செய்திகள்

'பட்டாசு வெடிக்கும்முன் சானிடைசரைப் பயன்படுத்தாதீர்'

13th Nov 2020 04:57 PM

ADVERTISEMENT

கரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசங்களும், சானிடைசர் எனப்படும் கை சுத்தப்படுத்தும் திரவங்களும் நாம் தினசரி தொடர்ந்து பயன்படுத்தும் பொருள்களாகிவிட்டன. 

அந்த வகையில், இந்த கரோனா பேரிடர் காலத்தில் வரும் பண்டிகைகளின்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தீப ஒளித் திருநாள், நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 

புத்தாடைகள், இனிப்பு வகைகள் என பல இருந்தாலும் தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான். அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. 

எனினும் இந்த ஆண்டு பெற்றோர்கள் கூடுதல் கவனத்தோடு, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டியது அவசியமாகும். 

ADVERTISEMENT

'பட்டாசு வெடிக்கும்முன் சானிடைசரைப் பயன்படுத்தாதீர்கள்' என சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வருவதை பார்த்திருப்போம். அது உண்மை தான்.

பட்டாசு எளிதில் தீப்பற்றும் பொருள். அதேபோல சானிடைசரில் உள்ள ஆல்கஹாலும் தீப்பற்றும் தன்மை உடையது. இதனால் பெண்கள் தீபாவளிக்கு விளக்கேற்றும்போதும், அனைவரும் பட்டாசு வெடிக்கும்போதும் சானிடைசரைப் பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறையினரும், மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். 

பட்டாசு வெடிக்கும்போது, கைகளில் சானிடைசர் தடவி இருந்தால் அதில் உள்ள ஆல்கஹால் மூலமாக கைகளில் எளிதில் தீப்பற்றி விடும். எனவேதான் இந்த நேரத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். 

பட்டாசு வெடிக்கும் நேரத்தில் சானிடைசருக்குப் பதிலாக சோப்புகளை பயன்படுத்தலாம் அல்லது பட்டாசு வெடிக்கும்முன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிவிட வேண்டும். அதேபோல பட்டாசுகளுக்கு அருகில் சானிடைசரை வைக்க வேண்டாம். முடிந்தவரை ஒரு சில நாள்களுக்கு சானிடைசருக்குப் பதிலாக சோப்பை பயன்படுத்தலாம். அதேபோல எளிதில் தீப்பற்றும் பொருள்களையும் பட்டாசுகள் இருக்கும் இடத்திற்கு அருகே வைக்க வேண்டாம். 

குழந்தைகள் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவதை உறுதிசெய்வது பெற்றோரின் பொறுப்பாகும். அதிலும், வழக்கத்தைவிட இந்த ஆண்டு கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது முக்கியம். 

என்னதான் பண்டிகை தின கொண்டாட்டமாக இருந்தாலும், உயிர் பாதுகாப்பு என்பதற்கு முன்னுரிமை கொடுப்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கொண்டாடி கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளுங்கள். 

சானிடைசரை பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிப்பதைத் தவிருங்கள்!பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள்!

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT