மாஞ்சோலைக் கிளிதானோ? மான்தானோ?

"அவர் நமது அசிஸ்டெண்ட் டைரக்டர். பெயர் பாக்கியராஜ்'' என்றார். உடனே எனக்கு வணக்கம் தெரிவித்தார். நானும் வணக்கம் தெரிவித்தேன். பிறகு சினிமா உலகமே அவர் வீட்டுக்குமுன் வணக்கம் தெரிவித்து பல காலம் கைகட்டி
மாஞ்சோலைக் கிளிதானோ? மான்தானோ?

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -21

எம்.ஜி.ஆர். படங்களுக்கு மட்டுமே பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த நான், வெளிப்படங்களுக்கு முதலில் எழுதிய படம் "கிழக்கே போகும் ரயில்'. இளையராஜா இசையில் அதிகாரப் பூர்வமாக முதலில் எழுதிய படமும் இதுதான்.

எம்.எஸ்.வி. அவர்களுக்குப் பிறகு திரையிசையில் புது மலர்ச்சியைப் புயல்வேகத்தில் ஏற்படுத்திக் காட்டியவர் இளையராஜா.

இவருடைய இசையில் தான் முதன்முதலில் இசைக் கருவிகள் புதுவிதமான நூதன ஒலி எழுப்பியதைக் கேட்டுப் பிரமித்தோம். பின்னணி இசைக்குத் தனித்
தன்மையை ஏற்படுத்திக் கொடுத்தவர் இவர்தான்.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்து ஓடாத படங்களைக் கூட ஓடவைத்த பெருமை அன்றைய காலத்தில் உண்டு.

அதுபோல் இளையராஜா இசையிருந்தால் ஓடாத படம் கூட நன்றாக ஓடும் என்றொரு நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் உண்டாகும்படி செய்தவர் இவர். இளையராஜாவின் சாதனை அளப்பரியது. அதை இசை நுணுக்கம் அறிந்தவர்கள் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும். சிம்பொனி இசையமைத்த பெருமை இந்தியத் திரையுலகில் இவரைத் தவிர எவருக்குக் கிடைத்திருக்கிறது?

விசுவநாதன் அவர்களைப் போல ஒரு பாடலுக்கு ஒருமணி நேரத்தில் பின்னணி இசையை அமைக்கின்ற ஆற்றல் இவர் ஒருவருக்குத்தான் உண்டு. சிலருக்கு இரண்டு நாள் அல்லது ஒருவாரம் கூட ஆகிவிடுகிறது.

எம்.எஸ்.விசுவநாதனுக்குப் பிறகு குறிப்பிடத் தகுந்த இசையமைப்பாளர் இவர். மண்வாசம் மிக்க பாடல்களுக்குப் பண்வாசம் கொடுத்த பெருமை இவரைத்தான் சேரும். 

இந்தப் படத்தின் கதாசிரியர் ஆர். செல்வராஜ் ஒரு காட்சியைச் சொல்லி அதில் எப்படிப்பட்ட கருத்துகள் இடம் பெற வேண்டும் என்று அதையும் சொல்லி பாடல் எழுதச் சொன்னார்.

"பாடலுக்கேற்ப இசையமைக்கும்படி ராஜாவிடம் சொல்லுகிறேன். எழுதி வாருங்கள்'' என்றார். நானும் எழுதிச் சென்றேன்.

ஒருநாள் இயக்குநர் பாரதிராஜாவைச் சந்தித்த போது "நீங்கள் எழுதிய பாடல் நன்றாக இருந்தது. ஆனால் அந்தக் காட்சியை நாங்கள் மாற்றிவிட்டு வேறொரு காட்சியை அமைத்திருக்கிறோம். மெட்டமைத்ததும் உங்களை அழைக்கிறேன்'' என்றார்.

சொன்னது போல் இளையராஜா மெட்டுப் போட்ட பிறகு என்னை அழைத்து எழுதச் சொன்னார்.

முதலில் ஒரு பல்லவி எழுதினேன். "கவிதையாக இருக்கிறதே. பாடலைப் போல் இல்லையே'' என்றார் கங்கைஅமரன். அதாவது பல்லவி நன்றாக இல்லை என்று நேரிடையாகச் சொல்லாமல் கவிதையாக இருக்கிறதே என்று சொல்வது அந்நாள் நாகரிகம். நானும் அதைப் புரிந்து கொண்டு உடனே வேறொன்று எழுதினேன். 

எல்லோருக்கும் அது பிடித்து விட்டது. அதுதான்,
மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ
வேப்பந் தோப்புக் குயிலும் நீதானோ?
 - என்ற பாடல்
அதன் பிறகு சரணத்திற்கு டியூன் கொடுத்துவிட்டு, "இன்னொரு கம்பெனிக்குப் போய் விட்டு வருகிறோம், நீங்கள் எழுதிக் கொண்டிருங்கள்'' என்று இளையராஜா சென்றுவிட்டார்.

அவர்கள் திரும்பி வருவதற்குள் பாடலை எழுதி முடித்து விட்டேன். அதை நான் எழுதும் போது கவிஞர் சிற்பியும் அங்கிருந்தார். இவர் பாரதியார் பல்கலைக்
கழகத் தமிழ்த் துறைத்தலைவராகப் பின்னாளில் திகழ்ந்தவர். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ஒன்றரை மணி நேரத்தில் அந்தப் பாடலை எழுதினேன்.

அதற்கு சாட்சி சிற்பிதான். அவரும் பாடலைப் பாராட்டினார். அவரும் அதில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். ஆனால் படத்தில் அது இடம் பெறவில்லை. இசைத் தட்டில் மட்டும் இடம் பெற்றது. அதுவும் ஹிட்டான பாடல்தான். "மலர்களே...  நாதசுரங்கள்' என்று ஆரம்பமாகும் அப்பாடல்.

நான் சரணம் எழுதிக் கொண்டிருந்தபோது, இரண்டாவது சரணத்தில்,  "கரும்பு வயலே குறும்பு மொழியே' என்ற வரியை எழுதிவிட்டு அதற்குப் பதில் வேறொரு வரியை எழுதி, "இந்த இரண்டு வரிகளில் எது நன்றாக இருக்கிறது?'' என்று அங்கிருந்த அந்தக் கம்பெனியைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டேன். அவர், "ராதிகாவின் பாத்திரத்திற்கேற்ப "கரும்புவயலே குறும்பு மொழியே' என்பதுதான் நன்றாக இருக்கிறது'' என்றார்.

இளையராஜா திரும்பி வந்து என் பாடலைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினார். "சிரமமான சந்தத்தை சிறப்பாக எழுதிவிட்டீர்கள்'' என்று கங்கை அமரன் கை குலுக்கினார். எல்லோரையும் விட பாரதிராஜாதான் மிகவும் பாராட்டினார். பாராட்டும் போது, "கரும்பு வயலே குறும்பு மொழியே - என்ற வரி ராதிகாவின் பாத்திரப் படைப்பைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. அருமை!'' என்று புகழ்ந்துரைத்தார்.

அப்போது அந்த வரி நன்றாக இருக்கிறது என்று ஏற்கெனவே சொன்னாரே அந்த நண்பரைப் பார்த்தேன். உடனே அவர் புன்முறுவல் காட்டினார்.

"உங்களைப் போல புத்திக் கூர்மையுள்ளவராக அந்த நண்பர் இருக்கிறாரே...  அவர் யார்?'' என்று பாரதி ராஜாவிடம் கேட்டேன்.

"அவர் நமது அசிஸ்டெண்ட் டைரக்டர். பெயர் பாக்கியராஜ்'' என்றார். உடனே எனக்கு வணக்கம் தெரிவித்தார். நானும் வணக்கம் தெரிவித்தேன். பிறகு சினிமா உலகமே அவர் வீட்டுக்குமுன் வணக்கம் தெரிவித்து பல காலம் கைகட்டி நின்று கொண்டிருந்தது.

திரைக்கதை அமைப்பதில் இந்தியத் திரையுலகில் இவருக்கு நிகர் எவரும் இல்லை என்று சொல்லத் தக்கவகையில் பதினைந்து ஆண்டு காலம் கொடி கட்டிப் பறந்தார். இவருடைய திரைக்கதைக்காக இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆறு மாதத்திற்கு மேல் காத்திருந்தார் என்றால் இவர் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

சென்னை கமலா திரையரங்கில் இப்படத்தின் நூறாவது நாள் விழாவில் இப்பாடலை ராகத்தோடு பாடி, "இதைப் போல எங்கள் படங்களுக்கும் பாடல்கள் போடக்கூடாதா?'' என்று இளையராஜாவிடம் நடிகர் திலகம் சிவாஜி கேட்டார். சபையோர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அந்த ஆண்டின் சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசு என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு இப்பாடலும் ஒரு காரணம். இந்தப் பாடலை ஜெயச்சந்திரன் பாடியிருப்பார். இப்பாடல் பிரபலமான போது, " "மாஞ்சோலை' என்று சொல்லலாமா? "மாந்தோப்பு' என்று தானே சொல்ல வேண்டும். வேப்பந் தோப்பு எங்கே இருக்கிறது?'' என்றெல்லாம் பலர் பத்திரிகையில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.

இலக்கியப் பயிற்சி உடையவர்கள் அப்படிக் கேட்கவில்லை. அவர்களுக்கு விவரம் தெரியும்.

மாஞ்சோலை என்றும் சொல்லலாம். மாந்தோப்பு என்றும் சொல்லலாம். ஆகாயத்தை வானம் என்றும் சொல்லலாம் விசும்பு என்றும் சொல்லலாம். இதில் ஒன்றும் சொற்குற்றம் இல்லை.

பாரதியார் பாடிய குயில் பாட்டில், "மேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை அந்த மாஞ்சோலை அதனில் ஓர் காலையிலே' என்று பல இடங்களில் மாஞ்சோலை என்ற சொல்வருகிறது.

தமிழறிஞர் மு.வ. அவர்கள் மாஞ்சோலை என்ற சொல்லை இலக்கியக் கட்டுரையொன்றில் எடுத்தாண்டிருக்கிறார்.

வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகத்தில் மாஞ்சோலை என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது.

மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் திருமாஞ்சோலை என்ற ஊரே இருக்கிறது. திருநெல்வேலிப் பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் என்ற பெயரில் ஒரு எஸ்டேட் இருக்கிறது.

இதையெல்லாம் தெரிந்து கொள்ளாதவர்கள் இலக்கியங்கள் எதையும் பயிலாதவர்கள் - எனக்கு எதிர்ப்பான கருத்துக்களைக் கூறினார்கள்.

அதைப் போல "வேப்பந்தோப்பு' என்று முத்துலிங்கம் எழுதியிருக்கிறாரே எங்கே இருக்கிறது அந்தத் தோப்பு? என்றெல்லாம் அர்த்தமில்லாமல் கேட்டார்கள். அப்படி யார் கேட்டார்கள் என்றால் நான் மிகவும் மதிக்கும் பாடலாசிரியர் மருதகாசியும், இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் தான் அப்படிக் கேட்டார்கள்.

பல மரங்கள் சேர்ந்தாலே அது தோப்புத்தானே அப்படி வேப்ப மரங்கள் கூட்டமாக ஓரிடத்தில் இருந்தால் அது வேப்பந்தோப்புத்தான். எங்கள் ஊர்ப்பகுதியில் அப்படி நிறையத் தோப்புக்கள் இருக்கின்றன. திண்டுக்கல்லில் ஒரு தெருவுக்குப் பெயரே வேப்பந்தோப்புத் தெரு என்று இருக்கிறது.

அதற்காகக் கூட்டமாக நிற்கும் எல்லா மரவகைகளையும் தோப்பு என்றோ சோலை என்றோ சொல்லக் கூடாது. கருவேல மரங்கள் அடர்த்தியாக ஓரிடத்தில் இருந்தால் அதைக் கருவேலந்தோப்பு என்று சொல்லக்கூடாது. கருவேலங்காடு என்று தான் சொல்ல வேண்டும். இப்படிச் சில முறைகள் இருக்கின்றன.

இதையெல்லாம் அந்தப் பாடல் வெளிவந்த நேரத்தில் விமர்சனங்களுக்குப் பதில் சொல்கிற வகையில் விளக்கமாகக் கூறியிருக்கிறேன். இந்தப் பாடலுக்கு இதைப் போல விமர்சனங்கள் அதிகம் வந்ததால் தானோ என்னவோ இந்தப் பாடல் மிகவும் பிரபலமான பாடலாக அமைந்தது.
படம் உதவி : ஞானம்
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com