செய்திகள்

'கரோனாவால் தனிமையில் இருக்கும் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு'

15th Sep 2020 02:04 PM

ADVERTISEMENT

கரோனா பேரிடர் காலத்தில் தனிமையை உணரும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

வெளியில் செல்லாமல் இருப்பது, கூட்டமிருக்கும் இடங்களைத் தவிர்ப்பது ஆகியவை கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் என கூறப்படும் அதேநேரத்தில், அவ்வாறு இருப்பதால் மன ரீதியாக பலர் பாதிக்கப்பட்டு வருவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்த கணக்கெடுப்புகளில் 2020 ஜூன் மாதத்தில் அதாவது கரோனா பரவல் தொடக்க காலத்தில், 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 56 சதவிகிதம் பேர் தாங்கள் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.

2018ல் இதுபோன்ற ஒரு கணக்கெடுப்பில் வயதானவர்கள் 27 சதவிகிதம் பேர் மட்டுமே தனிமையில் இருந்ததாகக் கூறியுள்ளனர். கரோனா பேரிடர் காலத்தில் இது இரு மடங்காக உயர்ந்துள்ளது சமீபத்திய கணக்கெடுப்பின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

மேலும், கரோனா தொற்றுக்குப் பின்னர் வயதானவர்கள் தங்கள் தோழமைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பலருக்கு சமூகத் தொடர்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜூன் மாதத்தில் 46 சதவிகிதம் பேர் தங்கள் நண்பர்கள், அண்டை வீட்டாருடன் தொடர்பு அவ்வளவாக தொடர்புகொள்ளவில்லை என்று தெரிவித்தனர். இது 2018ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 28 சதவிகிதமாக இருந்துள்ளது. 

தேசிய சுகாதார அறிக்கையில் உள்ள 2020 மற்றும் 2018 தரவுகளை ஒப்பிட்டு மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுகுறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். 

இதில், 46 சதவிகிதம் பேர் தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுடன் வாரத்திற்கு ஒரு முறையாவது உரையாடுவதாகக் கூறினர். இவர்களில் தனிமையை உணர்ந்தவர்கள் மிகவும் குறைவு. இதில் 59 சதவிகிதம் பேர் வாரத்திற்கு ஒரு முறையாவது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறினர், 31% பேர் வாரத்திற்கு ஒரு முறையாவது விடியோவில் நண்பர்களுடன் பேசுவதாகத் தெரிவித்தனர். இதன்மூலமாக அவர்கள் தனிமையை தவிர்த்துக்கொண்டதாகத் கூறினர். 

அதேபோன்று, தொற்றுநோய் அச்சுறுத்தலை மீறி 75% பேர் ஆரோக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.  70% பேர் வெளியில் வருவதாகவும், 62% பேர் வாரத்திற்கு பலமுறை உடற்பயிற்சி செய்வதாகவும் கூறினர். ஆனால், தனிமையை அனுபவிப்பவர்கள் இந்த ஆரோக்கியமான நடத்தைகளில் ஈடுபடுவது குறைவு என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக இந்த கரோனா காலத்தில் வயதானவர்கள் மூன்றில் இருவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. வயதானவர்கள் ஏற்கெனவே தனிமையை உணர்வது அதிகம் என்று கூறிய நிலையில், தற்போது  கரோனா காரணமாக மேலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Tags : lifestyle
ADVERTISEMENT
ADVERTISEMENT