செய்திகள்

ஆண்களுக்கு...பெண்களிடம் பிடிக்காத 5 விஷயங்கள்!

24th May 2022 01:36 PM | எம். முத்துமாரி

ADVERTISEMENT

கணவன்-மனைவியோ, காதலன் -காதலியோ இன்று உறவுகளில் காணப்படும் புரிதல்கள் மிகவும் குறைவு. அதனால்தான் சண்டைகளும் சச்சரவுகளும்.. சிறுசிறு காரணங்களுக்காக உறவு முறிதலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. 

இன்றெல்லாம் எந்த அளவுக்கு வேகமாக ஒரு காதல் தோன்றுகிறதோ, அதே வேகத்தில் முடிவடைந்தும் விடுகிறது. இக்கால இளம்பெண்களும் ஆண்களும் 'முதிர்ச்சித் தன்மை'(மெச்சூரிட்டி) அதிகம் காணப்படுவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். காதலும் காதல் முறிவும் இன்று சர்வசாதாரணமாகி விட்டது.

உண்மையில் பழகியபின்னர் பிடிக்காத ஒரு உறவை வாழ்க்கையில் இருந்து விலக்குவது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால், நவீனத்தின் ஒரு பகுதியாக இன்று ஆண் -பெண் உறவுகளில் புதிய பல பெயர்களும் தோன்றிக்கொண்டிருக்கின்றன. 

காதலன்-காதலியைத் தாண்டி இன்று 'கேர்ள்/பாய் பெஸ்டி', 'பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ்' என்று கலாசாரங்கள் மாறிய வண்ணம் இருக்கின்றன. ஏன், டேட்டிங் செயலிகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. இந்த நவீன கலாசாரம் எல்லாம் சரிதானா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இதுபோன்ற நட்பு ரீதியான எதிர்பாலின உறவுகளிலும் புரிதலின்மை அதிகம் இருக்கிறது. ஒருவர் மீதான மற்றொருவரின் எதிர்பார்ப்புகளும் அதில் ஏற்படும் ஏமாற்றங்களும்தான் உறவுகளில் ஏற்படும் விரிசல்களுக்கு முக்கியக் காரணமாகின்றன. 

ADVERTISEMENT

இதைத் தவிர்க்க, அன்பின் மீதான நம்பிக்கை இருவருக்கும் இருக்க வேண்டும், தன்னுடைய காதலன்/காதலிக்குப் பிடித்தவை, பிடிக்காதவை குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும். 

பொதுவாக ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத சில விஷயங்கள்

பெண்களும் சரி, ஆண்களும் சரி எதிர்பாலினத்தவர் மீதான எதிர்பார்ப்புகள் மனித இயல்புதான். ஆனால் இங்கு ஒருவரின் எதிர்பார்ப்புகள் என்னவென்பதுதான் புரிந்துகொள்ளப்படாமல் உள்ளது. 

பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பதுபோலவே ஆண்களும் பெண்களிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். அந்தவகையில், ஆண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்: 

மாற்ற முற்படுவது 

ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, அவரவர் குணங்களை நடவடிக்கைகளை மாற்ற முற்படுவது உறவில் குழப்பத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு நெகிழ்வுத்தன்மை அதிகம் என்பதால் வேறு ஒரு வாழ்க்கைச் சூழல் அமைந்தாலும் அதற்கேற்றாற்போல தங்களை முடிந்தவரை தகவமைத்துக்கொள்கிறார்கள். 

ஆனால், ஆண்களுக்கு தங்களது தனிப்பட்ட நடவடிக்கைகள், நட்பு வட்டாரங்கள், ஏன்...உடை அணியும் முறை, ஹேர் ஸ்டைல் உள்ளிட்ட ரசனைகளில்கூட என அவர்களுக்கென்று ஒரு முறையைப் பின்பற்றுவார்கள். நடவடிக்கைகளில் தவறு இருந்தால் பெண்கள் அதில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது சரிதான். ஆனால், அவர்களுக்குப் பிடித்த சிறு சிறு விஷயங்களை மாற்றச் சொல்வது தவறு.

நீண்ட நேர பேச்சுகள் 

பேசுவது.. இந்த விஷயத்தில் பெண்களின் எதிர்பார்ப்புகளும் ஆண்களின் எதிர்பார்ப்புகளும் முற்றிலும் வெவ்வேறானவை. பெண்கள் பொதுவாக அதிகம் பேசுவார்கள் என்ற கருத்து இருக்கிறது. அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், உறவின் தொடக்கத்தில் அதிகம் பேசும் ஆண்களுக்கு, போகப்போக அந்த வேகம் குறைந்துவிடுகிறது. ஆரம்பத்தில் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள, தெரிந்துகொள்ள அதிகம் இருக்கும். ஆனால், பெண்களின் எதிர்பார்ப்போ தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், புரிதல் ஏற்பட்ட ஒரு உறவில் தினமும் பல மணி நேரம் பேசுவது தேவையற்றது என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

இதையும் படிக்க | திருமணத்திற்குப் பின் பெண்கள், கணவரின் பெயரை சேர்க்க வேண்டுமா? - இந்திய இளைஞர்களின் பதில்!

அதிகாரம் 

முன்பெல்லாம் பெரும்பலாக வீட்டில் ஆண்கள்தான் குடும்பத்தை வழிநடத்துவர். ஆனால், இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் படித்து வேலைக்குச் செல்கிறார்கள். குடும்பத்தை பொருளாதார ரீதியாகவும் பார்த்துக்கொள்கிறார்கள். இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதால் வீட்டில் இருவருமே அதிகாரத்தை கையில் எடுக்கின்றனர். இதனாலும் ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.ஒருவருக்கொருவர்  சம அளவில் மரியாதை கொடுத்தாலே இந்த பிரச்னை வராது. சில நேரங்களில் பெண்கள் அதிகளவு அதிகாரம் செய்வதே உறவு முறிதலுக்கு காரணமாகிவிடுகின்றன. 

உணர்ச்சி கையாளுதல் 

உணர்ச்சிகளை அவ்வளவு எளிதில் யாரும் கட்டுப்படுத்திவிட முடியாது. கோபம், அழுகை, காதல் என அனைத்துமே மனிதனிடையே இயல்பானவை. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவே உணர்ச்சிகள் பயன்படுகின்றன. ஆனால், அந்த உணர்ச்சிகளினாலே சில பிரிவுகளும் நேர்கின்றன. 

உணர்ச்சிகள் என்பது ஒருவர் உள்ளுக்குள் என்ன உணர்கிறார் என்பதை வெளிப்படுத்தவும், அதை மற்றவர் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. ஆனால், இந்த உணர்ச்சிகளை வைத்தே ஆண்களைக் கையாள பெண்கள் நினைத்தால் அது தவறு. ஆண்களுக்கும் இது பொருத்தும். முதிர்ச்சியான நபராக ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் உறவில் அவசியம். ஆனால் உறவு நீடிக்க உணர்ச்சிகளும் அவசியம்தான். 

அதிக அன்பு 

நீங்கள் சரி என்று நினைக்கும் ஒரு விஷயம் மற்றவருக்கு தவறாகத் தோன்றலாம். ஒவ்வொருவருக்கும் விருப்பு வெறுப்புகள் மாறுபடுகின்றன. ஒருவருக்கேற்றவாறு துணை அமைவது என்பது அரிதிலும் அரிதுதான். மாறாக, ஒருவரது குணத்தைப் புரிந்துகொண்டு நடத்தலும் விட்டுக்கொடுப்பதிலுமே பெரும்பாலான உறவுகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், அதிக அன்பும் ஆபத்துதான். அன்பு என்ற பெயரில் சிலர் எப்போதும் நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள். அது ஆண்களுக்குப் பிடிக்காது. 'பொசசிவ்' என்ற பெயரில் தன்னிடம் மட்டும்தான் பேச வேண்டும், நேரம் செலவழிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் உறவில் விரிசலை ஏற்படுத்தும். 

ஆனால், அன்பை பகிர்ந்துகொள்ளுதல் வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது. 

ஆண்களுக்கு.... 

ஆண்களுக்கு பெரும்பாலாக உணர்ச்சியையோ காதலையோ வெளிப்படுத்தத் தெரியாது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், உங்களின் காதலி/மனைவியின் உறவு நீடிக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு அவ்வப்போதாவது அவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்துகொள்ள வேண்டும். வேலை, அலுவலகம் என்றிராமல் நாளுக்கு அரை  மணி நேரமாவது அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும்.  புரிதல் இல்லா சமயத்தில் இருவரும் பேசினாலே போதுமானது. 

இதையும் படிக்க | 30 வயதை அடையப் போகிறீர்களா? மாற்ற வேண்டிய 7 விஷயங்கள்!

ADVERTISEMENT
ADVERTISEMENT