செய்திகள்

'நினைவாற்றலை அதிகரிக்க கூடுதலாக 29 நிமிடங்கள் தூங்குங்கள்!'

19th Oct 2020 01:29 PM

ADVERTISEMENT

ஒவ்வொரு இரவும் கூடுதலாக 29 நிமிடங்கள் தூங்குவது நினைவாற்றலை மேம்படுத்த உதவும் என்று கூறுகிறது புதிய ஆய்வு.

மனநிறைவு என்பது அனைத்து விஷயத்திலும் அவசியமானது. அதிலும் தூக்கத்தில் மனநிறைவு என்பது அன்றைய பொழுதை அர்த்தமுள்ளதாக்குகிறது. தூக்கத்தின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே. நல்ல உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் பராமரிக்க போதுமான தூக்கம் அவசியம்.

தூக்கமின்மையால் இதய நோய், சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் தூக்கம் நினைவாற்றலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், ஸ்லீப் ஹெல்த் இதழில் 2020 அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு இரவும் கூடுதலாக 29 நிமிடங்கள் தூங்குவது நினைவாற்றலை மேம்படுத்த உதவும் என்று கூறுகிறது.

ADVERTISEMENT

நினைவாற்றலுக்கும், தூக்கத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய இந்த ஆய்வுக்காக, புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தூக்கத்தின் பல்வேறு குணாதிசயங்கள் குறித்தும், அன்றாட நினைவாற்றலில் இரவு தூக்கத்தின் தாக்கம் குறித்தும் ஆராய்ச்சி செய்தனர். 

அங்குள்ள மருத்துவமனை ஒன்றின் 61 செவிலியர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். சுகாதாரத் துறையில் முக்கியப் பங்காற்றும் அவர்கள் பணியின்போது விழிப்புடன் இருக்க சரியான தூக்கம் அவசியம். தூக்கமின்மை சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விளைவுகளைக் கூட ஏற்படுத்தும். 

அந்த வகையில், இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஆக்டிகிராஃப்களை வழங்கினர். ஆக்டிகிராஃப்கள் என்பது தினசரி அசைவுகளைப் பதிவுசெய்ய அல்லது தூக்க அளவுருக்களை மதிப்பிடுவதற்கு உடலின் மணிக்கட்டு, கணுக்கால் அல்லது உடற்பகுதியில் பொருத்தப்படும் சாதனங்கள்.

இரண்டு வாரத்திற்குப் பின்னர் ஆக்டிகிராபிகளின் பதிவுகளை வைத்து தூக்கம் 5 பரிமாணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது:

திருப்தி: தூக்கத்தின் தரம் மற்றும் தூக்கமின்மையின் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது. பங்கேற்பாளர்கள் தங்களின் தூக்கம் திருப்தியாக இருப்பதை தெரிவித்தனர். 

விழிப்புணர்வு: பகலில் அவர்கள் எத்தனை முறை தூக்கத்தை உணர்ந்தார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது.

நேரம்: தூங்கும் மற்றும் விழித்திருக்கும் நேரம் ஆக்டிகிராஃபி மூலம் அளவிடப்பட்டது.

செயல்திறன்: பங்கேற்பாளர் படுக்கையில் தூங்கிய நேரத்தின் சதவீதத்தை உள்ளடக்கியது. இதுவும் ஆக்டிகிராஃபியைப் பயன்படுத்தி அளவிடப்பட்டது.

காலம்: தூக்கத்தின் காலம் ஆக்டிகிராஃபியைப் பயன்படுத்தி கணக்கிடப்பட்டது.

முந்தைய நாளின் சிறந்த தூக்கம் அடுத்த நாளின் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது என்பதைக் காட்டுகிறது இந்த ஆய்வு. நீண்ட நேரம் தூங்கிய செவிலியர்கள் அதிக கவனத்துடன் இருந்தனர்.

அதேபோன்று ஒவ்வொரு நாளும் அவர்கள் வழக்கமாக தூங்கும் நேரத்தைவிட கூடுதலாக 29 நிமிடங்கள் தூங்க பரிந்துரைக்கப்பட்டனர். அவ்வாறு கூடுதலாக 29 நிமிடங்கள் தூங்கியவர்களிடம் அதிக வேறுபாடு உணரப்பட்டது. மேலும், இவர்கள் இன்சோம்னியா எனும் தூக்கமின்மை பிரச்னையை எதிர்கொள்ளும் வாய்ப்பு 66 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

29 நிமிடங்கள் என்பது இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம். நாம் வழக்கத்தை விட கூடுதல் நேரம் தூங்கும்பட்சத்தில் அது நினைவாற்றலை அதிகரிக்க உதவும் என்று ஆய்வில் கூறப்படுகிறது. 

Tags : lifestyle
ADVERTISEMENT
ADVERTISEMENT