வழக்கமான நேரங்களில் வரும் இருமலை விடக் குளிர்காலங்களில் பிடிக்கும் ஜலதோஷத்தினால் வரும் வறட்டு இருமல் நம்மைப் படாதபாடு படுத்திவிடும்.
வறட்டு இருமலைப் போக்க அலோபதியில் எத்தனையோ மருந்துகள் இருந்தாலும், ஒரு சிலருக்கு அது பொருந்துவது இல்லை. அலோபதி மருத்துவத்தால் நிவாரணம் கிடைக்காத பலருக்கு இயற்கை மருத்துவம் நல்ல பலனளித்துள்ளது.
தூதுவளை அதிமதுரம் கசாயத்தைப் பயன்படுத்தித் தொடர்ந்து வரும் வறட்டு இருமலைப் போக்க முடியும். அதற்குத் தேவையான பொருட்கள்...
தூதுவளைக் கீரை - ஒரு கைப்பிடி, அதிமதுரம் - சிறிதளவு, தனியா- 5 கிராம், உலர்ந்த திராட்சை - 10
படிக்க: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
முதலில் தூதுவளைக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள தூதுவளை, அதிமதுரம், தனியா மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து நீரை பாதியளவாகச் சுண்ட வைத்து இறக்கி வடிகட்டவும்.
இந்தக் கசாயம் விடாமல் தொடர்ந்து வரக்கூடிய வறட்டு இருமல், சாதாரண இருமல் மற்றும் புகைச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருமருந்து. இதனை காலை மாலை என இருவேளையும் தயார் செய்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.
படிக்க:சனிப்பெயர்ச்சி யாருக்கு கைகொடுக்கும்! என்ன சொல்கிறார் ஜோதிடர்?
அதிமதுரம் வறட்டு இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து. அதிமதுரம் பொடி செய்து வைத்து காலை, மாலை தேனில் குழைத்து சாப்பிட்டு வர சளி, இருமல் குணமாகும்.
தேநீர் பழக்கம் உள்ளவர்கள் அதிமதுரம் தேநீர் தயார் செய்து குடிக்கலாம். 200 மில்லி தண்ணீர் கொதிக்கவிட்டு அதில் ஒரு தேக்கரண்டி அதிமதுரம் சேர்த்து, கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்துவர உடனே நிவாரணம் கிடைக்கும்.
வறட்டு இருமலுக்கு இஞ்சி எடுத்துக்கொள்ளலாம். தொண்டையில் புண் மற்றும் எரிச்சல் ஏற்பட்டு மிகப்பெரிய தொந்தரவுகளை உண்டாகும். உணவுப் பொருட்களை விழுங்கும் போதும், ஏன் நீராகாரங்களைக் கூட சாப்பிட முடியாது. இஞ்சி தொண்டைப் புண் எரிச்சலுக்கு சரியான தீர்வைக் கொடுக்கும். வெதுவெதுப்பான நீரில் இஞ்சியை தட்டி குடித்துவர நல்ல முன்னேற்றம் காணலாம்.