காஷ்மீர் ஸ்பெஷல் ‘பஷ்மினா சில்க்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

காஷ்மீர் ஸ்பெஷல் பஷ்மினா ஷால்கள் அவற்றின் மிருதுத் தன்மைக்காகவும் குளிர் தாங்கும் தன்மைக்காகவும் மிகவும் பிரபலமானவை. இந்த வகை நெசவு காஷ்மீரில் மட்டுமே இன்றும் ஒரிஜினலாகப் புழக்கத்தில் இருக்கிறது.
காஷ்மீர் ஸ்பெஷல் ‘பஷ்மினா சில்க்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு சிறந்த பொருளுக்காக பிரசித்தி பெற்று விளங்குகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதிலுமே அனைத்து மாநிலங்களுமே அவற்றுக்கென ஸ்பெஷலான சில நெசவு திறன்களைக் கைவசம் வைத்துள்ளன. நம்மூரில் காஞ்சிபுரம், ஆரணி, தர்மாவரம் புடவைகள் எத்தனை ஃபேமஸோ அதே விதமாக காஷ்மீரில் பஷ்மினா நெசவு ஃபேமஸ்.  பஷ்மினா என்றால் காஷ்மீரியில் தங்கம் போல மென்மையானது என்று பொருளாம்.

‘பஷ்மினா’ இந்தப் பெயரை உச்சரிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ தெரியாது... ஆனால், எனக்கு இந்தப் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொருமுறையும் அதன் அதி மிருதுத் தன்மையை மனதால் உணரமுடிகிறது. காஷ்மீர் ஸ்பெஷல் பஷ்மினா ஷால்கள் அவற்றின் மிருதுத் தன்மைக்காகவும் குளிர் தாங்கும் தன்மைக்காகவும் மிகவும் பிரபலமானவை. இந்த வகை நெசவு காஷ்மீரில் மட்டுமே இன்றும் ஒரிஜினலாகப் புழக்கத்தில் இருக்கிறது. அதன் தரத்துக்கு ஏற்ப விலையும் வெகு அதிகம்.

மலையாட்டு ரோமங்களில் இருந்து துவங்கும் பஷ்மினா நெசவு...

காஷ்மீர் லடாக் பள்ளத்தாக்குகள், நேபாளம் மற்றும் திபெத் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வாழும் பஷ்மினா ஆடுகள் அல்லது சாங்தாங்கி ஆடுகளின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் இருந்து பெறப்படும் ரோமங்களில் இருந்து   பஷ்மினா நெசவு செய்யப்படுகிறது. ஆட்டின் பிற உடல்பகுதிகளில் இருக்கும் முடி சற்றுத் தடிமனாக இருப்பதால் அவற்றை பியூர் பஷ்மினா நெசவில் தேர்ச்சி பெற்ற நெசவாளர்கள் பயன்படுத்துவதில்லை.

பஷ்மினா ஆடுகளின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் இருந்து பெறப்படும் ரோமங்களின் தடிமன் வெறும் 12 மைக்ரான்கள் மட்டுமே. மிக மிக மெலிது என நாம் நினைக்கும் நமது தலை முடி கூட கிட்டத்தட்ட 200 மைக்ரான்கள் அளவு கொண்டவை. மனித தலைமுடியின் தடிமனை விட மெலிதானவை இந்த பஷ்மினா ஆடுகளின் ரோமங்கள்.

காஷ்மீரத்து மணப்பெண்களின் வரதட்சிணை லிஸ்டில் பஷ்மினா...

அத்தனை மெலிதாக இருந்த போதும் அந்த ரோமங்களுக்கு கடுங்குளிரையும் தாங்கக் கூடிய சக்தி உண்டு. அதனால் தான் காஷ்மீரத்துப் பெண்களுக்குத் திருமணப் பேச்செடுக்கையில் வரதட்சிணைப் பொருட்கள் லிஸ்டில் கண்டிப்பாக பஷ்மினா ஷாலுக்கும் பிரதான இடம் தருகிறார்கள். புது மணப்பெண்ணின் அந்தஸ்தை அவள் கொண்டு வரும் பஷ்மினா ஷாலின் தரத்தையும், விலையையும் கொண்டு அளவிடும் நடைமுறையும் கூட அங்கு பின்பற்றப்படுகிறது. லடாக்கில் வசிக்கும் ‘சங்பா’ மலைஜாதி காஷ்மீரிகள் பஷ்மினா ஆடுகளை அவற்றின் ரோமங்களுக்காகப் பிரத்யேகமாக வளர்க்கிறார்கள். அந்த ஆடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுவதில்லை என்பதோடு பிற ஆடுகளைப்போல இவை வெறும் புற்களை மட்டுமே உட்கொள்வதில்லை புற்களோடு சேர்த்து அவற்றின் வேரையும் உண்கின்றன என்பதும் அதிசயமான தகவல்.

பஷ்மினா நெசவு...

முதலில் ஆடுகளில் இருந்து பெறப்படும் பஷ்மினா மயிரிழைகள் மொத்தமாகத் திரட்டப்பட்டு அவை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே அந்த முடிக்கற்றைகளில் இருந்து அசுத்தங்கள் அகற்றப்பட்டு சீப்பால் நீவப்பட்டு அவை நீளமான நூற்கற்றைகள் போல திரட்டப்படுகின்றன. நூற்கற்றைகள் ராட்டையில் சுழற்றப்படு நூற்பந்துகளாக்கப்பட்டு காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே கை தேர்ந்த பஷ்மினா நெசவாளர்கள் மூலமாக ஷால்கள், கம்பளங்கள் மற்றும் புடவைகளாக மாற்றம் பெறுகின்றன. பியூர் பஷ்மினா புடவையின் விலை 40000 முதல் 50000 வரை இருக்கலாம். ஏனெனில் சாதாரண ஷாலின் விலையே 4000 முதல் 5000 வரை இருக்கும் போது புடவை விலை அதிகமாகத்தான் இருக்கக் கூடும். மார்கெட்டில் தற்போது பஷ்மினா என்ற பெயரில் 2000 முதல் 3000 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படும் பஷ்மினா புடவைகள் ஒரிஜினல் ஹேண்ட்லூம் புடவைகளாக இருக்க வாய்ப்பில்லை. அவை பஷ்மினா நெசவு முறையைப் பின்பற்றி மெஷினில் நெய்யப்பட்டவையாக இருக்கலாம். அந்தப் புடவைகளில் ஒரிஜினலின் மென்மை கிடைக்குமா எனத் தெரியவில்லை.

பியூர் பஷ்மினா ஷால்கள் மற்றும் புடவைகளை நெசவு செய்வதற்கான ஃபார்முலா 70 சதவிகிதம் பஷ்மினா நூல்இழைகள் மற்றும் 30 சதவிகிதம் பட்டு நூல்... 70:30. இந்த விகிதத்தில் நெய்யும் போது மிக மென்மையான பஷ்மினா துணிகள் கிடைக்கும். அதே 50:50 பட்டு 50 பஷ்மினா 50 எனும் விகிதத்தில் நெசவு செய்வதும் உண்டு. இரண்டுக்கும் மென்மையில் பெரிய வித்யாசங்கள் இல்லை என்றாலும் 70:30 விகிதாச்சாரம் தான் பஷ்மினாவின் தூய்மைக்கு அளவுகோளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் 100 % பஷ்மினா இழைகள் மட்டுமே கொண்டு நெசவு செய்யமுடியாது. அவை மிக மெல்லியவை என்பதால் விரைவில் அறுந்து விடும் தன்மையும் அவற்றுக்கு உண்டு. எனவே தான் தேர்ந்த நெசவுத்திறன் வாய்ந்த நெசவாளர்கள் 70:30 விகிதத்தைக் கடைபிடிக்கிறார்கள். பஷ்மினா நெசவு இந்தியாவுக்கு எப்படி வந்ததென்றால்... அது பெர்ஷியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்ததெனக் கூறுவார்கள்.

பஷ்மினாவுக்கு வந்த தட்டுப்பாடு...

90 களில் பஷ்மினா புடவைகள் மற்றும் ஷால்களுக்கு நிலவிய டிமாண்டின் காரணமாக அவற்றின் விலை எகிறி மார்கெட்டில் அப்புடவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது .அன்றைய ஃபேஷன் டிசைனர்கள் பஷ்மினாவை ஃபேஷன் ஐகானாகக் கருதினர். எனவே ஃபேஷன் உலகில் பஷ்மினா சில்க் விஸ்வரூபமெடுத்து விற்பனையானது. இந்நிலையில் பஷ்மினா வாங்கும் ஆவலிருப்பவர்களிடையே காஷ்மீர் சில்க்குக்கும், பஷ்மினா சில்க்குக்கும் இடையே சற்றே குழப்பம் ஏற்பட்டது. இரண்டையும் ஒன்றெனக் கருதியவர்களும் உண்டு. ஒரு சின்ன வித்யாசம் தானே தவிர இரண்டும் ஒன்றே தான் என்று கூட கூறி விடலாம். ஆனால், அந்தச் சின்ன வித்யாசத்தை வைத்து தான் பஷ்மினா சில்க் நெசவுக்கு புவிசார் குறியீட்டு எண் வழங்கப்பட்டிருக்கிறது என்கையில் பஷ்மினாவை பஷ்மினா என்று மட்டுமே குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கை திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. அதனால் பஷ்மினா வேறு, காஷ்மீரி சில்க் வேறு எனும் தெளிவு நமக்கு அவசியமாகிறது.

ஷமினா மற்றும் ஷாதுஷ்  ஷால்கள் குறித்த அறிமுகம்...

காஷ்மீரில் பஷ்மினா தவிர  ‘ஷமினா’ மற்றும்  ‘ஷாதுஷ்’ வகை நெசவுகளும் சிறந்து விளங்குகின்றன. ஷமினா வகை நெசவும் பஷ்மினா ஆடுகளில் இருந்து பெறப்படும் முடியிலிருந்து தான் நெசவு செய்யப்படுகின்றது. ஒரே வித்யாசம் நெசவு செய்யப் பயன்படுத்தும் நூலிழைகளின் தடிமன் மாத்திரமே.

ஷாதுஷ் ஷால்களுக்கு உலக நாடுகளில் தடை ஏன்?

மேற்சொன்னதில் ஷாதுஷ் வகை நெசவுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த வகை நெசவு செய்ய திபெத் பள்ளத்தாக்குப் பகுதியில் வளரும் அருகி வரும் மான் இனத்தின் முடிக்கற்றைகள் பயன்படுத்தப்படுவதால் அவ்வகை நெசவு மற்றும் விற்பனைக்கு தற்போது உலக நாடுகளிடையே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஷாதுஷ் ஷால்கள் பஷ்மினாவைக் காட்டிலும் மிக மென்மையானவை என்று கூறப்படுகிறது. இவற்றின் தடிமன் 7 முதல் 10 மைக்ரான்கள் மட்டுமே.

அதனால் தான் இதிலிருந்து நெசவு செய்யப்படும் ஷால்களை ‘ரிங் ஷால்கள்’ என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனெனில், இவற்றின் அதி மென்மையால் இந்த வகை ஷால்களை மொத்தமாகத் திரட்டி திருமண நிச்சய மோதிரத்தில் கூட நுழைத்து விட முடியும் என்பதால்.

பஷ்மினா மலையாடுகள் வசந்த காலத்தில் தங்களது ரோமங்களை உதிர்த்து விடும் சுபாவம் கொண்டவை. மீண்டும் அவற்றின் ரோம வளர்ச்சி குளிர்காலத்தில் துவங்கி அதிகரிக்கத் தொடங்கும். ஒரு ஆட்டிலிருந்து ஒவ்வொரு முறையும் 80 முதல் 170 கிராம் வரையிலான ரோமங்களைப் பெறலாம்.

பஷ்மினா நெசவின் வரலாறு...

இந்தியாவில் நெசவுத் தொழிலின் வளர்ச்சி சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே துவங்கி விட்டது. மொஹஞ்சதாரோவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட துறவி அரசனின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த மூவிழைகொண்ட  நெசவுமுறையே அதற்கான சிறந்த உதாரணம்.

காஷ்மீரில் நெசவு செய்யப்பட்ட கம்பளி சால்வைகளைப் பற்றிய குறிப்புகள் கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரையிலான ஆப்கானிஸ்தான் வரலாற்றில் உண்டு. ஆயினும் பஷ்மினா நெசவை காஷ்மீரில் ஸ்தாபித்த பெருமை 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஷ்மீரின் இஸ்லாமிய மன்னர் ஜெயினுலாபுதீனுக்கு உரியது. மத்திய ஆசியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 700 தேர்ந்த நெசவாளர்களைக் கொண்டு அவர் பஷ்மினா நெசவுமுறையை உருவாக்கினார். கைத்திறன் மிக்க அந்த நெசவாளர்களின் தலைமை நெசவாளர் மிர் சயித் அலி ஹமதானி. இவர்களின் கை வண்ணத்தில் உருவான காஷ்மீர் ஸ்பெஷல் பஷ்மினா ஆடைகள் இன்றைக்கு உலகம் முழுதும் அவர்களின் கைத்திறனைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் மூலமாக காஷ்மீருக்கு அறிமுகமான பியூர் காஷ்மீரி பஷ்மினா ஷால்கள் 100 சதவிகிதம் தூய பஷ்மினா ரோமாங்களால் நெசவு செய்யப்பட்டவை. மனிதர்களின் தேவைக்கேற்ப பஷ்மினாவின் டிமாண்ட் அதிகரித்த போது கைத்தறி நெசவிலிருந்து பஷ்மினா பவர்லூமுக்கு மாறியது. அப்படி மாறுகையில் பஷ்மினா 100 சதம் தூயதாக இல்லாமல் அதனுடன் கம்பளி நூலும் செயற்கை இழைகளும் கலக்கப்பட்டு பஷ்மினா துணிகள் நெசவு செய்யப்பட்டன.

பஷ்மினா ஷாலின் சிறப்புகள்...

  • பஷ்மினா ஷால் உயர் வகுப்பினரிடையே அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட காலங்களும் உண்டு.
  • பஷ்மினா மலையாடுகள் 40 டிகிரி செல்சியஸ் உறைபனியையும் தாங்கிக் கொண்டு உயிர் வாழக்கூடியவை. அவற்றுக்கு அந்த திறனை வழங்குவது அவற்றின் ரோமங்களே. அந்த ரோமங்களில் இருந்து தயாரிக்கப்படும் பஷ்மினா நூலிழைகளில் கம்பளங்கள், ஷால்கள், புடவைகள், ஸ்கார்ப்புகள் உள்ளிட்டவை நெசவு செய்யப்படும் போது அதன் இயல்பான வெதுவெதுப்பும், குளிர் தாங்கும் தன்மையும், மென்மையும் கூட அந்த ஆடைகளுக்கும் கடத்தப்படுகிறது. அதனால் தான் அதிகக் குளிரான இடங்களில் இந்த ஷால்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது.
  • பஷ்மினா ஷால்களில் கை எம்பிராய்டரி செய்வது வெகு எளிதாக இருப்பதால் ஆடை வடிவமைப்பாளர்கள் புது ஃபேஷன்களை கிரியேட் செய்யும் போதெல்லாம் பஷ்மினாவுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். பஷ்மினாவில் எந்த வகை ஸ்டைலையும் முயன்று பார்க்கலாம் என்பது அதிலுள்ள வசதி.
  • பஷ்மினா எடை குறைந்த மென்மையான ஆடை வகைகளில் ஒன்று. எனவே லைட் வெயிட் ஆடைகளை விரும்புபவர்களின் முதல் சாய்ஸ் ஆகவும் இதுவே இருக்கிறது.

ஒரிஜினல் பஷ்மினா எங்கே கிடைக்கும்?

பஷ்மினா ஷால்கள் தமிழ்நாட்டில் ஃபேப் இந்தியா போன்ற கைத்தறி ஆடை விற்பனை நிலையங்களில் கிடைக்கலாம். ஒரிஜினல் பஷ்மினா வேண்டுமென்றால் நாம் காஷ்மீருக்குத்தான் போக வேண்டும். இங்கிருப்பதெல்லாம் ஒரிஜினல் என்று நம்ப முடியவில்லை. ஏனென்றால் நம்மூரில் பிரபலமான பெரிய கடைகளில் கூட பெயர் தான் பஷ்மினா, சந்தேரி, பட்டோலா, உப்படா, மங்கலகிரி, ஜம்தானி, என்று விற்கிறார்களே தவிர அவையெல்லாம் ஒரிஜினல் இல்லவே இல்லை. பேட்டர்ன் அப்படியிருக்குமே தவிர ஒரிஜினலின் மற்றெந்த குவாலிட்டியும் போலியில் உணர முடியாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com