ஸ்பெஷல்

திருமணமா? முன்னதாக செய்து கொள்ள வேண்டிய 4 மருத்துவப் பரிசோதனைகள்!

16th Dec 2019 01:49 PM | RKV

ADVERTISEMENT

 

குடும்பத்தில் ஒரு திருமணம் நடக்கவிருக்கிறது என்றால் ஜாதகப் பொருத்தம், திருமணச் செலவு, இரு வீட்டார் இருப்பிடங்களுக்கும் இடையில் இருக்கும் தூரம், திருமணத்தை எங்கே நடத்துவது? எத்தனை ஆடம்பரமாக நடத்துவது? யாருக்கெல்லாம் அழைப்பு அனுப்புவது? என்று நாம் பல விஷயங்களைப் பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருப்போம். ஆனால், உண்மையில் ஆராய வேண்டிய விஷயமென்பது மணமகள் மற்றும் மணமகனின் உடல்நலனாக இருந்த போதும், நாம் எப்போதுமே அதைப்பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இதற்கு நம்பிக்கை என்று பெயர் சூட்டி நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ளவும் நாம் மறப்பதில்லை. இன்றைய இளைஞர்களிடையே பெருகி வரும் விவாகரத்து வழக்குகளுக்கு இந்த அசட்டு நம்பிக்கை கூட ஒரு காரணமாகி விடுகிறது. மணமகனுக்கோ, மணமகளுக்கோ ஏதேனும் வியாதி இருந்து அதை மறைத்தோ அல்லது அறியாமலோ திருமணத்தை நடத்தி வைத்து விட்டுப் பிறகு அவஸ்தைப்படுவானேன். முன்னெச்சரிக்கையாக திருமணம் என்று முடிவானதுமே இல்லற வாழ்வை தடங்கலின்றி மேற்கொள்ளத் தேவையான அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளை மட்டுமேனும் மேற்கொண்டு விடலாமே என்று உங்களில் யாருக்கேனும் இதுவரை தோன்றியிருக்கிறதா? இதுவரை தோன்றியிருக்கவில்லை என்றாலும் இனியேனும் கீழ்க்காணும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு விடுங்கள் என்கிறார்கள் விவரமறிந்த மருத்துவர்கள்.

திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் முன் செய்து கொள்ள வேண்டிய 4 முக்கியமான மருத்துவப் பரிசோதனைகள்

  • மலட்டுத்தன்மை பரிசோதனை ( Infertility test )
  • ரத்த வகைப் பொருத்தம் காணும் பரிசோதனை (Blood group compatibility test )
  • மரபணு நோய் பரவல் நிலை குறித்த பரிசோதனை (Genetically transmitted conditions test )
  • பால்வினை நோய்த் தொற்றுகளுக்கான பரிசோதனை (​STD test)

இந்த 4 அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்ட பின்பு. நீங்கள் திருப்தியாக திருமண வாழ்வில் இணையலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். அவர்கள் சொல்வதிலும் அர்த்தமில்லாமல் இல்லை.

ADVERTISEMENT

மலட்டுத்தன்மை பரிசோதனை ( Infertility test )

மணப்பெண் மற்றும் மணமகனின் கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையானது ஒரு ஆரோக்கியமான குழந்தையை உருவாக்கித் தரும் அளவுக்கு இருக்கிறதா என்பதைப் பற்றி அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் பரிசோதனையே மலட்டுத் தன்மைக்கான பரிசோதனை. கருவுறுதலை ஒத்திப் போடக்கூடியவர்கள் கூட தங்களது தாம்பத்திய வாழ்க்கை ஏமாற்றமின்றி நிறைவாக அமைய இந்தப் பரிசோதனையை மேற்கொண்டு தெளிவடைவது நல்லது தான். ஒருவேளை உங்களுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபடுவதிலோ அல்லது எதிர்காலத்தில் குழந்தைக்கான திட்டமிடலுக்கோ கூட இந்தப் பரிசோதனை நிச்சயம் உதவலாம். அது மட்டுமல்ல, முடிவுகள் எதிர்மறையாக இருந்தால் அதைத் தீர்ப்பதற்கான முறையான சிகிச்சைகளைப் பெறவும் இந்தப் பரிசோதனை உதவலாம்.

ரத்த வகைப் பொருத்தம் காணும் பரிசோதனை (Blood group compatibility test )

இந்தப் பரிசோதனையானது மிக மிக முக்கியம் என்று சொல்ல முடியாது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு நீங்கள் உடனடியாகக் குழந்தை பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டால், உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் ஒரே Rh காரணி (ரீசஸ் காரணி) இருப்பது முக்கியம். ஒருவேளை, உங்களது இரத்தக் குழுக்கள் ஒருவருக்கொருவர் பொருந்தவில்லை என்றால், அது கர்ப்ப காலத்தில் சிக்கல்களை உருவாக்கக்கூடும். Rh பொருந்தாத தன்மை இருந்தால் அது இரண்டாவது குழந்தைக்கு ஆபத்தாக முடியும். ஏனெனில் பொருந்தாத ரத்த வகையுள்ள கர்ப்பிணிப் பெண்ணின் இரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகள் கருவிலிருக்கும் குழந்தையின் இரத்த அணுக்களை அழிக்கும் தன்மை கொண்டவை என்பதே இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம். அதனால் இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்வதும் இன்று முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மரபணு நோய் பரவல் நிலை குறித்த பரிசோதனை (Genetically transmitted conditions test )

மரபணு நோய்கள் என்பவை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எளிதாகக் கடத்தப்படக் கூடியவை. எனவே, இந்த நாள்பட்ட மருத்துவ நிலைமைகளுக்கு மிகவும் தாமதமாகிவிடும் முன் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். தலைமுறைகள் தோறும் மரபணு வழியாகக் கடத்தப்படும் நோய்களில்  மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், சிறுநீரக நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை அடங்கும். சரியான நேரத்தில் இவ்வகை நோய்களைக் கண்டறிதல் என்பது மிக முக்கியம். ஏனெனில், அவற்றால் உயிருக்கு ஆபத்தான நிலை வருமுன் நாம் நமது சிகிச்சையைத் தொடங்கி அதிலிருந்து நிவாரணம் பெற இந்த மருத்துவப் பரிசோதனை நமக்கு நிச்சயம் உதவும்.

பால்வினை நோய்த் தொற்றுகளுக்கான பரிசோதனை (​STD test)

திருமணத்திற்கு முன்பே உடலுறவில்  ஈடுபடுவது என்பது இன்றைக்கு சர்வ சாதாரணமாகி விட்டது. லிவிங் டுகெதர் என்று அதற்குப் பெயரிட்டு அதையும் சற்றேறக்குறைய இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாழ்க்கைமுறைகளில் ஒன்றாக்கி விடத் துடிக்கிறார்கள் இன்றைய இளைஞர்களும், இளம்பெண்களும். நிலைமை அப்படி இருக்கையில், ஜோடிகள் மாறும் நிலை ஏற்படலாம். அப்போது இரு தரப்பினரும் பால்வினை நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவ்வகை நோய்களில் எச்.ஐ.வி / எய்ட்ஸ், கொனோரியா, ஹெர்பெஸ், சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் சி போன்றவை அடங்கும். இந்த நோய்களில் சில உயிருக்கு ஆபத்தானவையாகவும்,  வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தன்மை கொண்டவையாகவும் இருப்பதால், எஸ்.டி.டி பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமெனக் கருதப்படுகிறது.

தீ என்று சொல்வதால் மட்டுமே நாக்கு சுட்டு விடப் போவதில்லை எனும்படியாக ஒருவேளை மேற்காணும் பரிசோதனைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்ட பின் உங்கள் திருமண இணையின் மருத்துவ சோதனை அறிக்கைகள் ஒருவேளை நேர்மறையானதாக மாறினால், அது எதிர்காலத்தில் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய உளவியல் மற்றும் உளவியல் அதிர்ச்சியிலிருந்து உங்களைக் காப்பாற்றும், அத்துடன் நீங்கள் உங்கள் திருமண முடிவில் மேலும் முன்னேற விரும்புகிறீர்களா? அல்லது அத்துடன் முறித்துக் கொள்ள விரும்புகிறீர்களா? என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ள இந்தப் பரிசோதனைகள் உதவலாம். 

முடிவு எதுவாயினும் வரும் முன் காப்போம் எனும் மனநிலை நல்லது தானே!

ADVERTISEMENT
ADVERTISEMENT