கி.ரா வின் ‘அந்தமான் நாயக்கர்’

இதில் எல்லாக் கதைகளிலுமே கிணற்றுக்குள் மிதக்கும் சூரியனாய் மறைபொருளாய்ப் பளிச்சிடுவது நம்பிக்கை மோசங்களே.
கி.ரா வின் ‘அந்தமான் நாயக்கர்’

கி.ரா வின் அந்தமான் நாயக்கரை நான் வாங்கியது 2007 ஆம் வருட புத்தகக் கண்காட்சியில். இரண்டு மூன்று முறை வாசித்து விட்டேன். ஒவ்வொரு முறையுமே வாசிக்க அலுப்பில்லாத கதை இது.

’கோபல்ல கிராமம்' போலவே சமகால நிகழ்வை கதை வடிவில் கூறும் உத்தி... வெள்ளந்தியான பேச்சு நடையில் வசீகரிக்கிறது. கி.ரா வைப் பொறுத்தவரை நாவல்களில் கதை மட்டுமல்ல, கதையில் நடமாடும் மனிதர்களும் ஏதோ அறிந்த, ரொம்பத் தெரிந்த உறவுகளைப் போன்ற உணர்வை ஏற்படுத்திச் செல்வார்கள். அது இந்த நாவலுக்கும் பொருந்துகிறது .

அந்தமான் நாயக்கரின் அடிநாதம் நம்பிக்கை மோசமும், துரோகத்தின் வலியுமே.

நம்பிக்கை மோசத்தின் வெவ்வேறு வடிவங்களை இங்கே கிளைக்கதைகளிலும் கூட நாம் காணலாம். நாவலை வாசித்து விட்டு நாம் நமக்குப் பிறர் செய்த துரோகங்களையும், நாம் பிறருக்குச் செய்த துரோகங்களையும் ஒருமுறையேனும் நேர்மையுடன் சிந்தனையில் ஓட்டிப் பார்க்கத் தூண்டும் ஆழ்ந்த படைப்பு இது.

இனி கதைக்குப் போகலாம்;

கதாபாத்திரங்கள்:

  • அந்தமான் நாயக்கர்
  • பல்ராம் நாயக்கர் (கதையில் அழகிரி அந்தமான் ஆனபிறகு வந்து பல கிளைக் கதைகள் சொல்பவர்)
  • ஆண்டியப்பன் (அந்தமானின் பக்கத்து வீட்டுக்காரர்)
  • பட்டா மணியம் நாயக்கர் (ஊர்ப் பெரியதனக்காரர்)
  • பொம்பளே வண்டி நாயக்கர் என்ற புலிவாரு பொன்னையா நாயக்கர்
  • பொண்டுகன் செட்டியார் (பட்டப் பெயர் தான் இவர் ஒரு கிழங்கு வியாபாரி நிஜப் பெயர் நாவலில் இல்லை)
  • சங்கரப்பன் (இளைய தலைமுறைக்கல்லூரி மாணவன்)
  • வெங்கிடம்மா (இளம் அழகிரியின் மானசீகக் காதலி)
  • சொக்கய்யர்
  • பேரம்மா (இளம் அழகிரியின் அம்மா)

"ஒரு குற்றமும் அறியாத விவசாயி ஒருத்தனை சுதந்திர இந்தியாவின் போலீஸ் அடித்தே கொன்று போடும் அவலம் தான் இக்கதை."

வெள்ளை அரசை எதிர்த்து நடந்த கொடிப் போராட்டத்தின் போது ஒரு கரிசல் கிராமத்தில் விளையாட்டுப் போல ஒரு இளைஞன் மூவர்ணக் கொடியை மரத்தில் ஏறி கட்டி விடுகிறான், மணியாச்சி ஜங்ஷனில் வாஞ்சிநாதன் வெள்ளைக்கார கலெக்டரை சுட்டுக் கொன்றதற்குப் பிறகு சுற்று வட்டார ஊர்களில் எந்த சாதாரணக் குற்றங்கள் நடந்தாலும் கொடூரமாக நடந்து கொள்ள ஆரம்பித்தது வெள்ளை அரசு.

கை ராட்டை சின்னம் பதித்த மூவர்ணக் கொடியை ஊர்க்கரை மரத்தின் உச்சியில் கொண்டு போய் ராவோடு ராவாய் விளையாட்டுப் போல கட்டி வைத்து விட்டு வந்து விடுகிறார் இளம் அழகிரி, அந்தக் காலத்தில் அது சட்ட விரோதம், ஊர்ப்பெரியதனம் மணியம் நாயக்கர், அழகிரி தான் இதைச் செய்தான் என்பதை அறிந்து அழகிரியையே மரத்தில் ஏறி ஏற்றிய கொடியை இறக்கச் சொல்கிறார். அதற்கு அழகிரி ,

"ஏதோ கட்டிட்டேம், ஏத்துன கொடிய எப்பிடி எங்கையாலையே எறக்குறது, இனிமே இப்பிடிச் செய்ய மாட்டேம்."

என்று நல்ல தனமாகவே மரியாதையோடு பதில் சொல்கிறார், மணியம் கெத்தான ஆள் "ம்ம்... என்ற செருமலோடு அவர் அழகிரியைப் போகச் சொல்லவே ஊர்க்காரர்கள் மணியம் மன்னித்து விட்டார் என்றே நினைக்கிறார்கள். ஆனால் மணியம் செருமியதற்கு அர்த்தம் இளவட்டமான அழகிரி ஜெயிலுக்குப் போய் அந்தமான் நாயக்கர் எனும் கிழவனாக திரும்பி வருவதில் முடிகிறது.

"வெள்ளைக்காரன் என்ன மணியம் நாயக்கரோட பாட்டனா? அப்படி என்ன விசுவாசம் அவருக்கு?!"

சொல்லிச் சொல்லி பேசிப் பேசி ஆதங்கமும் ஆற்றாமையுமாக ஓய்ந்து போகிறார்கள் கரிசல் காட்டு சம்சாரிகள்.

மணியம் நாயக்கரின் வெள்ளைப் பாசத்துக்கும் அர்த்தம் இல்லாமல் இல்லை, அரையணா சம்பளம் என்றாலும் அவர் அதை நேரடியாக இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜிடம் இருந்து அல்லவா பெற்றுக் கொண்டு இருந்தார் அப்போது, இன்னும் சொல்லப் போனால் அவரது வீட்டுப் பட்டா சாலையில் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் ஒரு கையில் உலக உருண்டையோடும் மறுகையில் செங்கோலும் ஏந்திக் கொண்டு கோஹினூர் வைரம் பதித்த அழகிய கிரீடத்துடன், அளவான மீசையும் மிதமான தாடியுமாய் நீலக் கண்களோடு நிற்கும் பெரிய சைஸ் படம் சட்டமிடப்பட்டு மாட்டி வைக்கப் பட்டிருக்கும் அதைப் பார்த்தாலே பார்ப்போர் எவரும் உருகி விடுவார்கள்... மணியத்தை என்னவென்று சொல்ல!!!

சரி இனி அழகிரிக்கு வருவோம் அவர் தானே கதையின் நாயகர்.

வெள்ளைக்காரன் ஆண்ட காலத்திலேயே... ஒரு ஜென்மம் அல்லது (ஆயூள்) 21 வருசம் தண்டனை, நல்ல தனமாக இருந்தால் 18 வருசம்... டங்கா முறித்து தப்பிக்கப் பார்த்ததால் ரெட்டை ஜென்மம் ஆக மொத்தம் 42 வருசம் தண்டனை அனுபவிக்கிறார் அழகிரி.

ஓட்டப் பிடாரம் சிதம்பரம் பிள்ளைக்கும் ரெட்டை ஜென்மம் தான் (வ.ஊ.சிதம்பரனார்) அவரென்ன கொலையா செஞ்சார்?! அந்த தீர்ப்பை எதிர்த்து அன்றைக்கு தான் முதல் முதலாக "கடையடைப்பு" நடந்ததாம் திருநெல்வேலியிலே. கதையில் சொல்லப்படும் செய்தி இது.

"கசாகூளம்" இந்த வார்த்தை கி.ராவால் இரண்டு மூன்று இடங்களில் சொல்லப் படுகிறது இங்கே அர்த்தம் பிடிபடவில்லை. இப்படி கொடூரமான தண்டனை அளிப்பதற்கு காரணம் "இப்பிடிச் செஞ்சா தாம் சர்காரை எதுக்குறவங்களுக்கு ஒரு பயம் நாளைப் பின்ன இருக்கும்னுட்டு தாம்" என்பதே.

அழகிரி ஜெயிலுக்குப் போனது ஒரு கதை என்றால் அவர் ரெட்டை ஜென்மம் முடிந்து அந்தமான் நாயக்கராக திரும்பி வந்து விடுகிறார். அங்கே மறுபடியும் பரபரப்பாக கதை ஆரம்பிக்கிறது.

திரும்பி வந்த அழகிரி நாயக்கரை வரவேற்க அவரது குடும்பத்தில் எவரும் மிச்சம் மீதியில்லை, அவரது ஓட்டு வீடும் தூரத்து உறவுக்காரியான ஒரே ஒரு வயதான அத்தையும் மட்டுமே மீள்கிறார்கள், வயிற்றுப் பாடு என்பது ஜெயிலுக்குப் போய் வந்தவனுக்கும் இருக்கும் தானே,

அழகிரி தரிசாய்ப் போன தன் நிலத்தை மறுபடி செம்மையாக்க முயல்கிறார். அங்கிருந்து அந்தமான் நாயக்கராக தொடங்கும் அவரது பயணம், கதை முடிவில் எந்தக் கொடியால் ஜெயிலுக்குப் போனாரோ அந்தக் கொடி மண்ணில் வீழவும் அந்தமான் போலீசின் அராஜக வன்முறையால் விவசாயப் போராட்டத்தில் லத்தியடி பெற்று கண்களை ஒரேயடியாக மூடிக் கொள்வதில் முடிந்தே போகிறது முற்றிலுமாய்.

நாவலில் ரசமான பகுதிகள்:

பல்ராம் நாயக்கரோடு அந்தமான் தன் நிலத்தை சீர்திருத்த ஆரம்பிக்கிறார் என்று சொன்னேனில்லையா?

கரிசல்காட்டு சம்சாரிக்கு முதல் எதிரி அருகு தான், வெள்ளைக்காரனைப் போலத் தான் இந்த அருகும் சில இடங்களில் இடுப்பளவு ஆழம் கூட தோண்ட வேண்டியதிருக்கும், புஞ்சை முழுவதுமே புரட்டிப் போட்டது போலத் தான், எத்தனை வேட்டையாடினாலும் பூமியில் எலிகள் இருந்து கொண்டே தானே இருக்கும்.. அப்படித் தான் இந்த அருகும், வெள்ளைக்காரனும், அருகெடுப்பது ஒரு நொரநாட்டியம் பிடித்த வேலை, கடப்பாரை தான் இருந்தது வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னால், அது இன்னும் சள்ளை பிடித்த வேலை, வெள்ளைக்காரன் கொண்டு வந்த பல்க்கம்பி இருந்ததோ தப்பித்தார்கள் சம்சாரிகள்.

இப்படியாகப்பட்ட கஷ்டங்களோடு பல்ராம் நாயக்கரும், அந்தமான் நாயக்கரும் நிலத்தை குடைந்து கடைந்து சீர்திருத்துகையில் கஞ்சிக்கு என்று உணவு இடைவேளை ஒன்று வரக் கூடும் இல்லையா அந்நேரம் அவர்களது குடும்பம்... இழப்புகள்... போன்ற பாடு பஞ்சங்களைப் பற்றியும் கொஞ்சம் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது கி.ராவுக்கே உரிய பாணியில் கிளைக்கதைகள் சில சுவாரஸ்யமாகப் பிரிகின்றன .

அந்தக்கதைகள் மிக, மிக ரசமானவை என்பதோடு யோசிக்க வைக்கும் பகடிகளும் கூடத்தான்.

அந்த வரிசையில் இந்நாவலில் ;

  • விரலக்கா கதை
  • முட்டைக் கோழி கதை
  • பொம்பளே வண்டி நாயக்கர் கதை
  • எட்டு இட்லி பொண்டுகன் செட்டியார் கதை
  • பல்ராம் நாயக்கர் சொல்வதாக வரும் ரயில் வந்த கதை... விருந்தாடியைப் பிடித்து கட்டிப் போட்ட கதை
  • இப்படிச் சில கதைகள். 

இதில் எல்லாக் கதைகளிலுமே கிணற்றுக்குள் மிதக்கும் சூரியனாய் மறைபொருளாய்ப் பளிச்சிடுவது நம்பிக்கை மோசங்களே.

நூல் : அந்தமான் நாயக்கர்
ஆசிரியர் :கி.ராஜநாராயணன்.
விலை : ரூ/100
பதிப்பகம் :அன்னம் வெளியீடு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com