புதன்கிழமை 17 ஜூலை 2019

கங்கை அமரனுக்கு வந்த வாய்ப்பு பாக்யராஜூக்கு மாறியது!

By கவிஞர் முத்துலிங்கம்| DIN | Published: 10th October 2017 12:00 AM

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-22:

இளையராஜா இசையில் நான் பாடல் எழுதிய இரண்டாவது படம் "புதிய வார்ப்புகள்'. இது ஜெயகாந்தனுடைய கதைத் தலைப்பு. பாரதிராஜாதான் இந்தப் பெயரை வைத்தார். இந்தப் படத்திற்குக் கதை வசனம் ஆர்.செல்வராஜ். ஆனால் அவர் "பொண்ணு ஊருக்குப் புதுசு' என்ற படத்தை இயக்கப் போய்விட்டதால் பெரும்பாலான வசனங்களை பாக்யராஜ்தான் எழுதினார். கதை மட்டும் ஆர். செல்வராஜ்.

இந்தப் படத்திற்குப் பாடல் எழுதுவதற்காக "டைரக்டர் உங்களை அழைத்து வரச் சொன்னார்' என்று பாரதிராஜாவின் இணை இயக்குநர் ஜே. ராமு, வீட்டிற்கு வந்து என்னை அழைத்துச் சென்றார். பாடல் எழுதுவதற்கான காட்சியை பாரதிராஜா விளக்கினார்.

கதாநாயகன் "குங்குமம்' பத்திரிகை படிப்பவன். கதாநாயகி "இதயம்' பத்திரிகை படிப்பவள். ஒருநாள் குங்குமம் கொடுக்க முடியுமா என்று கதாநாயகி கதாநாயகனிடம் கேட்பாள். நீ இதயத்தைக் கொடுத்தால் நான் குங்குமம் கொடுக்கிறேன் என்று இரு பொருள் படச் சொல்லுவான். அதன் பின் அவர்களுக்குள் காதல் வளர்கிறது.

ஒரு நாள் ஊரை விட்டுக் கதாநாயகன் சென்று விடக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிறது. அவன் செல்வதற்குள் அவனை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று கதாநாயகி பேருந்து நிற்குமிடத்திற்கு ஓடுவாள். அதற்குள் அவன் பேருந்தில் ஏறிச் சென்று விடுவான். அப்போது கதாநாயகி பாடுவது போல ஒரு பாடல்.

அதை நேரிடையாக அவள் பாடாமல் அவள் கோணத்தில் பின்னணியில் பாடுவது போலவும் இருக்கலாம். இதயம், குங்குமம் என்ற வார்த்தை அந்தப் பாடலில் வரவேண்டும் என்றும் கூறினார்.

இளையராஜா மெட்டை வாசித்தார். அந்த மெட்டுக்கு ஏற்றாற்போல் அங்கேயே எழுதி விட்டேன்.
இதயம் போகுதே
எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
கேட்காதோ...
இதுதான் பல்லவி. இந்தப் பாட்டை ஜென்ஸி பாடியிருப்பார். இது பிரபலமான பாடலாக அமைந்தது.

இதில் கண்ணதாசன் "வான் மேகங்களே...' என்ற பாடலையும், கங்கை அமரன் "தனனம் தனனம் தனத் தாளம் வரும்' என்ற பாடலையும் எழுதினார்கள். இதில் எல்லாப் பாடல்களும் பிரபலமான பாடல்கள்தாம். கிழக்கே போகும் ரயில் படத்திலும் மூன்று பாட்டு. இதிலும் மூன்று பாட்டுத்தான். இது பாரதிராஜாவின் சொந்தப்படம்.

பாடலை நான் எழுதிக் கொண்டிருந்த போது இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கச் சொல்லி பாரதிராஜா கங்கை அமரனிடம் கேட்டார். அவர் மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் பாக்யராஜை கதாநாயகனாக ஆக்கினார். அந்தப் படத்திலிருந்து பாக்யராஜுக்கு எல்லா வகையிலும்
ஏறுமுகம்தான்.

பாக்யராஜ் முதன்முதலில் இயக்கிய படம் "சுவரில்லாத சித்திரங்கள்'.  அந்தப் படத்திலிருந்து நடிகை ஷோபனா நடித்த "இது நம்ம ஆளு" என்ற படம் வரை பாக்யராஜ் படங்களுக்குத் தொடர்ந்து எழுதினேன்.

சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் முதன் முதல் என்னைத்தான் பாடல் எழுத அழைத்தார்.

ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ...
சோதனை வேதனை சேர்ந்துவரும்
வாழ்க்கை மாறுமோ...
இதுதான் பல்லவி.
இதில் சரணத்தில்,
பாய்ந்தோடும் கங்கை இங்கே
பசித்தேங்கும் வயிறும் இங்கே
சுகங்களே அரசாளும் பூமி எங்கே
மாலை ஏன் மேடை ஏன்?
கூட்டமேன் கொடிகளேன்?
தோழனே கூறடா...
மாற்றுவோர் இங்கே யாரடா?
-என்று சமுதாயப் பார்வையோடு எழுதியிருப்பேன்.

பசியால் வாடுபவர்கள் கங்கை, காவிரி பாய்கிற இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் இருக்கிறார்கள். ஒருவேளை உணவில்லாமல்
உலகம் முழுதும் பட்டினியாகக் கிடப்பவர்கள் 120 கோடிப்பேர் என்று உலக வங்கி கணக்குக் கூறுகிறது. இந்தியாவில் மட்டும் இரவு உணவு கிடைக்காமல் பட்டினியாய்க் கிடப்பவர்கள் 40 கோடிப் பேர் என்றும் அதே உலக வங்கி சொல்கிறது. இது சென்ற ஆண்டுக் கணக்கு. இப்போது கூடியிருக்கும்.

சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் 40 கோடிப் பேருக்கு இந்தியாவில் இரவு உணவு கிடைக்கவில்லையென்றால் இந்த சுதந்திரத்தால் என்ன பலன்? இதைத்தானே சுதந்திரம் பெற்ற நான்காண்டுகளில் வெளிவந்த "மணமகள்' என்ற படத்தில் கலைவாணரும், டி.ஏ.மதுரமும் பாடல் மூலம் கேட்டார்கள்.

சுதந்திரம் வந்ததின்னு சொல்லாதிங்க
சும்மா - - சொல்லிச்சொல்லி
வெறும் வாயை மெல்லாதிங்க
சோத்துப்பஞ்சம் துணிப்பஞ்சம்
சுத்தமாகத் தீரலே - - இதுல
சுதந்திரம் சுகம் தரும் என்றால்
யாரு நம்புவாங்க...
-இது உடுமலை நாராயணகவி எழுதிய பாட்டு.

அந்த நாளில் அவர் அப்படி எழுதினார். ஆர்.சி. சக்தி டைரக்ட் செய்த "கூட்டுப்புழுக்கள்' என்ற படத்தில் அதைவிட எழுச்சியோடும் வேகத்தோடும் ஒரு பாடல் எழுதினேன்.
எம்.எஸ்.விசுவநாதன் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாட்டு இது.
தேசத்தைப் பார்க்கையிலே - நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா - அதன்
வேஷத்தைக் கலைத்திடவே - புது
வேகத்தைக் காட்டுங்கடா - அதற்கு
விதையொன்று போடுங்கடா
நித்தம்பல குற்றங்களைச்
செய்பவனைக் கண்டு
சித்தம் துடிக்குதடா
கொள்கைதனை விற்கும்
சில கூட்டங்களைக் கண்டு
ரத்தம் கொதிக்குதடா
- இது பல்லவி

ஜாதி ஒழிந்திட மேடை அதிர்ந்திடத்
தலைவர்கள் முழங்குகிறார் - அவர்
ஆயிரம் பேசினும் ஜாதியைத் தானடா
தேர்தலில் தேடுகிறார்.
சீதை நெருப்பினில் அன்று குளித்தது
தென்திசைத் தீவினிலே - வர
தட்சிணைத் தீயினில்
சீதைகள் மாய்வது
இந்திய தேசத்திலே
வெள்ளிப் பணங்களை
அள்ளிக் கொடுக்கையில்
சட்டங்கள் மாறுதடா - அட
லஞ்சமும் ஊழலும் தேசிய ரீதியில்
நர்த்தனம் ஆடுதடா

இதைப் போல இன்னும் இரண்டு சரணங்கள் வரும்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல் இது. இன்னமும் நாட்டின் நிலைமை இப்படித்தானே இருக்கிறது? இதை யார் மாற்றுவது? இது மாற வேண்டும் என்றால் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற உண்மையான புரட்சித் தலைவர்கள் தோன்றி அதிரடி மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதுவரை நம் நாடு இப்படித்தான் இருக்கும். உண்மையான கொள்கைகளும் இலட்சியங்களும் அண்ணா, காமராஜர் காலத்திற்குப் பிறகு புதைக்கப்பட்டுவிட்டது.
"அடி அனார்கலி, உனக்குப் பிறகு
உயிரோடு புதைக்கப்பட்டது
இந்திய நாட்டின்
ஜனநாயகம்தானடி'
-என்று கவிஞர் வைரமுத்து பல்லாண்டுகளுக்கு முன்பு ஒரு கவிதை எழுதியிருந்தார். அதுதான் இப்போது நம் நினைவுக்கு வருகிறது.

ஏ.எல். நாராயணன் கதை வசனம் எழுதிய  "18 முதல் 22 வரை' என்ற படத்தில் நான் ஒரு பாடல் எழுதியிருந்தேன்.
அம்மா சொன்னாங்க
அப்பா சொன்னாங்க
அதையும் நானும் கேக்கலே
தாத்தா சொன்னாங்க
பாட்டி சொன்னாங்க
அதையும் அப்பா கேக்கலே
சொல்லுறவன்
சொல்லிக்கிட்டுத் தான் இருப்பான்
தள்ளுறவன்
தள்ளிக்கிட்டுத்தான் இருப்பான்
அண்ணா சொன்னதைக்
கேக்கும் தம்பியை
அடையாளம் நீயும் காட்டு - அட
கொள்கை என்பதும்
லட்சியம் என்பதும்
தேர்தல் நேரத்துப் பாட்டு
-இதை எஸ்.பி. பாலசுப்ரமணியமும், எம்.ஜி.சக்ரபாணி மகன் எம்.ஜி.சி. பாலும் பாடியிருப்பார்கள்.
இந்தப் படம் வெளிவரவில்லை. பாடல்கள் மட்டும் இசைத்தட்டாக வெளிவந்தது. இதில் எல்லாப் பாடல்களையும் சங்கர் கணேஷ் இசையில் நான்தான் எழுதியிருந்தேன்.
(இன்னும் தவழும்)
படம் உதவி: ஞானம்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : anandha thenkatru thalatuthe- 22 poet muthulingam கவிஞர் முத்துலிங்கம் ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 22

More from the section

நானும் மருதகாசியும் சேர்ந்து பாடல் எழுதிய படம்!
பாடலாசிரியர்களை "வாத்தியார் ஐயா' என்று அழைத்தவர்!
எப்போதும் அவரை நான் நினைக்க வேண்டும்!
மாஞ்சோலைக் கிளிதானோ? மான்தானோ?
எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்!