செய்திகள்

நம்பிக்கையும் உண்மையும்: கண் வலியால் பாதித்தவரைப் பார்ப்பவருக்கும் தொற்று ஏற்படுமா?

8th Aug 2023 01:43 PM

ADVERTISEMENT

கண் வலி பாதித்த நபரைப் பார்ப்பவர்களுக்கு கண் வலி வரும், சன் கிளாஸ் போடுவது கண் வலி வராமல் தடுக்கும் என கண் வலி/கண் சிவத்தல் குறித்த பல்வேறு நம்பிக்கைகள் கூறப்படுகின்றன. இந்த கூற்றுகள் எல்லாம் சரியா?  

கண் வலி(கான்ஜுன்க்டிவிடிஸ்) குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாச ராவ். 

கண் வலி பாதித்த நபரைப் பார்ப்பவர்களுக்கும் கண் வலி வரும்.

கண் வலி பாதித்த ஒரு நபரைப் பார்ப்பதன் மூலமாக எதிர் நபருக்கு கண்ணில் தொற்று ஏற்படாது. மாறாக, கண் வலி பாதித்தவரின் துணி, படுக்கை விரிப்புகள், உடைகள், கண்ணாடிகள் உள்ளிட்ட அவர் பயன்படுத்திய பொருள்கள் மூலமாகவும் அவர் தொட்டு பயன்படுத்திய மேசை, நாற்காலிகள் என பொதுவான பொருள்கள் மூலமாகவும் பரவலாம். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | பொருந்தா உணவுகளைச் சாப்பிடுவதால் தூக்கம் பாதிக்கப்படுமா? 

சன் கிளாஸ் எனும் வெயிலில் இருந்து பாதுகாக்கக்கூடிய கண்ணாடிகள் கண் வலி தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

தொற்று பரவாமல் தடுக்க சன் கிளாஸ் பயன்படாது. மாறாக, வெளிச்சத்தினால் கண்ணில் ஏற்படும் அசௌகரியத்தைத் தடுக்கவும் கண்களைத் தொடுதலைத் தடுக்கவும் மட்டுமே உதவும். 

கண் வலி பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருள்களை அப்புறப்படுத்திவிட வேண்டும், அதன்பின் பயன்படுத்தக்கூடாது.

கண் வலி பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருள்களை சில நாள்களுக்கு சூடு தண்ணீர் கொண்டு நன்றாக சலவை செய்த பின்னர் மீண்டும் பயன்படுத்தலாம். 

கண் வலி குழந்தைகளிடம் மட்டுமே ஏற்படும்.

பாலின வேறுபாடின்றியும் அனைத்து வயதினருக்கும் கண் தொற்று ஏற்படும். வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படுவன தொற்றும் தன்மை கொண்டவை. அலர்ஜி/ஒவ்வாமையால் ஏற்படும் கண் வலி பரவாது. 

தாய்ப்பால், கோழி இறைச்சியின் ரத்தம் போன்ற பொருள்களை கொண்டு செய்யப்படும் வீட்டு வைத்தியங்கள் கண் தொற்றைக் குணமாக்கும்.

சிகிச்சை எதுவுமின்றி குணமாகக்கூடிய தொற்று இது. எனினும், மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை எடுத்துக்கொள்வதையோ, வீட்டு வைத்தியங்களையோத் தவிர்க்க வேண்டும். இயல்பைவிட அறிகுறிகள் அதிகம் இருந்தால் சிகிச்சைக்காக கண் நிபுணரை அணுகுவது நல்லது. 

இதையும் படிக்க | நம்பிக்கையும் உண்மையும்: மாதவிடாயின்போது உடற்பயிற்சி செய்யலாமா?

ADVERTISEMENT
ADVERTISEMENT