செய்திகள்

கட்டாயத் திருமணத்தால் வீட்டைவிட்டு வெளியேறி 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு அதிகாரியான மீரட் பெண்!

DIN

கட்டாயத் திருமணம் செய்ய குடும்பத்தினர் வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறி 7 வருடங்களுக்குப் பின்னர் மாநில சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று  வீடு திரும்பியுள்ளார் மீரட்டைச் சேர்ந்த பெண் ஒருவர். 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு ராணி வர்மா. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதுகலைப் படிப்பு தில்லி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது அவரது தாய் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முன்னதாக மீரட்டில் உள்ள ஆர்.ஜி. கல்லூரியில் இளங்கலை படிப்பு முடித்திருந்தார். 

தாயார் இறந்தபின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவருக்குத் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று சஞ்சு எவ்வளவு கூறியும் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். 

இதனால் படிப்பைத் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் சஞ்சு வீட்டை விட்டு வெளியேறி தில்லியில் குடியேறினார். குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது உள்ளிட்ட பகுதிநேர வேலையில் ஈடுபட்டு வரும் பணத்தை வைத்து படிப்பை முடித்தார். பின்னர், அரசு வேலைக்குத் தன்னை தயார் படுத்தினார். 

7 வருடங்களுக்குப் பின்னர் அவரது முதல் கனவு நிறைவேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநில அரசுப் பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். விரைவில் மாநில வணிகவரி அதிகாரியாக பணியில் இணையவுள்ளார். 

அரசுத் தேர்வில் வெற்றி பெற்ற கையோடு அவர் வீடு திரும்பியுள்ளார். எனினும், யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பதே தனது விருப்பம் எனக்கூறிஅடுத்தகட்ட கனவை நோக்கி படையெடுக்கிறார். 

இதுகுறித்து சஞ்சு கூறும்போது, '2013ல் வீட்டைவிட்டு வெளியேறிய நான் தில்லியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன். குழந்தைகளுக்கு வீட்டில் டியூஷன் எடுப்பது, தனியார் பள்ளிகளில் பகுதி நேர வேலை என கிடைத்த பணத்தில் எனது முதுகலைப் படிப்பை முடித்தேன். அதேநேரத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் தயாராகி வந்தேன். கடந்த வாரம் மாநில அரசு தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். விரைவில் வணிகவரித் துறை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளேன். 

எனது அம்மா மறைந்த உடன் என்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினர். எனது கனவை கூறும்போது அவர்கள் அதனை மதிக்கவில்லை. எனவே, எனது வழியில் பயணிக்க ஆரம்பித்தேன். நான் தனியாக சென்றதால் குடும்பத்தினர் என் மீது கோபத்தில் இருந்தனர். இப்போது அரசு அதிகாரி ஆனதில் அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பர். எனது குடும்பக் கடமைகளை உணர்ந்துதான் நான் படித்து தேர்வில் வெற்றி பெற்றேன்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT