செய்திகள்

ஸ்மார்ட் போனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சாதனங்களுக்கு அடிமையாகும் மக்கள்!

11th Sep 2020 11:52 AM

ADVERTISEMENT

ஸ்மார்ட் போன்களைத் தொடர்ந்து ஸ்மார்ட் சாதனங்கள் பயன்பாடும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் மனித வாழ்வியல் தேவைகளில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. எதிர்பார்த்ததைவிட அதிவேகமாக அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மக்களும் அதை நோக்கி பயணிக்கின்றனர். 

2020 ஜனவரி நிலவரப்படி, இந்தியா முழுவதும் 50 கோடி பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதாகவும் அதில் 77% பேர் ஸ்மார்ட்போனில் இணையதள சேவையை பயன்படுத்துவதாகவும் டெக் ஏஆர்சி தெரிவிக்கிறது.

மேலும், இந்தியர்கள் சராசரியாக தாங்கள் விழித்திருக்கும் நேரத்தின் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை ஸ்மார்ட் போன்களில்  செலவிடுகிறார்கள். ஸ்மார்ட் போன்கள் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்ட இந்நிலையில், ஸ்மார்ட் போன்களைத் தொடர்ந்து ஸ்மார்ட் சாதனங்கள் பயன்பாடும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானோர் அதோடு தொடர்புடைய பலவகையான ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் கேட்ஜெட்களை பயன்படுத்துகின்றனர். மேலும், அவற்றை தொடர்ந்து பயன்படுத்தவும் மக்களிடையே ஆர்வம் அதிகமாக உள்ளது. 

இவற்றில் முக்கியமாக வை-பை, நெட்ஒர்க் சாதனங்கள், கண்காணிப்பு கேமராக்கள், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பொதுவாக ஸ்மார்ட் போன்களுடன் இணைக்கக்கூடிய கருவிகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. 

தற்போது ஓடிடி தளங்கள் எழுச்சி பெற்றுள்ளதை அடுத்து, ஸ்மார்ட் டிவியின் பயன்பாடு சமீப காலத்தில் பெருமளவு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட் போன்களுடன் எளிதாக ஸ்மார்ட் டிவியை இணைத்து ஓடிடி தளங்களை மேம்பட்ட ஆடியோ, விடியோ தரத்துடன் காணலாம். 

ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு போலவே, ஸ்மார்ட் சாதனங்களும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெறும் என்று டெக் ஏஆர்சியின் நிறுவனர் மற்றும் தலைமை ஆய்வாளர் பைசல் கவூசா கூறுகிறார். 

மேலும், கடந்த 3 மாதங்களில் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ மற்றும் ஸ்மார்ட் எஸ்.டி.பி (செட் டாப் பாக்ஸ்) ஆகிய இரண்டு ஸ்மார்ட் சாதனங்களும் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகத் தெரிவித்தார். 

'The Connected Indian Consumer' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியர்கள், ஸ்மார்ட் சாதனங்களின் மூலமாக புத்திசாலித்தனம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கை அனுபவம் மேம்படுவதாக உணர்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், அமேசான் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட குரல் தளங்களில் செய்யப்பட்ட 2,500 பயனர்களின் கணக்கெடுப்பில், இந்தியர்களின் ஸ்மார்ட் கருவிகளின் பயன்பாட்டில் ஸ்மார்ட் போன்களே முதல் சாதனமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : smartphone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT