செய்திகள்

இந்தியர்கள் ஊட்டச்சத்து குறைவான உணவையே உண்கின்றனர்: ஆய்வில் சுவாரசியத் தகவல்கள்!

24th Aug 2023 10:59 AM

ADVERTISEMENT

இந்தியர்கள் ஊட்டச்சத்து குறைவான உணவையே சாப்பிடுவதாகவும் அதேநேரத்தில் பால் பொருள்களை அதிகம் சாப்பிடுவதாகவும் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 

கால மாற்றத்திற்கேற்ப மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களும் வெகுவாக மாறி வருகின்றன. அந்த வகையில், சத்தான உணவுகளை சாப்பிடும் பழக்கம் குறைந்து ருசிக்காக துரித உணவுகள், பொருந்தா உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர். இதனால் உடல் ரீதியான பிரச்னைகளும் தற்போது அதிகரித்து வருகின்றன. 

இந்நிலையில் வட மற்றும் தென் இந்தியாவில் உணவு முறைகள்- ஒப்பீடு என்ற தலைப்பில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகள் 'ஜர்னல் ஆஃப் ஹ்யூமன் நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்'(Journal of Human Nutrition and Dietetics) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

ஈட்- லான்செட்(EAT-Lancet) கமிஷன் அறிக்கையின்படி, உணவில் 32% முழு தானியங்கள், 23% புரோட்டீன் நிறைந்த காய்கறிகள் இருக்க வேண்டும். பால் பொருள்கள் 5% இருந்தாலே போதுமானது என்று கூறுகிறது. 

ADVERTISEMENT

ஆனால் இந்தியர்களோ 25% அளவில் பால் பொருள்களை உண்கின்றனர், 23% கொழுப்பு, 15% மட்டுமே முழு தானியங்கள், 4% மட்டுமே புரோட்டீன் நிறைந்த காய்கறிகளை உண்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | நீங்கள் ஹோட்டலில் அதிகம் சாப்பிடுபவரா? டிபிஎம் பற்றி தெரியுமா? - எச்சரிக்கும் நிபுணர்கள்!

இந்த இடைவெளியால் கிராமப்புற மற்றும் ஏழைப் பெண்கள் மோசமாகப் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது.

2019 ஆம் ஆண்டு ஹரியாணாவில் உள்ள சோனிபட் மற்றும் ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் மொத்தம் 8,762 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன. இவர்களில் 50%க்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். 

இந்த மேலும் சில சுவாரசியமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. 

நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் உணவு முறைகளை ஒப்பிடும்போது, ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகள், இதர காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளின் நுகர்வு நகர்ப்புறங்களில் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில், முழு தானியங்கள் மற்றும் பால் பொருட்களை மக்கள் அதிகம் உண்கின்றனர்.

அதுபோல எடுத்துக்கொள்ளும் உணவுகளில் ஆண்கள், பெண்களிடையேயும் வேறுபாடு இருந்தது. உருளைக்கிழங்கு, சோளம், பட்டாணி, பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றை பெண்கள் அதிகம் உண்ணும் நிலையில் ஆண்கள் அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கின்றனர். 

இதையும் படிக்க | தினமும் 10,000 அடிகள் நடந்தாக வேண்டுமா? மகிழ்ச்சியான புதிய தகவல்!

இதேபோன்று பணக்காரர்கள் அதிக காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது. 

முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் கொழுப்பு பொருள்கள் சோனிபட்டைவிட விசாகப்பட்டினத்தில் அதிகமாக இருப்பதாகவும் அதேநேரத்தில் ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகள் மற்றும் எடுத்துக்கொள்ளும் சர்க்கரைகளின் அளவு சோனிபட்டில் அதிகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியர்கள் ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளைவிட அதிக பால் உட்கொள்கின்றனர், எனவே இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த ஆய்வு அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், ஏழைகள் மற்றும் கிராமப்புற மக்கள் மீது குறிப்பிட்ட கவனம் செலுத்தி, அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் மலிவாக கிடைக்கச் செய்து நாட்டில் ஊட்டச்சத்து முறையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | டாப் 10 இந்திய உணவுகள் என்னென்ன தெரியுமா? லிஸ்ட்டில் பிரியாணி இருக்கிறதா?

ADVERTISEMENT
ADVERTISEMENT