செய்திகள்

உங்க பணம் பத்திரமாக இருக்க இது ஒன்று போதுமே!

26th Aug 2022 04:11 PM

ADVERTISEMENT

கையில் பணம் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் சென்று செலவழிக்கும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதே தவிர, பணம் பத்திரமாக இருக்கிறதா? என்றால் இல்லை. 

கையில் பணத்தை வைத்துக் கொண்டு பத்திரமாக இருக்கிறதா என்று பையை கையில் பிடித்துக் கொண்டே திக் திக் என்ற நெஞ்சத்தோடு பயணித்த காலங்கள் முடிந்துவிட்டன. பிறகு வங்கிகள், டெபிட், கிரெடிட் அட்டைகள் என மாறின. அதிலும் பணத்தை திருடும் கும்பல் உருவானது.

இதையும் படிக்க | காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது? குலாம் நபி ஆசாத்தின் மிக நீண்ட கடிதம்

இப்போது, எந்த அட்டையும் வேண்டாம், செல்லிடப்பேசியிலேயே எல்லாவற்றையும் முடித்துவிடலாம் என்ற அளவுக்கு மாறிவிட்டாலும், அதே செல்லிடப்பேசியிலேயே இருந்த இடத்திலிருந்தே பணத்தைக் கொள்ளையும் அடித்துவிடுகிறார்கள். 

ADVERTISEMENT

நாள் ஒன்றுக்கு புதிது புதிதாக மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிக்கும் காவல்துறை மக்களை எச்சரிப்பதற்குள் அடுத்தமோசடியைக் கண்டுபிடித்துவிடுகிறது மோசடி கும்பல்.

இதற்கு வழியே இல்லையா?  இருக்கிறது ஒரு வழி இருக்கிறது.

பொதுவாக ஒருவருக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும். அதில் ஊதியம் வரும். அதனை பணமாக எடுத்தோ, டெபிட் அட்டையைப் பயன்படுத்தியோ அல்லது அந்த வங்கிக் கணக்கை ஜிபேயில் இணைத்தோ மாதம் முழுக்க நாம் செலவிட்டுக் கொண்டிருப்போம்.

ஆனால், மாத ஊதியம் வரும் வங்கிக் கணக்குக்கு மாற்றாக, நாம் மற்றுமொரு (குறைந்த இருப்புத் தொகை அதிகமாக இல்லாத வங்கியில்) வங்கிக் கணக்கைத் தொடங்கி அதற்கு மொபைல் மற்றும் இணைய சேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மாத ஊதியம், முதல் வங்கிக் கணக்கில் வந்ததும், தேவையான தொகையை இந்த வங்கிக் கணக்கு மாற்றி, அதிலிருந்து எல்லாவற்றுக்கும் செலவிட வேண்டும். இரண்டாவது வங்கியின் கடன் அட்டை, டெபிட் அட்டைகளை எங்குச் சென்றாலும் பயன்படுத்தலாம். இரண்டாவது வங்கிக் கணக்கை ஜிபேயுடன் இணைத்து பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

அதிலிருக்கும் குறிப்பிட்டத் தொகை காலியானதும், பிறகு மீண்டும் முதல் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை இரண்டாவது வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால், முதல் வங்கிக் கணக்கின் விவரங்கள் எங்கும் பகிர வேண்டிய அவசியம் இருக்காது. இரண்டாவது வங்கிக் கணக்கில் பெரிய தொகை எதுவும் இருக்காது என்பதால், எந்த அச்சமும், பயமும் இல்லாமல் வங்கிக் கணக்கை எங்கும் பகிரலாம், டெபிட் கார்ட்டை பயன்படுத்தி எந்தப் பொருளும் வாங்கலாம். ஜிபேயில் பணப்பரிவர்த்தனையையும் செய்யலாம்.

எல்லோராலும் இரண்டு வங்கிக் கணக்குகளை பராமரிக்க முடியாது என்றாலும், அவசியப்படுவோர், அடிக்கடி வெளியில் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வோர், வங்கிக் கணக்கில் குறிப்பிடத்தக்க அளவில் பணம் வைத்திருப்போர் நிச்சயம் இந்த வழியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT