செய்திகள்

நம்பிக்கையும் உண்மையும்: காய்ச்சலுக்கு நோய் எதிர்ப்பு மருந்து உட்கொள்வது சரிதானா?

26th Jul 2023 02:09 PM

ADVERTISEMENT

சாதாரணமாக காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு என உடல்நிலை சரியில்லை என்றால் பலரும் நேரடியாக மருந்துக் கடைகளுக்குச் சென்று மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை வாங்கி உட்கொள்வர். இது சரியானதுதானா?

வைரஸ் தொற்றுகளுக்கு நோயெதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வது பயன் தருமா?

நோயெதிர்ப்பு மருந்துகள் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் இரைப்பை குடலியல் நிபுணர் டாக்டர்  ஜெயதேவன். 

வைரஸ் காய்ச்சலுக்கு நோயெதிர்ப்பு மருந்துகள்(antibiotics) பயனுள்ளதாக இருக்கும். 

ADVERTISEMENT

பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுகளுக்கு எதிராக மட்டுமே நோயெதிர்ப்பு மருந்துகள் செயல்படும். வைரஸ்களுக்கு எதிராக அவை எந்த பயனையும் அளிக்காது. பெரும்பாலான காய்ச்சல்கள் வைரஸால் ஏற்படுபவை, அவற்றுக்கு நோயெதிர்ப்பு மருந்துகள் தேவையில்லை. டெங்கு, ப்ளூ காய்ச்சல், கரோனா எல்லாமே வைரஸால் ஏற்படும் தொற்றுகள். பாக்டீரியாக்களினால் பரவக்கூடிய தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தலாம். 

நோயெதிர்ப்பு மருந்துகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். 

வளர்ந்த நாடுகளில் அதிகாரபூர்வ மருத்துவர்களின் பரிந்துரைகள் இருந்தால் மட்டுமே நோயெதிர்ப்பு மருந்துகளை வாங்க முடியும். சாதாரண வலி நிவாரணிகளைப் போல மருந்துக் கடைகளில் அவற்றைப் பெற முடியாது. ஆனால், இந்தியாவில் அனைத்து மருந்துக் கடைகளிலும் நோயெதிர்ப்பு மருந்துகள் கிடைக்கிறது. ஆனால், அதற்கு மருத்துவரின் பரிந்துரையின்றி வாங்கிக்கொள்ளலாம் என்று அர்த்தமில்லை. மருத்துவர்களின் பரிந்துரையுடன் வாங்குவது நல்லது. ஏனெனில் நோயெதிர்ப்பு மருந்துகளை அதிகம் பயன்படுத்தினாலோ, தவறாகப் பயன்படுத்தினாலோ ஆபத்துதான். 

இதையும் படிக்க | நம்பிக்கையும் உண்மையும்: பழங்களை உணவுடன் சேர்த்து சாப்பிடலாமா? 

பழைய மருந்துச் சீட்டுகளை பயன்படுத்தி நோயெதிர்ப்பு மருந்துகளை மீண்டும் பெறலாம். 

ஒரு வருடத்திற்கு முன்போ அல்லது சில மாதங்களுக்கு முன்போ மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நோயாளிகள் மீண்டும் அதே மருந்துச் சீட்டைப் பயன்படுத்தி வாங்குவது வழக்கத்தில் இருக்கிறது. அது அந்த நேரத்தில் அப்போதைய உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது அதே அறிகுறிகள் இருந்தாலும் நிலைமை என்பது வேறு. எனவே, மருத்துவரை கலந்தாலோசிக்காமல் முன்னதாக பரிந்துரைக்கப்பட்ட பழைய மருந்துகளை எடுத்துக்கொள்வது சரியானது அல்ல. 

சிறிது உடல்நலம் தேறி வரும்போது நோயெதிர்ப்பு மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடலாம். 

முழுவதுமாக உடல்நலம் தேறுவதற்கு முன்னரே மருந்துகளை நிறுத்தினால் உடலில் எஞ்சியிருக்கும் பாக்டீரியா நோய்த்தொற்றை அதிகரிக்கலாம். எனவே முழுமையாக குணமடையும் வரை நோயெதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

இதையும் படிக்க | கர்ப்பப்பை வாய் புற்றுநோய்: பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

ADVERTISEMENT
ADVERTISEMENT