எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்!

அந்தப் பாட்டுக்குப் பிறகு தான் "தூங்காதே தம்பி தூங்காதே - நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே' என்ற பாடலையும் "மானைத் தேடி மச்சான் வரப் போறான்' என்ற பாடலையும் நாடோடி மன்னனில் எழுதினார்.
எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்!

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-20

எந்தப் பாடல் எழுதினாலும் அதில் சமுதாயக் கருத்துக்களைப் புகுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் உடையவர் பட்டுக்கோட்டை. காதல் பாட்டில்கூட விவசாயத் தொழிலாளர்களின் கருத்தைச் சொன்னவர் இவர்தான். எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்' படத்தில் அவர் எழுதிய, சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி சோம்பல் இல்லாமல் ஏர் நடத்தி...
- என்ற பாடலே இதற்கு எடுத்துக்காட்டு. இந்தப் பாடல் கூட படத்திற்காக நேரடியாக எழுதவில்லை. "ஜனசக்தி' பத்திரிகையில் வெளிவந்திருந்த கவிதையைப் படித்துப் பார்த்த ஆர்.எம். வீரப்பன், எம்.ஜி.ஆரிடம் சொல்லி, பட்டுக்கோட்டையை வரவழைத்து அதில் சில மாற்றங்களைச் செய்து, இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையாநாயுடுவிடம் கொடுத்து இசையமைக்கச் செய்து படத்தில் இடம்பெறச் செய்தார். இந்தப் படம்தான் எம்.ஜி.ஆருக்கும் பட்டுக்கோட்டைக்கும் முதல் சந்திப்பை ஏற்படுத்தி தந்தது.

அந்தப் பாட்டுக்குப் பிறகு தான் "தூங்காதே தம்பி தூங்காதே - நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே' என்ற பாடலையும் "மானைத் தேடி மச்சான் வரப் போறான்' என்ற பாடலையும் நாடோடி மன்னனில் எழுதினார்.

காதல் பாட்டில் கூட இத்தகைய பாட்டாளி மக்களின் கருத்தை எம்.ஜி.ஆர். என்பதால் ஏற்றுக் கொண்டார். இன்றைக்கு அதுபோல் காதல் பாட்டில் இதைப் போன்ற கருத்துக்களைச் சொன்னால் தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்லது இசையமைப்பாளரோ ஏற்றுக் கொள்வார்களா? கிளுகிளுப்பு உண்டாகக் கூடிய வகையிலே எழுதுங்கள் என்பார்கள். நான் கூட ஒரு பாட்டில் இதைப் போன்ற கருத்துக்களை எழுதியபோது வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார்கள்.

இலக்கிய வாதிகள் மேடைகளில் பேசுவதற்காகக் கண்ணதாசன் வரிகளைத் தேடிக் கொண்டிருந்த போது ஆலைத் தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும் அன்றாடம் மனப்பாடம் செய்து கொண்டிருந்தது பட்டுக்கோட்டையின் பாடல்களைத்தான்.

கண்ணதாசன் தமிழ் கவிதைத் தமிழ். பட்டுக்கோட்டையின் தமிழ் பாட்டாளித் தமிழ். கண்ணதாசன் பாடல் கவிதை மனங்களுக்குக் கற்கண்டு.

பட்டுக்கோட்டையின் பாடல் ஆதிக்க மனங்களுக்கு வெடிகுண்டு. கண்ணதாசன் பாடல் தாலாட்டு என்றால் பட்டுக்கோட்டையின் பாடல் அதிர்வேட்டு.

சுருக்கமாகச் சொன்னால் கண்ணதாசன் பாடல்களில் இருந்தது வனப்பு; பட்டுக்கோட்டையின் பாடலில் இருந்தது நெருப்பு. அதனால்தான் சாகாமல் அவன் பாடல்கள் வாழ்கின்றன.

மதுவுடைமைக் கொள்கை மலிந்திருந்த திரையுலகில் பொதுவுடைமைக் கொள்கையைப் புகுத்திய பெருங்கவிஞன் அவன்தான். ஏன் இவனுக்கு முன்பு சமுதாயக் கருத்துக்களை காதல் பாடல்களில் யாரும் சொல்லவில்லையா என்றால் சொல்லியிருக்கிறார்கள்.

அதில் மருதகாசி, லட்சுமணதாஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். எடுத்துக்காட்டுக்கு ஏதேனும் ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் மருதகாசி எழுதிய ஒரு பாடலைச் சொல்லலாம்.

மழைபெய்து கொண்டிருக்கிறது. கதாநாயகியும் கதாநாயகனும் இருக்கின்ற வீடு கூரை வீடு. அந்தக் கூரை ஓரிடத்தில் பிய்ந்திருக்கிறது. அதன்வழியே மழைத்துளி சொட்டுச் சொட்டாகச் சிந்துகின்றது. வெளியே இடியுடன் கூடியமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இதைவைத்து மருதகாசி அற்புதமாக எழுதியிருப்பார்.
ஆண் :- மழை - சொட்டுச் சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே
கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெத்தி வேர்வை போல - அவன்
கஞ்சிக் காகக் கலங்கிவிடும்
கண்ணீர்த் துளியைப் போலே - மழை
சொட்டுச் சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
பெண் :- முட்டாப் பயலே மூளை இருக்கா
என்று ஏழைமேலே
துட்டுப் படைத்த சீமான் அள்ளிக்
கொட்டுற வார்த்தை போலே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே...
இதுவும் காதல் பாடல்தான். 1960-இல் வெளிவந்த "ஆடவந்த தெய்வம்' என்ற படத்தில் டி.ஆர். மகாலிங்கமும், பி. சுசீலாவும் பாடியது. படத்தில் டி.ஆர். மகாலிங்கமும், அஞ்சலி தேவியும் பாடுவது போல்காட்சி இருக்கும். இப்படிப் பல காதல் பாடல்களை சமுதாயப் பார்வையும் மருதகாசி போன்றோர் எழுதி இருந்தாலும் அதில் முழுக்க முழுக்க வெற்றி பெற்றவர் பட்டுக்கோட்டைதான்.

நானும், அண்மையில் மறைந்த கவிஞர் நா. காமராசனும் எம்.ஜி.ஆரை ஒருமுறை சந்தித்தபோது பட்டுக் கோட்டையின் பாடல்களைச் சிறப்பித்து எங்களிடம் பேசினார். அதில் ஒரு பாடலை மிகவும் பாராட்டிக் கூறினார். "சக்கரவர்த்தித் திருமகள்' படத்தில் இடம்பெற்ற நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்ட "பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது' என்ற பாடலைத்தான் அவரும் குறிப்பிட்டார். அதில் சரணத்தில் வருகிற இரண்டுவரி தனக்கு ரொம்பப் பிடிக்குமென்றும் கூறினார். அந்தச் சரணம் இதுதான்.
கால நிலையை மறந்து  சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்புடிச்சு ஆட்டுது - வாழ்வின்
கணக்குப் புரியாமே ஒண்ணு
காசை எண்ணிப் பூட்டுது - ஆனா
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது...
இதில் கடைசி இரண்டு வரிகள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். பட்டுக்கோட்டை தன் கைப்பட எழுதிய கடிதங்களையும் சில பாடல்
களையும் ஏ.எல். நாராயணன் என்னிடம் காட்டியிருக்கிறார். இவர் எழுத்துக்களில் பிழையிருக்கலாம். ஆனால் எண்ணங்களில் பிழையிருந்ததில்லை.

தஞ்சையில் நடந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் இவரைப் பாடு பொருளாக வைத்து கவியரங்கம் ஒன்றை நடத்தச் செய்தவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. நான்தான் பட்டுக்கோட்டையைப் பற்றி பாடினேன்.

எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது அவர் இருந்திருந்தால் பல சிறப்புகளை எம்.ஜி.ஆர் அளித்திருப்பார். எம்.ஜி.ஆரைப் போல் கவிஞர்களை எழுத்தாளர்களைப் போற்றியவர் யாரும் கிடையாது. முதன்முதல் "ராஜராஜன் விருது' என்ற பெயரில் ஒரு லட்ச ரூபாய் விருதை அளித்தவர் அவர்தான்.

மிகச் சிறந்த எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் இந்த விருதை யாருக்கு அளிக்கலாம் என்று ஆலோசித்தபோது அன்றைய நிதியமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அப்போது எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர் பெயரைக் கூறினார்.

உடனே எம்.ஜி.ஆர். நீங்கள் சொல்லக்கூடிய எழுத்தாளர் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து எழுதுவார். ஆகவே அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்த ஆண்டுகூடக் கொடுக்கலாம்.

ஆனால் எழுதிப் பல சாதனைகள் புரிந்து வயது முதிர்ச்சியின் காரணமாக எழுதமுடியாமல் இருப்பார்களே பல எழுத்தாளர்கள்; அவர்களில் யாருக்காவதுதான் இதைக் கொடுக்கவேண்டும். யாருக்குக் கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர் கேட்ட போது நாவலர் பேசாமல் இருந்தார்.

உடனே எம்.ஜி.ஆர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், பல காப்பியங்கள், கவிதைகள் படைத்தவரும் "விக்டர் ஹியூகோ' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய ஒரு கதையை மொழிபெயர்த்து "ஏழைபடும் பாடு" என்ற திரைப்படமாக வெளிவருவதற்குக் காரணமாகவும் அமைந்த கவியோகி சுத்தானந்த பாரதியாருக்கு அந்த விருதை வழங்கலாம் என்று கூறி அதன்படி அந்த விருதை அவருக்கு வழங்கினார். 

சுத்தானந்த பாரதியாருக்கு ராஜராஜன் விருது கொடுத்ததன் மூலம் முதிர்ந்த எழுத்தாளர்களையும் சிறப்பித்தவர் எம்.ஜி.ஆர் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 

எல்லாருக்கும் காலம்தான் பாடம் கற்பிக்கும். காலத்தை விடச் சிறந்த ஆசிரியன் எவனும் இருக்க முடியாது. ஆனாலும் சிலர் வரப்போவதை அறியாமல் பணத்தை மூட்டைகட்டி வைக்கிறார்கள். சிலர் பினாமி பெயரிலே சொத்துக்களை எழுதி வைக்கிறார்கள். அவையெல்லாம் திரும்ப அவர்களுக்குக் கிடைக்குமா என்றால் அதற்கும் பட்டுக்கோட்டை பாடல்தான் பதில் சொல்கிறது.
ஆடி ஓடிப் பொருளைத் தேடி
அவனும் திங்காமே பதுக்கி வைப்பான்
அதிலே இதிலே பணத்தைச் சேர்த்து
வெளியிடப் பயந்து மறைச்சு வைப்பான்
அண்ணன் தம்பி பெண்டாட்டி பிள்ளை
ஆருக்கும் சொல்லாமே பொதச்சு வைப்பான்
ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான்...
1959-இல் வெளிவந்த "கண்திறந்தது' என்ற படத்தில் இடம்பெற்ற அவரது பாடல். இன்றைய லஞ்ச லாவண்ய ஊழல் அரசியல்வாதிகள் இதைக் கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com