துணிந்து சோதனை எலியாகி ‘மொபைல்’ கிட்னி திருட்டுக் கும்பலை பிடித்துக் கொடுத்த சாமர்த்திய இளைஞர்...

நம்மைச் சுற்றி ஆயிரம் கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், அத்திப்பூத்தாற் போல நடக்கும் இம்மாதிரியான நல்ல விஷயங்கள் தான் மனிதத்தை தொடர்ந்து நீடிக்கச் செய்கின்றன! வாழ்த்துக்கள் ஜெய்தீப்!
துணிந்து சோதனை எலியாகி ‘மொபைல்’ கிட்னி திருட்டுக் கும்பலை பிடித்துக் கொடுத்த சாமர்த்திய இளைஞர்...

ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெய்தீப் ஷர்மாவுக்கு வயது 24. அவருக்கு திடீரென ஒருநாள் அறியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் ஒலித்த குரல்... ஜெய்தீப்புக்கு, தன்னுடைய கிட்னியை விற்பனை செய்ய சம்மதமா? எனக் கேட்கிறது. முதலில் திடுக்கிட்டாலும் பிறகு உடனடியாக அதிலெல்லாம் தனக்கு விருப்பமில்லை என ஜெய்தீப் கூறியவுடன் எதிர்முனையில் பேசியவர்கள், சரி தற்போதைக்கு உங்களுக்கு விருப்பமில்லா விட்டாலும் கூட எதிர்காலத்தில் உங்கள் மனம் மாறலாம். உங்களுக்கான பொருளாதாரத் தேவைகள் அதிகரித்து பணத்தேவை கழுத்தை நெரிக்கையில் எங்களது சேவை உங்களுக்குத் தேவைப்படலாம். எனவே அப்போதாவது எங்களைக் கூப்பிட மறக்காதீர்கள் என்ற கோரிக்கையோடு அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

தனது பெற்றோர்களின் ஆசைக்கனவை நிறைவேற்றுவதற்காக புனேவில் இருக்கும் சிம்பயோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெட்டில் எம்பிஏ பட்டமேற்படிப்பை முடித்த ஜெய்தீப் ஷர்மா ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மத்தியதர வர்க்க பள்ளி ஆசிரியரின் மகன்.

2016 ஆம் ஆண்டில் அவர் ஜெய்ப்பூரில், தனது படிப்பின் ஒருபகுதியாக இண்டர்ன்ஷிப் செய்து கொண்டிருக்கையில் 8169299426 என்ற எண்ணில் இருந்து அவரது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அழைப்பை எடுத்துப் பேசிய போது மறுமுனையின் இருந்தவர் தன்னை இம்தியாஸ் அலி என்று அறிமுகம் செய்து கொண்டு, ஜெய்தீப் விரும்பினால் அவரது கிட்னியை ரூ 20 லட்சத்துக்கு விற்பனை செய்யத் தான் உதவுவதாகக் கூறியுள்ளார்.

இப்படி ஒரு வினோதமான அழைப்பைக் கண்டு அதிர்ந்து போன ஜெய்தீப் அழைப்பை உடனடியாக நிராகரிக்க, அப்போதும் மறுமுனையில் பேசிய நபர் கிடைத்த வாய்ப்பை விடாது, இன்றைக்குத் தேவையில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால் என்ன செய்வீர்கள், ஆகவே இந்த மின்னஞ்சல் முகவரியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தேவை ஏற்படும்  போது dnanetwork123@gmail என்ற முகவரியில் சப்ஜெக்ட் லைனில் I want to sell my kidny' என்ற குறிப்புடன் தொடர்பு கொள்ளவும். என்று கூறி விட்டு அலைபேசி தொடர்பு  துண்டிக்கப்படுகிறது.
 
இந்தச் சம்பவத்தை அப்போதைக்கு ஜெய்தீப் மறந்து விட்டாலும்.  எதற்கும் இருக்கட்டும் என்று பாதுகாப்பு உணர்வுடன் சேமித்து வைத்தார் அந்தத் தொலைபேசி எண்ணை. ஆனால், தொடர்ந்து வந்த நாட்கள் அவரை அந்த சம்பவத்தை அத்தனை எளிதாக மறக்க விடுவதாக இல்லை. நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் தனது நண்பர்களில் சிலருக்கும் இதே விதமான தொலைபேசி அழைப்பு விண்ணப்பங்கள் வந்திருப்பதை அறிந்து கொண்ட ஜெய்தீப். இதை அப்படியே விட்டால் இதனால் அப்பாவிகள் எவரேனும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்படலாம் எனவே இந்த விஷயத்தை சும்மா விடக்கூடாது. இதைக் கண்டித்து ஏதேனும் எதிர்நடவடிக்கையில் இறங்கியே ஆகவேண்டும் என நான் தீர்மானித்த அந்த நொடியில் என் வீட்டு வரவேற்பறை தொலைக்காட்சிப் பெட்டியில் நியூஸ் 24 சேனல் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது தான், நான் உடனடியாகத் தீர்மானித்தேன். இந்த விஷயத்தை அவர்களிடம் எடுத்துச் செல்லலாம் என. அந்த நொடியிலிருந்து இந்தப் போராட்டத்தை எடுத்து நடத்தி முடிவு வரை வெற்றிகர்மாகக் கொண்டு வந்தவர்கள் அவர்கள் தான்.

நியூஸ் 24 சேனல், ஜெய்தீப்புக்கு தங்களுடைய உள்ளூர் செய்தியாளர் ஒருவரது தொடர்பு எண்களை அளித்தது. அவருடைய வழிகாட்டுதலின் படி அடுத்தபடியாக ஜெய்தீப்புக்கு நியூஸ் 24 சேனலின் டெல்லி  கரஸ்பாண்டெண்ட் ராகுல் பிரகாஷின் அலைபேசி எண்கள் கிடைத்தன. அவர் மூலமாக ஜெய்தீப்பை  டெல்லிக்கு  வரவழைத்து 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில்  டெல்லி சாணக்யபுரியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் மேலே குறிப்பிடப்பட்ட சம்பவம் குறித்து ஒரு புகார் அளிக்கப்பட்டது.

அதன் பின் ஜெய்தீப்புக்கு திரும்பிப் பார்க்கவோ, இந்த விஷயத்தில் தான் எடுத்த முடிவைப் பற்றி மீண்டும் ஒருமுறை ஆலோசித்துப் பார்க்கவோ நேரமே இருக்கவில்லை. சப் இன்ஸ்பெக்டர் குர்மீத் சிங் தலைமையில் மொபைல் திருடர்கள் நெட் வொர்க்கைக் கண்டுபிடித்து கூண்டோடு வளைத்துப் பிடிக்க திட்டம் தீட்டப்பட்டது. இந்தியாவில் கிட்னி தானம் அளிக்க முன்வருபவர்களுக்கு பலவிதமான சட்ட ரீதியான கேள்விகள் முன் நிற்கின்றன. அதையொட்டி ஜெய்தீப் தனது அடையாளங்களை மாற்றிக் கொள்ளும்படி பரிந்துரைக்கப்பட்டார். ஜெய்தீப்பின் சிறுநீரகம் ஆந்திராவிலிருந்த நோயாளி ஒருவருக்கு தானமாக அளிக்கப்பட இருந்தது. அதையொட்டி அந்த நோயாளியின் வாரிசாக ஜெய்தீப் மாற்றப்பட்டார். அதற்கான முதற்கட்ட வேலையாக ஜெய்தீப் சலூனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆந்திர நோயாளியின் மகனைப் போல மாற்றப்பட்டார்.

தொடர்ந்து ஜெய்தீப்பின் பெயர் P.Sp. பாணிகுமார் என மாற்றப்பட்டு அதற்கு ஏற்றாற் போல ஆதார் கார்டு மற்றும் வங்கி பாஸ் புக் இரண்டும் தயாரிக்கப்பட்டது.

உள்ளூர் பரிசோதனை மையம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரத்தப்பரிசோதனை உள்ளிட்ட முதற்கட்ட சோதனைகள் எல்லாம் முடிந்தபின் பத்ரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே தான் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக இருப்பதால் கிட்டத்தட்ட 17 விதமான பரிசோதனைகளை ஆய்வகத்திலும் மீதமுள்ள 17 விதமான பரிசோதனைகளை அந்த மருத்துவமனையிலுமாகச் செய்து சுமார் 30 க்கும் மேலான பரிசோதனைகளுக்கு ஜெய்தீப்பை அவர்கள் உட்படுத்தினர். அதுமட்டுமல்ல கணக்கற்ற ஊசிகள் அவருக்குப் போடப்பட்டதோடு பல்வேறு பரிசோதனைகளைக் காரணம் காட்டி சுமார் 3 லிட்டர் ரத்தம் வேறு அவரது உடலில் இருந்து சிரிஞ்சுகள் மூலமாக உறிஞ்சப்பட்டு சேமிப்பில் வைக்கப்பட்டது.

இம்மாதிரியான பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம் ஜெய்தீப்புக்கு பயமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனாலும், அவரைச் சுற்றி எந்நேரமும் மஃப்டி போலீஸார் 10 பேர் உளவு பார்த்துக் கொண்டு பாதுகாப்பு அளித்ததால் அவரால் துணிந்து மேற்கொண்டு கிட்னி திருடர்கள் எந்த எல்லை வரை தான் செல்கிறார்கள் எனப் பார்த்து விடுவோமே?! இப்போது பயந்து போய் முடிவை மாற்றிக் கொண்டு பின்வாங்கினால் பிறகு அப்பாவிகள் எவராவது இப்படியான மொபைல் கிட்னி திருடர்களிடம் மாட்டிக் கொண்டு பலியாவார்கள். அதைவிட நாம் இந்த விஷயத்தில் அடுத்தென்ன நடக்கிறது எனப் பார்த்து விட முன்னோக்கிச் செல்வது தான் சரி! என ஜெய்தீப் முடிவெடுத்தார்.

கடைசியாக ஜெதீப் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. அன்று தான் அவர் தனது பரிசோதனைகளின் இறுதிக் கட்டமாக இந்தியன் மெடிக்கல் அசோஸியேசன் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் தகுதித் தேர்வுக்கு உள்ளாக வேண்டும்.

அப்படி இறுதிச் சோதனைக்கு உள்ளாக்கப்படும் போது மெடிக்கல் அசோஸியேசன் உறுப்பினர்களான மருத்துவர்கள் ஜெய்தீப்பை, அவர் தாக்கல் செய்துள்ள போலிச் சான்றிதழ்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்பார்கள். சான்றிதழ்கள் போலி எனும் பட்சத்தில் முக்கியமான சில கேள்விகளுக்கு ஜெய்தீப் தவறாகப் பதிலளிக்க வேண்டும். அப்போது தான் சந்தேகம் கொண்டு உஷாராகும் மெடிக்கல் அசோஸியேசன் உறுப்பினர்கள் ஜெய்தீப்பை கிட்னி தான அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைத்த நபர் யார்? என்பதை கேள்விக்கு உள்ளாக்குவார்கள். அப்போது தெரிந்து விடும் இத்தனை சர்வ ஜாக்கிரதையாக ஒரு தனி நெட் வொர்க் அமைத்து கிட்னி திருட்டில் ஈடுபடும் நபர்களுக்கு இந்திய மருத்துவக் கழகத்தில் பணியில் இருந்து கொண்டே உதவும் கள்ள ஆடு எதுவென? அதன்படி கடந்த மே மாதம் 22 ஆம் தேதி ஜெய்தீப் இறுதிக் கட்ட நேர்காணலுக்கு உட்படுத்தப் படும் போது முதலில் சரியாக பதில் அளித்துக் கொண்டு வந்த ஜெய்தீப், கடைசியாக உங்கள் தகப்பானாருக்கு எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற கேள்விக்கு தவறாகப் பதில் அளித்தார். அதோடு வீட்டு முகவரி மற்றும் படித்த பள்ளியின் முகவரி உள்ளிட்ட கேள்விகளுக்கும் தவறாகவே பதில் அளித்தார்.

இத்தனையும் நடந்தது கிட்னி தானம் அளிக்கப்பட குறித்த நாளில் இருந்து சரியாக மூன்று நாட்களுக்கு முன்பு. அதாவது கடைசி நேரத்தில்! ஜெய்தீப் அளித்த தகவல்களின் அடிப்படையில்  டெல்லி போலீஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டே இருந்ததில் ஜெய்தீப்பை அணுகிய கிட்னி திருட்டுக் கும்பலுக்கு எனப் பிரத்யேகமாக 6க்கும் குறையாத இணையதளங்கள் இருந்திருக்கின்றன. அந்த இணையதளங்கள் மூலமாகத்தான் அவர்கள் தங்களது நெட்வொர்க்கை நிர்வகித்து வந்திருக்கின்றனர். அவர்களுக்கென முகநூல் கணக்கு இருந்திருக்கிறது. கிட்னி தேவை என விளம்பரம் அளிக்கும் நோயாளிகள் தான் அவர்களது தேடுதல் இலக்கு. அப்படியானவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தோதாக இளஞர்களை மொபைல் மூலமாக வலைவீசிப் பிடித்து பெருந்தொகையை தருவதாக ஆசை காட்டி தங்களது கிட்னி திருட்டு வலையில் சிக்க வைக்கிறார்கள்.

அப்படி பணத்தேவைக்காக இவர்களிடம் வந்து சிக்கும் அப்பாவி இளைஞர்களுக்கும் கிட்னி தானம் அளிக்கப்பட்டதும் பணத்தைப் பெற்றுத் தருவது அவர்களது நோக்கமல்ல, கிட்னி தானமளித்தவர்களை அம்போவென விட்டு விட்டு... தானம் பெற்ற நோயாளியிடமிருந்து மொத்தப் பணத்தையும் ஸ்வாகா செய்து அமுக்கிக் கொண்டு கம்பி நீட்டுவது தான் இவர்களது திட்டம். இவர்களது பண பேரத்தை நம்பி வந்து வலிய வலையில் சிக்கிக் கொள்ளும் அப்பாவி ஏழை இளைஞர்களின் கதி அப்புறம் அதோ கதி தான்!

சில இளைஞர்கள் பொய்யான சான்றிதழ்கள் தயாரிக்க ஒப்புக் கொண்டு திட்டத்தின் கடைசிக் கட்டம் வரை வந்து விட்டு பிறகு பேசியபடி முழுத்தொகை அளித்தால் தான் கிட்னி தானத்திற்கு ஒத்துழைக்க முடியும் என பேரம் பேசினால் அவர்களை அடக்குவதற்கும் கிட்னி திருடர்களிடம் உபாயம் இருந்திருக்கிறது. அந்த இளைஞர்களை வைத்து தயாரித்த போலிச் சான்றிதழ்களைக் காட்டியே அவர்களை இவர்கள் மிரட்டத் தொடங்குவார்கள். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து காவல்துறையிடமும் செல்ல வாய்ப்பின்றி பல இளைஞர்கள் இவர்களது பயங்கர வலையில் வகையாகச் சிக்கிக் கொண்டு தங்களது கிட்னியை தானமளித்து விட்டு பணமும் கிடைக்காமல் ஏமாந்து நிற்கும் அவலமும் நடந்திருக்கிறது.

இந்த அவலங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஜெய்தீப் விஷயத்தில் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி, அவரை அறுவை சிகிச்சைக்காக ஆப்பரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்ற சில நிமிடங்களில் இந்த மொபைல் கிட்னி திருட்டு நெட் வொர்க்கில் அங்கம் வகித்தவர்கள் என 6 பேரைக் கைது செய்தது டெல்லி போலீஸ். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் இவர்களுக்கு உதவிய நபரையும் போலீஸ் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகிறது.

இத்தனையும் சாத்தியமானது சாமர்த்தியம் மிக்க இளைஞரான ஜெய்தீப்பால் தான்!

ஜெய்தீப், தனக்கு மொபைலில் வந்த ‘உங்களது கிட்னியை விற்க சம்மதமென்றால் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளுங்கள்?’ என்று கேள்வியை பல கோடி இந்தியர்களைப் போலவே உதாசீனப்படுத்தி இருந்தால் இன்று டெல்லி போலீஸாரால் இத்தகையை பயங்கரமானதொரு கிட்னி திருட்டுக் கும்பலொன்றைப் பிடிக்க முடியாமலே போயிருக்கும். யாருக்குமே தெரியாமல் மக்களோடு மக்களாக இந்த திருட்டுக் கும்பலும் ஊடுருவி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பணத்தாசை காட்டி அப்பாவிகளின் ஆரோக்யமாக கிட்னிகளை விலை பேசி இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் யார் யாருக்கோ கூவிக் கூவி விற்றுக் கொண்டே இருந்திருக்கும். 

அத்தகையை பரிதாப நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது ஜெய்தீப்பின் ஒத்துழைப்பால் மட்டுமே! என ஜெய்தீப்பின் தீரச் செயலை பாராட்டத் தயங்கவில்லை டெல்லி போலீஸ்! இந்த ஒரு இளைஞர் எடுத்த தைரியமான முடிவு தான் இன்று பலிகடாவாகவிருந்த பல இளைஞர்களைக் காப்பாற்றியுள்ளது.

நம்மைச் சுற்றி ஆயிரம் கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், அத்திப்பூத்தாற் போல நடக்கும் இம்மாதிரியான நல்ல விஷயங்கள் தான் மனிதத்தை தொடர்ந்து நீடிக்கச் செய்கின்றன!

வாழ்த்துக்கள் ஜெய்தீப்!

Thanks to  Manobi Katoch, thebetterindia.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com