நான்கு விரல்கள், மூன்று அம்புகள்...!

நான்கு விரல்கள், மூன்று அம்புகள்...!

தமிழ் வாத்தியாரையா, நீங்க சொல்லுங்க! கதைன்னு சொல்லுறாங்களே அது உண்மையிலேயே நடந்ததா? நடக்கப்போறதா? நடந்துக்கிட்டு இருக்கிறதா? நெசமா நடந்ததா? கற்பனையா?''

உன்னோடு போட்டி போடு - 49

கூட்டத்தில் சற்றே விசும்பல் ஒலி கேட்டது. எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. ""இந்தக் கதையை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் யார் தெரியுமா?'' என்று செழியன் கேட்டார்.
அவர் உணர்வோடு சொன்ன கதையின் ஆழமும் அழுத்தமும் அங்கிருந்த எங்களை ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் தடுத்தன. அதிலும் அவர் நாட்டைக் காக்கும் பணியில் இருக்கின்ற இராணுவ உயர் அதிகாரியாதலால் அவர் சொன்ன கதையின் உண்மைத்தன்மை எங்களை உலுக்கியது. இந்த மெüனத்தைக் கலைக்க எண்ணிய செழியன், ""இவருடைய பெயரிலேயே அந்நாட்டில் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவரும் இருந்தார். அவர் நம் மகாத்மா காந்தி அவர்களின் குருவும் கூட'' என்று சொன்னவுடன்,
""லியோ டால்ஸ்டாய்'' என்று சிலர் குரல் கொடுத்தார்கள். உடனே செழியனும் ""இந்த விடையில் பாதி சரிதான், ஆனால் இந்தச் சிறுகதையை எழுதியவர் "அலெக்ஸ் டால்ஸ்டாய்' ஆவார். இந்தக் கதைக்கு "முகங்கள்' என்று பெயரிட்டு இருந்தார் அதன் ஆசிரியர்'' என்றார் செழியன்.
""நான் கூட "ஆன்டன் செக்கோவ்' எனும் ரஷ்ய ஆசிரியர் தான் எழுதியிருப்பாரோ என்று யோசித்தேன்'' என்றார் தமிழ்மணி.
""உண்மைதான். மனித உள்ளங்களைப் படம்பிடித்துக் காட்டுவதில் அவரும் ஈடு இணையற்ற எழுத்தாளர்தான்'' என்றார் தமிழையா.
""எனக்கு ஒரு சந்தேகம்ங்க'' என்று மீசைக்காரர் கேட்கத் தொடங்கியவுடன் அத்தனை பேரும் சத்தம் போட்டு சிரிக்க, அவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ""தமிழ் வாத்தியாரையா, நீங்க சொல்லுங்க! கதைன்னு சொல்லுறாங்களே அது உண்மையிலேயே நடந்ததா? நடக்கப்போறதா? நடந்துக்கிட்டு இருக்கிறதா? நெசமா நடந்ததா? கற்பனையா?'' என்று சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டார்.
""ஆத்தாடி பாகுபலி}2ஆம் பாகம் படத்தில் ஒரே வில்லில் நான்கு விரல்கள், மூன்று பானம் என்று கதாநாயகன் அனுஷ்காவுக்கு கத்துக்குடுக்குற மாதிரில்ல இவரு கேள்விக்கணைகளைத் தொடுக்குறாரு'' என்று ஓர் இளைஞர் எழுந்து அபிநயத்தோடு சொல்லிக்காட்டினார்.
எல்லோரும் உண்மையில் ஆச்சரியப்பட்டுப் போனோம். இந்த மனிதரின் மண்டைக்குள்தான் எத்தனை ஆயிரம் கேள்விகள். காரணம், எதையும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வம்தான்என்று நினைத்த நான் தமிழையாவைப் பார்த்து,
""பார்த்தீர்களா ஐயா வகுப்பில் மாணவர்கள் ஏன் கேள்வி கேட்பதில்லை என்று தெரிகிறதா? தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தேவையும் ஆர்வமும் உள்ளவர்கள் மட்டுமே கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ம்...ம்... பதில் சொல்லுங்கள்'' என்றேன் நான் கேலியாக.
""என்ன இருந்தாலும் குரூப்}1 எக்ஸாம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள்ல கேள்வி கேட்கிற மாதிரி இப்படி கேட்கக் கூடாது. இனிமே இவரு மீசைக்காரரு இல்லை நெறைய ஆசைக்காரரு'' என்று கோமாளியும் கிண்டலடித்தார்.
அப்போது தமிழையா ""மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலேயே கதைகளும் பிறக்கத் தொடங்கியிருக்கும், மனித இனம் பேசத் தொடங்குவதற்கு முன்பு குகை ஓவியங்களில், பாறைகளில் கூட, தான் பார்த்தவற்றை, தன்னைப் பாதித்தவற்றை கதை வடிவில் யோசித்திருக்கலாம். ஐயா நீங்கள் கேட்ட கேள்வியிலேயே பதில் இருக்கிறது. எப்படித் தெரியுமா?
நடந்த கதைகள் என்பன புராணங்கள், வரலாறுகள். நடக்கப் போகிற கதைகள் என்பன அறிவியல். நடந்து கொண்டிருக்கின்ற கதைகள் என்பன நம் வாழ்க்கை, சமூகப் பாதிப்பு போன்றவை. இனி கதைகள் உண்மையா? பொய்யா? என்றும் கேட்டிருக்கிறீர்கள். எழுத்தாளர் சுஜாதா கூட, "எந்தச் சம்பவமும் உண்மைக்கு மிக அருகில் இருந்தால்தான் படிப்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்' என்பார். உதாரணமாக...'' என்று அவர் யோசிக்க,
""காத்தவராயன் கதை, மலையூர் மம்பட்டியான், கரிமேட்டு கருவாயன், சீவலப்பேரி பாண்டி, இதெல்லாம் சொல்லலாமே'' என்று ஒரு பெரியவர் கேட்டார்.
""நிச்சயமாகச் சொல்லலாம், ஆனால் நடந்ததை நடந்தபடியே சொன்னால் அதில் சுவாரஸ்யம் இருக்காது. சற்றே கற்பனை கலந்து கொண்டால்தான் அந்த உண்மைச் சம்பவம் கூட ரசிக்கப்படும். சில நேரங்களில் உண்மையான மனிதர்
களோடு கற்பனைப் பாத்திரங்களையும் உலவவிட்டால் அந்த கதைகள், சம்பவங்கள் எல்லோராலும் ரசிக்கப்படும், விரும்பப்படும்'' என்றார்.
""எனக்குப் புரிகிற மாதிரி ஒரு உதாரணம் சொல்லுங்களேன்'' என்று மீசைக்காரர் அப்பாவியாய்க் கேட்டார்.
உடனே ஹெட்போன் பாட்டி, ""ஐயா உங்களுக்குக் கதை படிக்கிற வழக்கம் உண்டா?'' என்று கேட்க, ""உண்டு, எங்க ஊர் லைப்ரரியில நான் படிக்காத புஸ்தகமே இல்லை. தக்காளி பயிர் செய்வது எப்படி? கோழிக்குஞ்சு வளர்ப்பது எப்படி? சனிப்பெயர்ச்சியின் பலன்கள் என்ன? உட்பட அத்தனை நூல்களையும் ஒரு பக்கம் விடாம வாசித்துவிடுவேன்'' என்றார் பெருமிதத்தோடு.
""நல்லது ஐயா, எழுத்தாளர் கல்கியினுடைய பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் படிச்சிருக்கீங்களா?'' என்றார் ஹெட்போன் பாட்டி.
""படிச்சிருக்கேனா?, பதினைந்து வயசுல இருந்து படிச்சுக்கிட்டே வர்றேன். அந்தக் கதைகள்ல யாரு பேரக் கேட்டாலும் உடனே சொல்லுவேன்'' என்றார் மீசைக்காரர் மகிழ்ச்சியாக.
""அப்படி வாங்க, பார்த்திபன் கனவுல வரக்கூடிய நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தி அவர் தளபதி பரஞ்ஜோதி (சிறுதொண்டர்) இவர்கள் எல்லோரும் வாழ்ந்ததாக வரலாற்றிலே இருக்கு. ஆனால் அந்தக் கதையில் திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழநாட்டின் மன்னனாகிய பார்த்திபன் அவன் மகனாகிய கதாநாயகன் விக்ரமன், படகோட்டி பொன்னன், அவன் மனைவி வள்ளி இவர்கள் எல்லோரும் கற்பனைப் பாத்திரங்கள்தான். கற்பனைப் பாத்திரங்கள் இருந்தால்தான் வரலாற்றில் முன்னும், பின்னும் போய்வர முடியும்'' என்று ஹெட்போன் பாட்டி நிதானமாக விளக்கம் சொன்னார்.
""அப்படின்னா பொன்னியின் செல்வனில் வரக்கூடிய நந்தினி, ஆழ்வார்க்கடியான், இவங்களும் கற்பனைப் பாத்திரங்கள்தானா?'' என்று சோகமாகக் கேட்டார் மீசைக்காரர்.
""ஆமாம் ஐயா, பொன்னியின் செல்வனாகிய இராஜ இராஜ சோழன் அவன் சகோதரி குந்தவைநாச்சியார், அவர்களின் சகோதரன் ஆதித்த கரிகாலன், பழுவேட்டராயர்கள், பாண்டிய மன்னன் வீரபாண்டியன் இவர்கள்தான் சரித்திர நாயகர்கள். அந்தக் கதையில் அத்தனை பேரையும் கவர்ந்த நந்தினி; கற்பனை பாத்திரம்தான்'' என்றார் தமிழையா.
""என்ன இப்படிச் சொல்லிட்டீங்க, நந்தினிய நானு ஏதாவது சிலையில, ஒவியத்துல பாக்கணும்னு நெனச்சிருந்தேனே'' என்று கவலையோடு சொன்னார் மீசைக்காரர்.
""பார்த்தீர்களா?, ஒரு படைப்பாளன் வெற்றி பெறுவது இந்த இடத்தில்தான். தான் படைத்த கற்பனைப் பாத்திரங்களால் இன்றைக்கும் அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லை, படிக்கின்ற நமக்குத்தான் நரை, திரை, மூப்பு வருமேயன்றி அந்தப் பாத்திரங்களுக்கு ஒருபோதும் வராது'' என்று உணர்வோடு சொன்னார் தமிழையா.
""இங்கிலாந்து நாட்டில் கூடத் துப்பறியும் நிபுணரான ஷெர்லாக் ஹோம்ஸ் பெயருக்கு இன்றைக்கும் 221ஆ, பேக்கர்ஸ் ஸ்ட்ரீட், லண்டன், இந்த முகவரிக்கு கடிதங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றனவாம். அதற்கு அந்த அலுவலகத்தில் இருந்து பதில் கடிதமும் போகுமாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஷெர்லாக் ஹோம்ஸ் என்பது ஒரு கற்பனைப் பாத்திரம். இந்தப் பாத்திரத்தைப் படைத்த எழுத்தாளர் சர்.ஆர்தர் கெனான் டாயல் (நண்ழ் அழ்ற்ட்ன்ழ் இர்ய்ஹய் ஈர்ஹ்ப்ங்-(1890}2010) என்பவர் ஆவார்.
துப்பறியும் கதையில் ஆர்வம் கொண்ட வாசகர்கள் உலகம் முழுவதும் இருந்து ஷெர்லாக் ஹோம்ஸ்க்கு கடிதம் எழுதிக்கொண்டே இருப்பார்களாம். அவர்களுக்குப் பதில் எழுதுவதற்காகவே அந்த எழுத்தாளர் உயிரோடு இருந்தபோது உதவியாளர்களை நியமித்திருந்தாராம். ஷெர்லாக் ஹோம்ஸை படைத்த படைப்பாளி இப்போது இல்லை. ஆனால் அவர் படைத்த பாத்திரம் இன்றைக்கும் உயிரோடு உலவிக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ ஹாலிவுட் திரைப்படங்கள் இவர் கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கின்றன'' என்று விளக்கிச் சொன்னார் தமிழ்மணி.
""ஷெர்லாக் ஹோம்ஸ் என்றவுடன்தான் எனக்கு ஒரு செய்தி ஞாபகம் வருகிறது'' என்று தொடங்கிய செழியன், ""அவர் எப்படிப்பட்ட அறிவாளி, புத்திசாலி என்பதற்கு வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள். அந்தக் கதையில், இந்த உலகத்தில் பிறந்து, இறந்த மனிதர்கள் அத்தனை பேரும் கடவுள் இருக்கின்ற இடத்திற்குப் போகிறபோது ஆண்கள் எல்லோரும் உலகின் முதல் ஆணாகிய ஆதாம் வடிவிலும், பெண்கள் எல்லோரும் உலகின் முதல் பெண்ணாகிய ஏவாள் வடிவிலும் மாறிவிடுவோமாம். கடவுள் ஷெர்லாக் ஹோம்ஸை அங்கே வரவழைத்தாராம். ஆண்களை எல்லாம் ஒருபுறம் நிறுத்தி, பெண்களை எல்லாம் மற்றொருபுறம் நிறுத்தி வைத்துவிட்டு, "ஷெர்லாக் ஹோம்ஸ் எங்கே கண்டுபிடியுங்கள்? என்னால் முதன்முதலில் படைக்கப்பட்ட ஆதாம், ஏவாள் இவர்களில் யார் தெரியுமா?' என்று கேட்டாராம்.
ஷெர்லாக் ஹோம்ஸ் கண்டுபிடித்தாரா? இல்லையா? ஒரு சிறிய இடைவேளை'' என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் செழியன்.
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com