செய்திகள்

69 வயதில் 20க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களை இயக்கும் சாதனைப் பெண்மணி!

16th Mar 2020 03:33 PM

ADVERTISEMENT

 

69 வயதான கேரளத்தைச் சேர்ந்த ராதாமணி 11 வாகன உரிமங்களுடன் சுமார் 20க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களை இயக்குகிறார். 

கேரள மாநிலம் தோப்பும்படி பகுதியைச் சேர்ந்தவர் டி.கே.ராதாமணி. மாநிலத்தின் மிக வயதான பெண்மணியான இவருக்கு வயது 69. ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் இவர் 'ஏ2இசட் கனரக   வாகனப்பயிற்சி நிறுவனம்' ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இது 1978 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அவரது கணவர் இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். ராதாமணி அடிக்கடி நிறுவனத்திற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டதன் பயனாக கனரக வாகனங்களை இயக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

இவர் 1981ல் இலகுரக மோட்டார் வாகன உரிமத்தையும் 1988 ஆம் ஆண்டில் கனரக வாகன உரிமத்தையும் பெற்றார். தற்போது எர்த்மூவர்ஸ், ஃபோர்க்லிஃப்ட், மொபைல் கிரேன், ரஃப் டெரயின் கிரேன் மற்றும் டிரெய்லர் உள்ளிட்ட அனைத்து வகையான கனரக வாகனங்களையும் இயக்குகிறார்.

ADVERTISEMENT

'ஆண்களைப் போல பெண்களும் கனரக வாகனத்தை இயக்க முடியும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆண்களை விட பெண்கள்தான் வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருப்பார்கள். எனினும், பொதுவாகவே, வாகனம் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்' என்று கூறுகிறார் ராதாமணி. 

லாரிகள், பேருந்துகள் ஓட்டுவதை விரும்புவதாகக் கூறும் ராதாமணி, 1988 ஆம் ஆண்டில் கனரக வாகனத்தை இயக்க, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சோதனை ஓட்டத்தை தான் இன்னும் நினைவில் வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

'எல்லோரும் என்னைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அதே நேரத்தில் அங்கிருந்தவர்கள் அனைவரும் என்னை உற்சாகப்படுத்தினர். என் கணவர் என்னை ஊக்கப்படுத்தினார். வழக்கமாக உரிமத்தில் ஏழு வாகனங்களை மட்டுமே குறிப்பிடுவதற்கு இடம் உள்ளது. ஆனால் என்னிடம் 11க்கும் மேற்பட்ட உரிமங்கள் உள்ளன. இது அதிகாரிகளுக்கே சில நேரங்களில் நம்ப முடியாது' என்று கூறினார். மேலும், முக்கியமான விஷயம் என்னவென்றால் தனது 32 வருட அனுபவத்தில் ஒரு விபத்து கூட ஏற்படவில்லை என்றார்.

மேலும், 'முதல்முறையாக ஒரு ஜே.சி.பியை இயக்கும்போது பதட்டம் இருந்தது. ஆனால், இப்போது எளிதாக இயக்க பழகிவிட்டேன். தற்போது டவர் கிரேனை இயக்க விரும்புகிறேன். அது மிகவும் உயரமாக இருப்பதால் இதுவரை அதில் ஏற முயற்சிக்கவில்லை. அதற்கு ஏணிகள் தேவைப்படுகிறது. அதன் உதவியோடு ஒரு நாள் டவர் கிரேனை இயக்குவேன்' என்றார் நம்பிக்கையோடு.

அதேபோன்று, 'ஆரம்பத்தில், ஆட்டோ ரிக்ஷா மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் என்னை கிண்டல் செய்வார்கள். அவர்கள் என்னை வீட்டில் உட்காரச் சொல்வார்கள். ஆனால், வாகனம் ஓட்டுவது எனது விருப்பம். நான் அதைத்தொடர்ந்து செய்வேன் என்று அவர்களிடம் கூறுவேன். 68 வயதில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் டிப்ளமோ பட்டம் பெற்றேன்' என்றார். 

வெளிநாட்டுப் பெண்கள்கூட பலரும் இவரிடம் பயிற்சி பெற வருகிறார்கள். இதில் பல பிரபலங்களும் அடங்குவர். எல்லா கனரக வாகனங்களையும் ஓட்டத் தெரிந்த எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்று புன்னகையுடன் கூறினார். மேலும், அவரது பகுதி பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக சாதனைப் பெண்ணாகத் திகழ்கிறார் ராதாமணி. 

ADVERTISEMENT
ADVERTISEMENT