செய்திகள்

குழந்தைகளும் ஸ்மார்ட்போன்களும்

26th Jul 2021 05:05 PM

ADVERTISEMENT

 

ஸ்மார்ட்போன்கள்.. உயிர்மூச்சுக்கு அடுத்தபடியாக மனிதனின் இன்றியமையாத தேவையாகிவிட்டது. எந்தவித பாகுபாடுமின்றி அனைத்துத் தரப்பினரும் எளிதாக பயன்படுத்தும் ஒரு மின்னணு கருவி என்றால் அது ஸ்மார்ட்போன்தான். 

குறிப்பாக குழந்தைகளும் ஸ்மார்போன்களும் இன்று பின்னிப் பிணைந்துவிட்டன. குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள், இன்று அவர்கள் நாள்தோறும் பயன்படுத்தும் தேவை உருவாகிவிட்டது. சிறு குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதற்கு பறவைகளை காட்டியது பறந்துபோய், இன்று ஸ்மார்ட்போன்களில் வரும் கார்ட்டூன் விடியோக்களை காட்டினால்தான் நன்றாக  சாப்பிடுகிறது. பள்ளிகளில் மட்டும் குழந்தைகள், செல்போன் பயன்படுத்தாத சூழ்நிலை இருந்த நிலையில், தற்போது ஆன்லைன் கல்வியால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனி செல்போன் வேண்டும் என்ற நிலையால் பெற்றோர் பலரும் அவதிப்படுகின்றனர். இவ்வாறான குழந்தைகளின் அனைத்து செயல்பாடுகளிலும் ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

சரி, இந்த ஸ்மார்ட்போன்கள் குழந்தைகள் பயன்படுத்தும்போது அது எந்த அளவுக்கு பயன்படுகிறது என்பது குறித்து நாம் யோசித்தது உண்டா? ஆன்லைன் வகுப்புகளுக்காக ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்கப்பட்டாலும் அது குழந்தையின் கல்விக்கு மட்டும்தான் பயன்படுகிறதா? 

ADVERTISEMENT

இதுகுறித்து குழந்தைகளின் உச்சபட்ச உரிமை அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. 

இதில் அதிர்ச்சிகரத் தகவல் என்னவென்றால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளில் 59.2 சதவிகித குழந்தைகள், தகவல்களை பரிமாறும் சாட் செயலிகளை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இவர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் ஆகியவற்றுக்காக ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறார்கள். 

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் இந்தியாவில் ஊரகப் பகுதிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கை 36 சதவிகிதத்தில் இருந்து 61 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும் சொந்தமாக ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் குழந்தையின் சராசரி வயது 10.3 என்கிறது ஒரு அறிக்கை. 

அதுபோல 12 வயதாகும் குழந்தைகளில் 50 சதவிகிதம் பேர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கிவிடுகின்றனர். 

சரி இந்த ஆய்வில் முறையாக ஆன்லைன் கற்றலுக்கு மட்டும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் குழந்தைகள் எவ்வளவு பேர் தெரியுமா? வெறும் 10.1 சதவிகித குழந்தைகள் மட்டுமே. இவர்கள் ஆன்லைன் வகுப்பு மற்றும் கல்விக்கு மட்டுமே ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. 

ஸ்மார்ட்போன்கள் குழந்தைகளின் உடல்நலம், நடத்தை, உளவியல் ரீதியாக எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எடுத்துரைத்தாலும் இன்று 30.2 சதவிகித குழந்தைகள் சொந்தமாக தனக்கென ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றனர். 

அதாவது, 8 முதல் 18 வயது வரையுடைய குழந்தைகளில் 30.2 சதவிகிதம் பேர் சொந்தமாக ஸ்மார்ட்போன் வைத்திருப்பதையோடு தங்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் இதனைப் பய்னபடுத்துகின்றனர் என்பது கூடுதல் தகவல். 

இதில், ஆச்சரியம் என்னவென்றால் 10 வயதுடையவர்களில் 37.8 சதவிகிதம் பேருக்கு பேஸ்புக் கணக்கு உள்ளது. அதே வயதினரில் 24.3 சதவிகிதம் பேர் இன்ஸ்டாகிராம் கணக்கைக் கொண்டுள்ளனர்.

13 வயதிலிருந்து குழந்தைகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அதேநேரத்தில் மடிக்கணினிகள், டேப்லெட்டுகளைப் பயன்படுத்துவது அனைத்து வயதினருக்கும் நிலையான அளவிலே உள்ளது. 

மடிக்கணினி, டேப்லெட்டுகளை விட ஸ்மார்ட்போன்கள் விலை குறைவு என்பதாலும் எளிதாக அணுக முடியும் என்பதாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனியே ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுக்க முடிவெடுக்கலாம் என்று கூறும் இந்த ஆய்வில், 72.70 சதவிகித ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதில் முன் அனுபவம் இல்லை என்றாலும் வகுப்பறையில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு கவனத்தை சிதறடிக்கும் என்றே 54.1 சதவிகிதம் பேர் நம்புகின்றனர்.

எனினும் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அவர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு பிற வாழ்க்கைத் திறன்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. 

Tags : smartphone Children
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT