செய்திகள்

11 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது சரியா?

1st Nov 2021 12:52 PM

ADVERTISEMENT

சமூக வலைத்தளங்கள் இன்று நாம் நினைக்காத அளவுக்கு மனித சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்தை எளிதாக்க இணையமும் டிஜிட்டல் சாதனங்களும் வந்த நிலையில் இன்று சமூக வலைத்தளங்கள் மட்டுமே இணையம் என்ற அளவுக்கு மாறிவிட்டன. 

சிறு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை, சாமானியன் முதல் பணக்காரன் வரை வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைத்தளங்கள் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. 

இதில் குழந்தைகள் பற்றி சொல்லவே தேவையில்லை. பெரியவர்களைவிட சமூக வலைத்தளங்களில் அதிகம் இருப்பது குழந்தைகளும் இளம் வயதினரும்தான். எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் இருக்கும் சமூக வலைத்தளங்களினால் ஏராளமான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. 

ADVERTISEMENT

இந்நிலையில் சமீபத்திய ஓர் ஆய்வு அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சாதாரணமாக  13 வயது நிறைவடைந்தவுடன் மட்டுமே சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். ஆனால், போலி விவரங்களை வைத்து இன்று சமூக வலைத்தளங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதற்காக ஒரு கணக்கெடுப்பு நடத்தியதில் ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் 10 அல்லது அதற்கும் வயது குறைந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மூன்றில் மற்றொரு பங்கினர் 11-12 வயதுடையவர்கள். 

இதையும் படிக்க | வீட்டில் சுத்தம் செய்ய மறந்துபோகும் 8 முக்கிய பொருள்கள்!

11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது நடத்தை ரீதியாக எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

சமூக ஊடக தளங்களில் 11 வயதிற்கு முன் குழந்தைகள் இணைவது, ஆன்லைன் நண்பர்களை அதிகம் வைத்திருப்பது, பெற்றோர்கள் ஏற்காத சமூக ஊடகத் தளங்களில் இணைவது, பல மணி நேரங்கள் ஆன்லைன் நண்பர்களுடன் சாட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் இருந்தால் அத்தகைய குழந்தைகளுக்கு பொறுமையின்மை, உறக்கமின்மை, பழிவாங்கல், துன்புறுத்தல் போன்ற எதிர்மறை பண்புகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் 'கம்யூட்டர்ஸ் இன் ஹியூமன் பிஹேவியர்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

'இந்த ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான டிஜிட்டல் உபயோக அபாயங்களை புரிந்துகொள்ள உதவும். இதனால் பெற்றோர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு சில வரைமுறைகளை வகுக்க முடியும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பாதகங்கள் குறித்து குழந்தைகளுக்கு அறிவுறுத்தி தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்' என்று ஆய்வின் முதன்மை எழுத்தாளர் லிண்டா சார்மராமன் கூறினார். 

இதையும் படிக்க | உருளைக்கிழங்கு சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா?

எனவே, சமூக வலைத்தளங்கள் என்ற தொழில்நுட்பம் நம்முடன் பயணபட்டுக்கொண்டு தான் இருக்கும். அதனை சரியான விதத்தில் பயன்படுத்துவது குறித்து பெற்றோர்கள் தெரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகள் மொபைல்போனையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்காணித்து அவர்களுக்கு புரியும் வகையில் அதில் உள்ள நன்மை, தீமைகளை எடுத்துக்கூற வேண்டும். 

ஒரே கட்டமாக ஒட்டுமொத்தமாக அவர்களை சமூக வலைத்தளங்களில் இருந்து விடுவிக்காமல் படிப்படியாக அவர்களை சமூக ஊடகங்களில் இருந்து விடுவிக்க வேண்டும். சமூக ஊடகங்களினால் சில குழந்தைகள் பயன்படும் அதே நேரத்தில் பல குழந்தைகள் எதிர்மறை விளைவுகளை சந்திப்பதை பெற்றோர்கள், ஆசிரியர்கள் நினைத்தால் குறைக்க முடியும். 

இதையும் படிக்க | குழந்தைகளின் மனநலனைப் பாதுகாக்க...

Tags : Social media
ADVERTISEMENT
ADVERTISEMENT