செய்திகள்

நீண்ட ஆயுளைத் தரும் மிளகாய்

11th Nov 2020 03:42 PM

ADVERTISEMENT

நீண்ட நாள்கள் வாழ்வதற்கு காரணமான உணவுப்பொருளை அமெரிக்க நிறுவனம் ஒன்று தனது ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளது. 

உணவு என்றாலே நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். அதிலும், சூடான காரமான உணவுகளையே நாம் பெரும்பாலானோர் விரும்புகிறோம். உடல் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள நிபுணர்கள் பலர் அறிவுறுத்தி வரும் வேளையில், உணவுகள் குறித்த ஆராய்ச்சியும் ஒருபக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

அந்த வகையில், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் என்ற நிறுவனம் நீண்ட ஆயுளுக்கான உணவுகள் குறித்து ஆய்வு செய்ததில் சுவாரசியமான முடிவுகள் தெரிய வந்துள்ளன. 

அதன்படி, உணவில் சிவப்பு மிளகாயைத் தொடர்ந்து உணவில் சேர்த்துவர ஆயுள் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

'சயின்டிபிக் செசன்ஸ் 2020' என்ற மாநாட்டில் இந்நிறுவனம் கடந்த திங்களன்று தங்கள் முதல் ஆராய்ச்சி அறிக்கையை வழங்கியது. உணவில் மிளகாயை சேர்த்துக்கொள்வது நீண்ட காலம் வாழ உதவும் என்ற கண்டுபிடிப்பை மாநாட்டில் எடுத்துக்கூறியுள்ளது. 

மிளகாய் என்பது சமையலில் பயன்படுத்தப்படும் பொதுவான பொருள்களில் ஒன்று. அதிலும், சிவப்பு மிளகாய் பல மசாலாப் பொருள்களில் நிறத்துக்காகவும், சுவைக்காகவும், காரத்துக்காகவும் சேர்க்கப்படுகிறது. மிளகாயில் சுவை, நறுமணம் இருந்தாலும் சத்துகளும் அதிகம் நிரம்பியிருக்கின்றன.

அழற்சி எதிர்ப்பு, ஆன்டி ஆக்சிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு தன்மை, ரத்த-குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்தும் தன்மைகளைக் கொண்டிருப்பதால் தவறாமல் மிளகாயை உட்கொண்டால் மக்கள் நீண்ட ஆயுளை பெறலாம். குறிப்பாக, இருதய நோய் அல்லது புற்றுநோயால் இறக்கும் நபரின் அபாயத்தை குறைப்பதில் மிளகாய் முக்கிய பங்கு வகிப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, இத்தாலி, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் 5,70,000 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பதிவுகள் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளன. உணவில் தவறாமல் மிளகாய் சேர்த்துக் கொண்டவர்கள், இருதய உயிரிழப்புகளில் 26 சதவிகிதம் குறைவாகவும்,  புற்றுநோய் உயிரிழப்புகளில் 23 சதவிகிதம் குறைவாகவும், இதர காரண இறப்புகளில் 25 சதவிகிதம் குறைவாகவும் வாய்ப்புள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிளகாய் உட்கொள்பவர்களுக்கு இருதய நோய் அல்லது புற்றுநோயால் இறக்கும் அபாயங்கள் குறைவு என்ற உண்மையை முந்தையை ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்திருந்தாலும், இந்த ஆய்வு மிளகாய், நீண்ட ஆயுளுக்கு மட்டுமே பங்களிக்கிறது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தீர்மானிக்க முடியவில்லை. இதுகுறித்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகளின் மூலம் இது மேலும் உறுதி செய்யப்படும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : lifestyle
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT