செய்திகள்

லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?

DIN

வளர்ந்து வரும் டெக்னாலாஜிகள் போல, அதனால் வரும் நோய்களும் அதிகரித்துக் கொண்டேதான் போகின்றன. தற்போது உருவாகியிருக்கும் புதிய பிரச்னை கழுத்து வலி.

வீட்டிலிருந்தே வேலை, கல்வி என்ற விஷயத்துக்காகக் கொண்டு வரப்பட்ட லேப்டாப், கைப்பேசி ஆகியவற்றால் மனித குலம் சந்திக்கும் பல இடர்பாடுகளில் ஒன்றுதான் கழுத்து வலியும், தோள்பட்டை வலியும்.

அதிகப்படியான லேப்டாப் மற்றும் கைப்பேசி பயன்பாட்டினால் கை மணிக்கட்டு மற்றும் தோள்பட்டைகளில் ஏற்படும் வலிகளோடு சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறும் மருத்துவர்கள், டெக்ஸ்ட் நெக் அல்லது டெக் நெக் என்று செல்லப்பெயரிட்டு அழைக்கிறார்கள்.

ஒரு மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவில் 20 சதவீதம் பேர் இந்த பிரச்னையுடன் மருத்துவரை சந்திப்பிதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மிகவும் அபாயகரமான விஷயம் என்னவென்றால், டெக் நெக் பிரச்னையுடன் வருபவர்களில் அதிகம் பேர் குழந்தைகள் என்பதுதான்.

இந்த நோய்க்கு மிக முக்கிய காரணம் அவர்களது வாழ்முறை என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

லேப்டாப் அல்லது கைப்பேசியில் அதிக நேரம் செலவிடுவது, அதனை பயன்படுத்தும் போது தவறாக உட்கார்ந்திருக்கும் முறை, அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் உடல் இயக்கம் குறைதல், சூரிய வெளிச்சமே படாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது போன்றவற்றுடன் மிக மோசமான உணவு முறையும் சேர்ந்து கொள்ளும் போது கழுத்து வலி கழுத்தை நெறிப்பதாகக் கூறப்படுகிறது.

முன்பெல்லாம் இப்படி ஒரு உடல் வலி என்று வருபவர்கள், நடுத்தர வயதுடையவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், வித்தியாசமாக இந்த டெக் நெக் வலிக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் சிறார்கள், இளைஞர்கள், குழந்தைகள் என்பதுதான் அதிர்ச்சித் தகவலாக உள்ளது.

எப்படியும் லேப்டாப் அல்லது கைப்பேசியை பார்ப்பதைத் தவிர்க்கவே முடியாது.. டெக் நெக்கிலிருந்து தப்புவிக்க என்னதான் செய்வது என்று கேட்பவர்களுக்கு மருத்துவர்கள் சொல்வது ஒன்றுதான். இவற்றைப் பயன்படுத்தும் போது உடலுக்குத் தேவை சரியான உட்காரும் முறை. அவ்வாறு சரியாக அமராமல் உடலின் ஏதேனும் ஒரு பாகத்துக்கு அழுத்தம் கொடுத்தால், அதுபல நாள்களுக்கு நீடித்தால், பிறகு அந்த உடல்பாகம் நமக்கு வலி என்ற அழுத்தத்தைக் கொடுக்கும். அதிலிருந்து தப்பிக்க முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதனை உடனடியாக சரி செய்ய, சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால், இது தீவிரமடைந்து மிகப்பெரிய பிரச்னையை கொண்டு வந்து சேர்க்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 

என்னதான் தீர்வு?
டெக் நெக் எனப்படும் கழுத்து வலிக்கு, அதிக நேரம் லேப்டாப் அல்லது கைப்பேசி பயன்படுத்துவோர், அவ்வப்போது, தலையை பின்னோக்கி அசைத்து, தோள் மற்றும் கழுத்துக்கு எதிர்மறையான அழுத்தத்தை அளிக்க வேண்டும்.

அடுத்து, சரியான முறையில் உடலுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் உட்கார்ந்து கொண்டு, பிறகு உங்கள் கண் பார்வையில் நேரடியாகப் படும்படி லேப்டாப் அல்லது கைப்பேசியை வைக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.

அவ்வப்போது நீங்கள் அமரும் முறையை மாற்றிக் கொண்டே இருப்பதும் நல்லது.

அடிக்கடி பிரேக் எடுத்துக் கொண்டு சற்று நடந்து சென்று தோள்பட்டைகளை தளர்வாக வைத்து கழுத்தை சாற்று முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் அசைத்து பயிற்சி எடுக்கலாம்.

பொதுவாக மேஜையில் கைப்பேசியை வைத்துவிட்டு, தலையை குனிந்துகொண்டு பார்ப்பது படிப்பது தவிர்த்துவிடுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT