றால் 4000 கிலோ குப்பைகள்!
கல்யாணத்துக்கு மட்டும் தான் அனுமதி குப்பைக்கு இல்லை... கட்டுங்க ஃபைன்! குப்தா ஃபேமிலியிடம் கறார் காட்டிய உத்தரகாண்ட் முனிசிபாலிட்டி!

வியாபார நிமித்தமாகத் தென்னாப்பிரிக்காவில் செட்டில் ஆன இந்திய வம்சாவளிக் குடும்பங்களில் ஒன்று குப்தா ஃபேமிலி. இவர்களது பூர்வீகம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம். 1993 ஆம் ஆண்டு வாக்கில் அவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்தனர். அன்று முதல் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்வதுடன் உலகின் பலநாடுகளில் தங்களது வர்த்தக சாம்ராஜ்யத்தை விரிவாக்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.

இவர்களை ஏன் உத்தரகாண்டு முனிசிபாலிட்டி தற்போது குப்பைகளை நீக்குவதற்காக ஃபைன் கட்டச் சொல்லி உத்தாவிட்டிருக்கிறது என்றால் சமீபத்தில் இவர்கள் இந்தியாவில் ஊருலகம் மெச்ச நடத்தி முடித்த ஒரு பிரமாண்டத் திருமண விழாவின் காரணமாகத்தான்.

பிரபலங்கள் எல்லோரும் வெகு விமரிசையாக இத்தாலியில் திருமணம் செய்து கொண்டு ரிசப்சனை இந்தியாவில் கொண்டாடும் மோகம் தலைவிரித்தாடும் இந்தியாவிலிருந்து சென்று தென்னாப்பிரிக்காவில் குடியேறிய குப்தா ஃபேமிலுக்கு அவர்களது குடும்பத் திருமணம் ஒன்றை பூர்வீக பூமியில் நிகழ்த்தும் ஆசை வந்திருக்கிறது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம் உத்தரகாண்ட் மாநில ஆலி ஹில்ஸ் மலைப்பிரதேசம்.

அங்கே திருமணம் வெகு ஆடம்பரமாக சுமார் 200 கோடி ரூபாய் செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. திருமணத்தில் உத்தரகாண்ட் முதல்வர் முதல் நடிகை காத்ரீனா கைஃப், யோகா குரு பாபா ராம்தேவ், மாநில மந்திரிகள் எனப் பல வி ஐ பிக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விஐபிக்கள் வருகைக்காக அந்த ஏரியாவில் இருந்த அத்தனை ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளும் புக் செய்யப்பட்டு செலிபிரிட்டி கூட்டத்தாரால் நிரம்பி வழிந்தன. திருமணத்திற்குத் தேவையான பூக்கள் ஸ்விட்ஸர்லாந்தில் இருந்து தருவிக்கப்பட்டன. அந்த அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஹை ப்ரொஃபைல் வெட்டிங்காக நடத்தி முடிக்கப்பட்டது திருமணம்.

எல்லாம் சரி தான். பல் இருக்கிறவன் பகோடா திங்கறான். பணம் இருக்கறவன் 200 கோடி செலவுல கல்யாணம் பண்றான். நாம கண்ணுக்குக் குளிர்ச்சியா வேடிக்கை பார்ப்போம் என்று தான் அந்த மலைவாசிகள் அமைதியாக இருந்திருப்பார்கள். ஆனால் முனிசிபாலிட்டியால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம் திருமணம் முடிந்ததும் அந்த ஏரியாவில் குவிந்த குப்பைகளைக் கண்டதும் ஒரு மாநில அரசுக்கே மலைப்புத் தட்டியதென்றால் அதிசயம் தான். மொத்தமாகச் சொல்வதென்றால் 4000 கிலோ குப்பைகள்!

முன்னதாக கழிவுப்பொருளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து வரும் ஜூலை 7 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் குப்தா ஃபேமிலியின் விரிவான ஆடம்பரத் திருமண ஏற்பாடுகள் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பதாகக் கூறி ஒரு பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்ததால் உத்தரகாண்ட் ஆலி முனிசிபாலிட்டி சுரணை வந்து விழித்துக் கொண்டு குப்தா ஃபேமிலி விட்டுச் சென்ற குப்பைகளை அகற்ற ஃபைன் கட்டுமாறு வலுயுறுத்தியது.

முனிசிபாலிட்டியின் வலியுறுத்தலை ஏற்றுக் கொண்ட குப்தா ஃபேமிலி தரப்பு முதற்கட்டமாக ரூபாய் 54,000 ரூபாய் அனுப்பியுள்ளது. அதைக் கொண்டு சுமார் 150 குவிண்டால் குப்பைகளை இதுவரை அப்புறப்படுத்தப் பட்டுள்ளதாகத் தகவல். இது ஆரம்பம் தான். குப்பை அகற்றும் பணி இன்னும் நிறைவடையவில்லை. துப்புரவுப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் மொத்த பில்லையும் குப்தா ஃபேமிலி கட்டுவதாக ஒப்புக் கொண்டுள்ளது. இது தவிர முனிசிபாலிட்டிக்கு ஒரு வாகனம் வாங்கித் தருவதாகவும் குப்தா ஃபேமிலி ஒப்புக்கொண்டுள்ளதாக நகராட்சித் தலைவர் ஷலேந்திர பன்வார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குப்தா ஃபேமிலி திருமணத்தில் கலந்து கொண்ட உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், திருமணம் மூலமாக இந்த மலைப்பிரதேசத்தை ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத தலமாக மாற்றி அமைத்திருக்கும் குப்தா ஃபேமிலிக்கு பாராட்டு என்று எதையோ பேசி வைக்க தற்போது அந்த சமாச்சாரமும் மக்களிடையே தீவிர விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஆயினும் குப்தா குடும்பத்தாரைப் பொருத்தவரை தங்களது தவறுக்குப் பிராயசித்தம் தேடும் முயற்சியாக தங்களால் விளைந்த சூழல் சீர்கேட்டுக்கு ஃபைன் கட்டிய வகையில் தாங்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com