செய்திகள்

ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுபவரா? செலவைக் குறைப்பது எப்படி?

30th Aug 2022 02:08 PM | எம். முத்துமாரி

ADVERTISEMENT

 

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த உலகத்தில் அன்றாடப் பழக்கவழக்கங்களும் பெரிதும் மாறிவிட்டன. குறிப்பாக உணவு முறைகள் காலத்திற்கேற்ப மாறத் தொடங்கிவிட்டன. 

முன்னொரு காலத்தில் நல்ல சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்த நிலை மாறி, இன்று சத்தான உணவுகள் அரிதாகவே பார்க்கப்படுகின்றன. ஹைபிரிட் முறையில் உணவுப் பொருள்களும் விளைவிக்கப்படுவதால் தரம் குறைந்துவிட்டது. 

துரித உணவுகள், கொஞ்சமும் சத்தில்லாத 'பொருந்தா உணவு' (junk food)களைக் கூட சாப்பிடுகிறோம். தரம் குறைத்து சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பழகிவிட்டோம்.  

ADVERTISEMENT

குறிப்பாக நகரங்களில் வீட்டில் பெரியவர்கள் அனைவருமே வேலைக்குச் செல்லும் பரபரப்பான சூழ்நிலையில் சமைக்க நேரமின்றி அவசரமாக ஏதோ சமைத்து எடுத்துக்கொண்டும், சிலர் ஆன்லைன் ஆர்டர் அல்லது ஹோட்டலை நம்பி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். 

அதிலும் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், குழந்தைகளுக்கு சாப்பாடுகூட வெளியில் ஆர்டர் செய்து வாங்கி அனுப்பும் சூழல் இன்று நிலவுகிறது. 

மேலும், பேச்சலர் ஆண்கள், பெண்களும் இன்று அதிகமாக உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். 

கரோனாவுக்குப் பிறகு ஆன்லைனில் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதாக உறுதி செய்கிறது ஓர் அறிக்கை. ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களும் இதனை உணர முடியும்.

இதையே பொருளாதார நிபுணர்கள் 'லன்ச்ப்ளேஷன்'((Lunchflation) என்று கூறுகிறார்கள். அதாவது பணவீக்கம் என்பதுபோல, உணவுகளின் விலை அதிகரித்திருப்பதை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். மேலும், இது தனி நபரின் பொருளாதார தாக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். 

எனினும் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களுக்கு செலவுகளைக் குறைக்க சிலர் சில வழிகளை பரிந்துரைக்கின்றனர் நிபுணர்கள். 

இதையும் படிக்க | காலை எழுந்தவுடன் இதையெல்லாம் சாப்பிடாதீங்க! என்னென்ன சாப்பிடலாம்?

1. மாதாந்திர ஆர்டர் முறை 

வேலைக்குச் செல்லும் ஒரு நபர் நாள்தோறும் தினமும் காலை உணவு வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் ஆர்டர் செய்வதால் பணம் அதிகம் செலவாகும். ஊதியத்தில் பாதி உணவுக்கே செலவிடுவதாக சிலர் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

இதற்கு மாற்றாக, மாதாந்திர முறையில் இன்று உணவு டெலிவரி செய்யும் சிறு, குறு நிறுவனங்கள் அதிகம் இருக்கின்றன. நகரங்களில் வீட்டில் உள்ள பெண்களே எந்தவித விளம்பரமுமின்றி இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 

எனவே, நீங்கள் உங்கள் வீட்டுக்கு அருகிலே இதுபோன்று வீட்டில் சமைத்த உணவுகளை விற்பனை செய்கிறார்களா என்று தெரிந்துகொண்டு அதன் மூலம் பயன் பெறலாம். இதனால் பணம் மிச்சமாவதுடன் வீட்டில் சமைத்த உணவு என்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும், குறிப்பாக உடல் உபாதைகளைத் தவிர்க்கலாம். 

அதுபோல குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களும் இதன் மூலமாக  பயன்பெறலாம். 

நகரங்களில் மாதாந்திர முறையில், நாள் ஒன்றுக்கு மூன்று வேலை உணவு டெலிவரி செய்யும் உணவு சேவைகள் இன்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மாதம் ரூ. 3,000- 4,000 -க்கு மூன்று வேலை உணவு கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2. உணவு மறுசுழற்சி

2019 அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் ஜூன் 2022ல் பருப்பு, அரிசி, மாவு, காய்கறிகள் ஆகியவற்றின் விலை 10 முதல் 30% உயர்ந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கின்றது. 

எனவே, உணவுகளை வீணாக்குவதைத் தவிர்க்க வேண்டும். சிலர் ஒரு வேளைக்கு அளவுக்கு அதிகமாக உணவு சமைத்து விடலாம். அப்படி இருந்தால் அந்த உணவுகளை வீணாக்கிவிட்டு அடுத்த வேளைக்கு புதிய உணவை சமைப்பார்கள். 

இதைத் தவிர்க்க, மீதமுள்ள உணவை மறுபடியும் சமைத்து சாப்பிடலாம். (சில உணவுகளை மீண்டும் சமைத்து உண்ணக்கூடாது) உதாரணமாக இட்லி, சப்பாத்தி மீந்துவிட்டால், அதை உதிரியாக உப்புமா போன்று செய்து சாப்பிடலாம். சாதம் மீந்துவிட்டால் பிரைடு ரைஸ், புலாவ் போன்று செய்து சாப்பிடலாம். இவ்வாறு உணவை மறுசுழற்சி செய்தால் செலவும் மிச்சமாகும். மறுசுழற்சி செய்யக்கூடிய உணவுகளை மட்டும் இவ்வாறு பயன்படுத்தவும். 

இதையும் படிக்க |  'முந்தைய காதல்' பற்றி உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பேசியுள்ளீர்களா?

3. ஆன்லைன் வேண்டாமே! 

உணவு ஆர்டர் செய்யும் ஆன்லைன் தளங்களில் மக்களைக் கவரும் வகையில் குறிப்பிட்ட சதவிகிதம் விலையில் ஆஃபர் என்று விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், உண்மையில் அதே கடையில் சென்று நீங்கள் அதே பொருள் வாங்கினால் விலை சமமாகவோ பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். ஏனெனில், ஆன்லைன் ஆர்டரில் ஜிஎஸ்டி, டெலிவரி சார்ஜ் என விலை அதிகமாக இருக்கும். 

எனவே, முடியாதபட்சத்தில் மட்டும் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். மற்ற நேரங்களில் நீங்கள் பக்கத்து கடைகளுக்குச் சென்று வாங்கினால் விலை குறைவாக இருக்கும். 

அதுபோல பெரிய கடைகளில்தான் வாங்க வேண்டும் என்றில்லாமல், நன்றாக சமைக்கக்கூடிய அருகில் உள்ள கடைகளை நாடலாம். நிரந்தர வாடிக்கையாளராக நீங்கள் இருக்கும்போது அந்த கடையில் மேலும் சலுகைகளைப் பெறலாம். 

வீட்டில் சமைப்பவர்களுக்கு....

வீட்டில் சமைப்பவர்களும் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் வாங்காமல் அருகில் உள்ள மொத்த மளிகைக் கடையில் ஒருமுறை வாங்கிப் பார்க்கலாம். 

சில உணவுப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள் பருவ காலங்களில் விலை குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் அந்த பொருள்களை வாங்கினால் செலவைக் குறைக்கலாம். 

ஒரு மாதத்திற்கு ஆகும் செலவு, உங்கள் வருமானம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து வரவு- செலவுக்கேற்ப சரிசெய்துகொள்ளலாம். 

அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மொத்தமாக வாங்கலாம். மொத்த விலைக் கடைகளில் வாங்கும்போது விலை குறையும். 

எந்த பொருள்களை அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ அதை மட்டும் அதிகமாக வாங்கி தேவையற்ற பொருள்களை தவிர்த்து விடலாம். 

பிரைடு ரைஸ், ப்ரெட் ஆம்லெட், சான்ட்விச் என வீட்டில் சமைக்க முடிந்த உணவுகளை வீட்டிலே செய்து சாப்பிடலாம். 

இதையும் படிக்க | மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வந்துவிடுகிறதா? என்ன காரணம் தெரியுமா?

ADVERTISEMENT
ADVERTISEMENT