செய்திகள்

அதிகாலை நடைப்பயிற்சி நல்லதல்ல! இதய நோயாளிகளுக்கு எச்சரிக்கை!!

20th Jan 2023 01:51 PM

ADVERTISEMENT

குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகரிப்பதாகவும் இதய நோயாளிகள் அதிகாலை நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தலைநகர் தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கடும் பனி காரணமாக பருவகால காய்ச்சல், சளி, இருமல் என நோய்த்தொற்றுகளும் ஏற்படுகின்றன. நோய்த்தொற்றுகள் மட்டுமின்றி இதய நோய் உள்ளவர்களும் இந்த குளிர் காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகரிப்பதாகவும் அதுவும் குறிப்பாக வயதானவர்களிடம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் கூறும் மருத்துவர்கள், தற்போது இளைஞர்களும் மாரடைப்புக்கு ஆளாவதாக எச்சரிக்கின்றனர். 

இதைத் தவிர்க்க, குளிர்காலத்தில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னதான நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த வானிலை மாரடைப்பை அதிகப்படுத்தும். மட்டுமின்றி குளிர்காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, உடல் இயக்கம் குறைவாக இருத்தல், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தலைமுடி பராமரிப்பு: குளிக்கும்போது இந்த 5 விஷயங்களைச் செய்யாதீங்க!!

கடுமையான குளிர், ரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கும், ரத்த உறைவுக்கான வாய்ப்பு ஏற்படும். எனவே, உயர் ரத்த அழுத்தம் மற்றும் கரோனரி தமனி நோய் போன்ற இதய பிரச்னை உள்ளவர்கள் உடல் வெப்பநிலை சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

உடலில் கொழுப்பு காரணமாக ஒருவருக்கு 40-50% அடைப்பு இருந்தால் அது எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. ஆனால், இந்த கொலஸ்ட்ரால் வெடிக்கும்போது, அது ரத்தத்தை உடனடியாக உறைய வைக்கிறது. இதன் காரணமாக, அடைப்பு திடீரென 100% ஆக மாறி மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த நாளங்கள் சுருங்குவதால் குளிர்காலத்தில் இது மிகவும் பொதுவானது என்கின்றனர்.

இளைய தலைமுறையினருக்கு மாரடைப்பு

புகைபிடித்தல், உடல் பருமன், உடல் இயக்கமின்மை, மன அழுத்தம், போதை பழக்கம், தவறான உணவு ஆகியவை இளைய தலைமுறையினருக்கு மாரடைப்பு ஏற்பட வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏன், அதிக உடற்பயிற்சி செய்தாலும் கரோனரி நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கின்றனர். 

கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் புகைபிடிப்பவர்கள் மட்டுமின்றி உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படலாம். 

குளிர்காலத்தில் காலை நடைப்பயிற்சி மாரடைப்பை ஏற்படுத்துமா?

காலை நடைப்பயிற்சி பொதுவாக இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருந்தாலும், சில சூழ்நிலைகளில் அவை மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கலாம்.

குளிர்காலத்தில் உடல் சூடாக இருக்க முற்படுவதால், இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதய நோய் உள்ளவர்கள், குறிப்பாக கரோனரி தமனிகளில் பிரச்னை உள்ளவர்கள், குளிரில் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.

எனவே, இதய நோயாளிகள் கண்டிப்பாக அதிகாலை நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். சூரிய உதயத்திற்குப் பின்னர் நடைப்பயிற்சி செய்யலாம். 

குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, உடல் சூடாக இருக்க தகுந்த ஆடைகளை அணிவது, குளிருக்கு ஏற்றவாறு உடலை மென்மையாக சூடாக வைத்துக்கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

இதய பிரச்னைகள் இருந்தால் உடற்பயிற்சி செய்வது குறித்து கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

குளிர்காலத்தில் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள்!

மன அழுத்தம், காய்ச்சல், உடல் இயக்கம் குறைவு, துரித மற்றும் பொருந்தா உணவுகளைச் சாப்பிடுவது போன்ற காரணிகள் குளிர்காலத்தில் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

இதையும் படிக்க | பளபளக்கும் சருமத்திற்கு பப்பாளி! என்ன செய்ய வேண்டும்?

ADVERTISEMENT
ADVERTISEMENT