செய்திகள்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்: பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

25th Jul 2023 12:40 PM

ADVERTISEMENT

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், கருப்பை வாயின் செல்களில் - யோனியுடன் இணைக்கும் கருப்பையின் கீழ்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய். இதனை வராமல் தடுக்கலாம், வந்தாலும் குணப்படுத்தக்கூடியது. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகளவில் பெண்களிடையே அதிகம் ஏற்படும் நான்காவது புற்றுநோய் இதுவாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இந்தியாவில் குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு மற்றும் பாலியல் சுகாதாரம் ஆகியவை இதன் பாதிப்பைக் குறைக்க உதவியுள்ளது, மேலும் கல்வியும் ஒரு முக்கியக் காரணி என கொச்சியைச் சேர்ந்த மூத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வி.பி. கங்காதரன் கூறுகிறார்.

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 1990 - 2019 காலகட்டத்தில் இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் தாக்கம் 21 சதவிகிதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான முதன்மை தடுப்பூசி, இரண்டாம் நிலையில் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை, அடுத்து நோய்த்தடுப்பு சிகிச்சை என்ற மூன்று நிலைகளில் கண்காணிக்கப்படுகிறது. 

இதையும் படிக்க | நம்பிக்கையும் உண்மையும்: பழங்களை உணவுடன் சேர்த்து சாப்பிடலாமா?

ADVERTISEMENT

நோய்த் தடுப்பு

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது மனித பாப்பிலோமா வைரஸ் வகை 16 மற்றும் 18 ஆகியவற்றால் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றால் ஏற்படுகிறது. புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அஜு மேத்யூ கருத்துப்படி, 'இது தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய ஒருவகை புற்றுநோயாகும். ஹெச்பிவி தடுப்பூசி மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்னதாக, பெண் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு போடப்பட்டால் பெரும்பாலான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கலாம்' என்கிறார்.  

தற்போது உரிமம் பெற்ற 6 ஹெச்பிவி தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் வைரஸ் வகை 16 மற்றும் 18-ன் தொற்றுகளைத் தடுக்கலாம், இந்த தொற்றுகள் உலகளவில் சுமார் 70% கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு காரணமாக இருக்கின்றன. ஹெச்பிவி தடுப்பூசியை பரிந்துரைக்கும் பெரும்பாலான நாடுகளின் முதன்மையான இலக்கு, 9 முதல் 14 வயதுடைய பருவ வயதையடையும் பெண்களே. தவிர, இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட செர்வாவாக்(Cervavac) எனும் தடுப்பூசி விலை மலிவானது. 

கண்காணிப்பு மற்றும் சிகிச்சை 

முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 100 சதவீதம் குணப்படுத்தக்கூடியது. சாதாரண திசுக்கள் புற்றுநோய் திசுக்களாக உருவாக சிறிது நேரம் ஆகும். கண்காணிப்பதன் மூலம் புற்றுநோய்க்கு முந்தைய திசுக்களை நாம் கண்டறிய முடியும். இந்த திசுக்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நோயைக் குணப்படுத்த முடியும். கர்ப்பப்பை வாயில் இருந்து சேகரிக்கப்பட்ட செல்களின் பேப் ஸ்மியர் சோதனை( pap smear test) அல்லது வைரஸ் பரிசோதனை மூலம் புற்றுநோய் செல்கள் இருப்பதைக் கண்டறிய முடியும் என்கிறார் டாக்டர் அஜு மேத்யூ. 

கர்ப்பப்பை போன்றே மார்பகப் புற்றுநோய், பெருங்குடல், நுரையீரல் புற்றுநோய் என பெண்களுக்கு பல புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. தற்போது வளர்ந்து வரும் அறிவியல் மருத்துவ உலகில் இதனை வராமல் தடுப்பதற்கு தடுப்பூசிகள், கண்காணிப்பு பரிசோதனைகள் என பலவும் வந்துவிட்டன. எனவே நோய்கள் வராமல் தடுக்க பெண்கள் கண்டிப்பாக அவ்வப்போது இந்த பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. 

இதையும் படிக்க | செல்போன் அழைப்பு வந்தாலே எரிச்சலாக, பதற்றமாக இருக்கிறதா?

ADVERTISEMENT
ADVERTISEMENT