என்ன மீண்டும் நக்கீரரா?

"இவர் என்னுடைய நெருங்கிய நண்பர் மிஸ்டர். செழியன், இந்திய இராணுவத்தின் ஆகாயப்படைப் பிரிவில் லெஃப்டினென்ட் கர்னல். எப்போதும் பறந்து கொண்டே இருப்பவர்,
என்ன மீண்டும் நக்கீரரா?

உன்னோடு போட்டி போடு - 46

ஹெட்போன் பாட்டியினுடைய பெருமிதமான வார்த்தையைக் கேட்டவுடன் அத்தனை பேரும் அருட்செல்வர் சீதாராமனை வாழ்த்த,  நாங்கள் இருந்த தீவின் ஓரமாகக் கடல் அலைகளைக் கிழித்துக் கொண்டு ஒரு  மோட்டார் படகு வந்து நின்றது. எல்லாருடைய  பார்வையும் அங்கே திரும்ப,  படகுக்குள்ளிருந்து இராணுவ வீரர் ஒருவர் மிடுக்காக இறங்கி வர,  அவரைப் பார்த்த தமிழ்மணி வேகமாக எழுந்து, ""செழியன் என்ன இந்த நேரத்தில்? நீங்கள் காலையில் தான் வருவீர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனே?''  என்று சொல்லிவிட்டு அவருக்குக் கைகொடுக்க, அவரும் தமிழ்மணிக்கு கைகொடுத்தபடி, ""நான் டெல்லியிலிருந்து விமானம் மூலமாகச் சென்னை வந்து அங்கிருந்து இராணுவ ஹெலிகாப்டரில் இராமேஸ்வரம் வந்தேன். நீங்கள் இங்கே வந்திருப்பதை அறிந்து கொண்டவுடன் உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடோடி வந்தேன்'' என்றார்.  

நாங்கள் அத்தனை பேரும் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, தமிழ்மணி எங்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தார். 

""இவர் என்னுடைய நெருங்கிய நண்பர் மிஸ்டர். செழியன், இந்திய இராணுவத்தின் ஆகாயப்படைப் பிரிவில் லெஃப்டினென்ட் கர்னல். எப்போதும் பறந்து கொண்டே இருப்பவர், நாட்டுப்பற்று மிக்க குடும்பப் பாரம்பரியத்தில் வந்தவர்''  என்று சொல்லிவிட்டு எங்களை எல்லாம் அவருக்கு அறிமுகப்படுத்தினார். 

நாங்கள் எல்லோரும் அவரை வணங்கினோம்.  உடனே அவரும் மகிழ்ச்சியோடு ""நள்ளிரவு தாண்டியும் இந்தக் குழந்தை உள்பட அனைவரும் விழித்திருக்கிறீர்களே! அதுவும் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருக்கிறீர்களே உங்களையெல்லாம் பார்க்கும்போது என் உள்ளம் உற்சாகம் அடைகிறது''  என்றார். உடனே நான் ""சார், நாங்கள் ஒரு நாள் விழித்திருப்பது பெரிதில்லை. உங்களைப் போன்ற நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்கள் நம் இராணுவத்தில் தரைப்படையில், கப்பற்படையில், விமானப்படையில் எப்போதும் விழிப்போடு இருப்பதால்தானே  நாங்கள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறோம்'' என்றேன். 

என் அருகில் இருந்த தமிழையா, ""ஐயா உங்கள் பெயர் செழியன் என்று தமிழ்மணி அறிமுகம் செய்தார். இந்தப் பெயர் தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் மூத்த குடியாகிய பாண்டிய மன்னர்களுக்குரிய பெயர். 

செழியன், மாறன், வழுதி என்னும் அற்புதமான தமிழ்ப்பெயர்களைக் கேட்கும் போதெல்லாம் என் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும். நெடுநல்வாடை எனும் பழந்தமிழ் இலக்கிய நூலொன்றில் போர்க்களத்தில் பாசறையில் உள்ள மன்னன் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தான் என்பதை "நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்' என அதன் ஆசிரியர் நக்கீரர் குறிப்பிடுவார்'' என்று பெருமிதத்தோடு கூறினார். 

""ஆ! மீண்டும் நக்கீரரா''  என்று அதிர்ச்சியோடு கோமாளி கேட்க, ""ஐயா, பதட்டப்பட வேண்டாம். இறைவனோடு வாதிட்ட நக்கீரரும், நெடுநல்வாடை பாடிய நக்கீரரும் வேறு வேறு காலத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஒளவையார் என்ற பெயரிலேயே பல பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள்'' என்று சிறு விளக்கம் கொடுத்தார் தமிழையா. 

""அந்தப் பாண்டிய மன்னன் ஏன் போர்க்களத்தில் தூங்காமல் இருந்தார்?'' என்று மீசைக்காரர் ஆரம்பிக்க, ""அட கொஞ்ச நேரம் சும்மா இருங்கையா, புதுசா ஒரு நண்பர் வந்திருக்காரு ... அவரை வரவேற்று பேசச் சொல்றத விட்டுட்டு'' என்று ஒரு பெரியவர் மீசைக்காரரை அடக்கினார்.

இந்தப் பேச்சு வார்த்தைகளையெல்லாம் பார்த்த லெப்டினென்ட் கர்னல் செழியன் புன்னகை பூத்த முகத்தோடு தன் மீசையை சற்றே முறுக்கியபடி, ""அடடா நான் நேற்று மாலையே உங்களோடு வந்து கலந்து கொள்ளாமல் போனேனே, இந்த அழகிய  தீவைப் போலவே உங்கள் அத்தனை பேரின் உரையாடலும் மகிழ்ச்சியைத் தருகிறதே! அதிலும் இந்த மீசைக்கார நண்பர் மிகுந்த ஆர்வம் உடையவராய் இருக்கிறாரே!'' என்று சொல்ல,

""மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம்டா... அதைவிடப் பாசம் அதிகம்டா'' என்று "நட்புக்காக' படத்தில் விஜயகுமார் போல கோமாளி நண்பர் பாட செழியன் உட்பட அனைவரும் சிரித்தோம். நம் மீசைக்காரருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
""மிக்க நன்றிங்க'' என்று யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தார். 

தமிழ்மணி செழியனிடத்தில் நேற்று முதல் நடந்த விஷயங்களை எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல அவர் சிரித்து மகிழ்ந்ததோடு பலமாகக் கைகளையும் தட்டினார். அப்போது அவருக்கும் சேர்த்து சூடான சுக்குக் காபியை இளைஞர் கூட்டம் கொண்டுவந்து கொடுக்க, அவர் அதை கையில் வாங்கி "ஃபார் யுவர் ஹெல்த்' என்று சொல்லிக் கொண்டே குடிக்கத் தொடங்கினார். 

""சாதாரணமாக எங்களைப் போன்றவர்களுக்கு விமானத்தைப் பார்ப்பதே ஆச்சரியம்.  அதில் பயணம் செய்கிற சிலருக்கோ எவ்வளவோ பாதுகாப்பு இருந்தாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். ஆனால் போர்விமானம் என்று வருகிறபோது எப்படி அச்சமில்லாமல் பயணப்படுவீர்கள்?'' என்று நான் செழியனிடம் கேட்டேன். 

அவர் மெல்லிய புன்னகையோடு, ""இராணுவத்தில் பயிற்சி என்பது மிக முக்கியமான ஒன்று. படையில் சேர்ந்த யாரையும் உடனே போர்க்களத்திற்கு அனுப்பிவிட மாட்டார்கள் அது மட்டுமல்லாமல், போர் விமானப் பயிற்சி என்பது மிகவும் கவனமாகத் தரப்படுவது. விமானத்தை ஓட்டிக் கொண்டே எதிரிகளிடம் தப்பித்துக் கொண்டே அவர்களைத் தாக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும் அதிலும் குறிப்பாக நம் வருகை அவர்களுக்குத் தெரிந்தால் நாம் தாக்குவதற்கு முன்பாகவே நம்மை வீழ்த்திவிட அவர்கள் முயற்சிப்பார்கள். அதனால் அவர்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் செல்லாமலே நாம் யுத்தம் செய்ய  வேண்டும்'' என்றார் செழியன். 

""நம்ம விமானம் வர்றது அவுங்களுக்கு எப்படித் தெரியும்? சத்தத்த வச்சுக் கண்டுபிடிச்சுடுவாங்களோ!'' என்று ஒரு பெரியவர் கேட்க, ""இல்லை இல்லை, ரேடார் (Radar) என்றொரு கருவி இருக்கிறது. அதன் மூலமாக நம்மை அவர்கள் கண்டுபிடிக்க முடியும், அதேபோல அவர்களுடைய வருகையையும் நம்மால் அறியமுடியும்'' என்றார் செழியன். 

""ஆச்சரியமான கருவியா இருக்கே! ஒலி வர்ற வேகத்த வச்சே விமானத்தக் கண்டுபிடிக்கிறது வியப்பான ஒன்றுதான்'' என்று மீசைக்
காரர் ஆச்சரியப்பட்டார். அப்போது என்  அருகே அமர்ந்திருந்த கடல்சார் பொறியியல் பேராசிரியர் ""இந்த ரேடார் என்னும் கருவியின் தத்துவமே எதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?'' என்று கூட்டத்தில் ஒரு கேள்வி எழுப்பினார். தமிழ்மணியும், செழியனும் புன்னகையோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, ""சரி வழக்கப்படி ஒரு க்ளூ கொடுங்க, கண்டுபிடிச்சு சொல்றோம்'' என்றார் மீசைக்காரர். 

""ஆகாயத்தில் பறக்கும். ஆனால் பறவை அல்ல, குட்டி போட்டுப் பால் கொடுக்கும் அது விலங்கும் அல்ல. அதுதான் அது'' என்று பேராசிரியர் சொன்னார்.

""நல்ல கதையால்ல இருக்கு, 25 வருஷத்துக்கு முந்தி நாங்க ஆடி அமாவாசைக்கு இராமேஸ்வரம் வந்தப்ப எங்களோடு வந்த ஒரு சின்னப் பையன் கூட்டத்துல காணாமப் போயிட்டான், நாங்களெல்லாம் போலீஸ்ல சொல்லச் சென்றோம். அப்ப அந்தக் காவல்துறை அதிகாரி பையன் முகச்சாடை எப்படி இருக்கும்? என்று கேட்க, அந்தப் பையனோட அம்மா அழுதுகொண்டே "செத்துப்போன அவுங்க தாத்தா மாதிரியே இருப்பான்' என்று சொல்ல இன்ஸ்பெக்டர் உட்பட நாங்கள் எல்லோரும் குழம்பிப் போனோம். இப்ப செத்துப்போன தாத்தா போட்டோவ எங்க தேடுறது? அத மாதிரில்ல இருக்கு'' என்று ஒரு  பெரியவர் வேடிக்கையாகச் சொன்னார். 

உடனே பேத்தி தன் ஐபோனில் எதையோ தேடிப்பார்த்து விட்டு, ""பேட்ஸ் (Bats)'' என்று கத்தியது. 

""ஏன் பாப்பா, அவர்தான் மொதல்லையே பறவை இல்லேன்னுட்டாருல்ல, அப்புறம் ஏன் பேட்ஸ்ன்னுகிறீங்க?'' என்று கேட்க, ""நோ நோ, பேட்ஸ் பேட்ஸ்'' என்று பேத்தி கைகளைத் தூக்கிக்கொண்டு சத்தமிட ஹெட்போன் பாட்டி, ""அவ வெளவாலைச் சொல்றா'' என்று மொழிபெயர்த்துச் சொல்ல, ""தட் இஸ் கரெக்ட் ஆன்ஸர்'' என்று பேராசிரியரும் ஒத்துக்கொண்டார். 

""ஐயயோ, வெளவால் அடைஞ்ச கோயிலும் அத பறக்குற வீடும் ஆகாதுன்னு சொல்லுவாங்களே'' என்று ஒருவர் பயத்தோடுக் கேட்டார். 
""சரிதான் நாம் இப்படி சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி முன்னுக்கு வர முடியும்? இருளில் விரைவாகப் பறக்கும் வெளவால்கள் கொசுக்களை உண்பதால்தான் நாம் நன்றாக இருக்கிறோம். அதுமட்டுமில்லை, அது எப்படி இருளில் எதன் மீதும் மோதாமல் பறக்கிறது தெரியுமா?'' என்று செழியன் கேட்டார். 

""ஒரு வேளை அது கண்ணுல லைட் இருக்கோ!'' என்று ஒருவர் சந்தேகம் கேட்க, ""இல்லை இல்லை அதோட ஒலியிலதான் ஒளியே இருக்கு'' என்று பேராசிரியர் புதிர் போட்டார். அப்போது தலைக்கு மேல் ஏதோ ஒன்று பறந்து போக அத்தனை பேரும் திடுக்கிட்டுப் போனோம்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com