செய்திகள்

வீட்டு வேலை செய்தால் நினைவாற்றல் பெருகும்; உடல் வலிமை பெறும்: ஆய்வில் தகவல்

3rd Dec 2021 12:27 PM

ADVERTISEMENT

வீட்டு வேலை செய்பவர்களுக்கு நினைவாற்றல், கவனம் செலுத்துதல் ஆகிய திறன்கள் அதிகரிக்கும் என புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அலுவலகத்தில் வேலை பார்ப்பதைவிட வீட்டு வேலை செய்வது பெரும் காரியம்தான். அதிலும் பெண்களின் பாடு திண்டாட்டம்தான். அதிலும் வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலக வேலையுடன் வீட்டு வேலையையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் சில வீடுகளில் மட்டும் வீட்டு வேலை இருவராலும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. 

இந்நிலையில் ஒரு புதிய ஆய்வின்படி வீட்டு வேலை செய்வது பல்வேறு வகைகளில் உடலுக்கு பயிற்சியாக நன்மைகளைத் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வீட்டு வேலை செய்பவர்களுக்கு நினைவாற்றல், கவனம் செலுத்துதல், கால்களில் வலிமை அதிகரிப்பு, கீழே விழுவதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள்  'பிஎம்ஜே ஓபன்'(BMJ Open) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதையும் படிக்க | மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 அறிகுறிகள்! தீர்வு என்ன?

ஒவ்வொரு நாளும் வழக்கமான உடல் செயல்பாடு தேவை. அது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். வயது வந்தவர்களையும் வயதானவர்களை பல்வேறு நோய் நிலைகளில் இருந்து தடுக்கிறது. 

நல்ல பணவசதி இருக்கும் சில வீடுகளில் சிலர் தாங்களே தங்கள் வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது என்று ஈடுபடுவர். உண்மையில், அவ்வாறு வீட்டு வேலை செய்வது உடலை இயக்கத்தில் வைப்பதால் அன்றாட செயல்பாடுகளைத் தருகிறது. 

21 முதல் 90 வயதுடைய 489 பேர் வயதுவாரியாக பிரிக்கப்பட்டு ஆய்வில் பங்கேற்றனர். அவர்களது வீட்டு வேலைகளை அவர்களே செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதிலும் இரு வகைகளாக பிரிக்கப்பட்டனர். வீட்டை மேலோட்டமாக சுத்தம் செய்வது, படுக்கையை விரிப்பது உள்ளிட்ட லேசான வேலை செய்வோர், வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்வது, துணி துவைப்பது, படுக்கையை மாற்றுவது என அதிக வேலை செய்வோர். 

அதன்பின்னர் இரு தரப்பினருக்கும் சில உடற்பயிற்சிகளும், நினைவுத் திறன் சோதனைப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 

இதில் ஒரே வயதுடையவர்களில், அதிக வேலை செய்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் நல்ல நினைவுத் திறனையும் பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. 

வீட்டு வேலைகள் செய்வதை தினசரி வாழ்க்கைமுறையில் ஒரு உடல் செயல்பாடாக இணைத்துக்கொள்வது ஆற்றலைத் தரும் என்றும் இது உங்களின் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்யத்துடன் தொடர்புடையது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | உடற்பயிற்சிக்கும் மனநலனுக்கும் என்ன தொடர்பு?

ADVERTISEMENT
ADVERTISEMENT