செய்திகள்

'நாடு முழுவதும் 40 சதவிகித உணவகங்கள் திறக்கப்படும் சூழ்நிலை இல்லை'

26th Aug 2020 11:56 AM

ADVERTISEMENT

கரோனா பேரிடர் காரணமாக, நாடு முழுவதும் 40 சதவிகித உணவகங்கள் திறக்கப்பட முடியாத சூழ்நிலையில் இருப்பதாக பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோ தெரிவித்துள்ளது. 

கரோனா பரவல்  இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் தீவிரமாக இருக்கும் நிலையிலும், பொது முடக்க தளர்வுகளால் இயல்பு நிலை படிப்படியாகத் திரும்பிக் கொண்டிருக்கிறது. அன்றாடம் வேலை செய்து வருமானம் ஈட்டும் கோடிக்கணக்கான மக்கள், இந்த பேரிடர் காலத்திலும் வேறுவழியின்றி பணியில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதில் ஒருபகுதியாக, கரோனா காலத்தில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டன. குறிப்பிட்ட நேரங்களில் பார்சல் மட்டும் வழங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்திருந்தன. எனினும், கரோனாவுக்கு முந்தைய காலத்தை ஒப்பிடுகையில், தற்போது 8 முதல் 10 சதவிகிதம் மட்டுமே உணவகங்கள் இயங்குகின்றன என பிரபல ஆன்லைன் நிறுவனமான சோமாட்டோ தெரிவித்துள்ளது. 

ஆன்லைன் உணவு டெலிவரி இயல்பு நிலைக்குத் திரும்பும் அதே வேளையில், இந்தியா முழுவதும் மற்ற துறைகளைப் போல உணவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக 10 சதவிகிதம் ஏற்கனவே நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

வணிக நோக்கில் செயல்பட்ட 83 சதவிகிதத்தில் 30 சதவிகித உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும் சூழ்நிலையே  இல்லை. மீதமுள்ள 43 சதவிகித உணவகங்கள் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், நிலைமை முழுவதுமாக சீராக  இயங்கும்பட்சத்தில் இவை தொடர்ந்து இயங்கும்' என சோமாட்டோ வெளியிட்டுள்ள "கரோனா காலத்தில் இந்திய உணவகங்கள் நிலை அறிக்கை"யில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், 'நுகர்வோர் கரோனா காலத்தில் உணவகங்களுக்குச் செல்ல பயப்படுகின்றனர். தற்போது உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும் அரசு முழுவதுமாக அனுமதி அளிக்காத நிலையில் தொழில் மந்தமாகவே உள்ளது.

எனவே, லாபமின்றி இயங்கும் சூழ்நிலை இருப்பதால், தளர்வுகள் உள்ள நகரங்களில் கூட, 17 சதவிகித உணவகங்கள் மட்டுமே வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, தனிநபர் வருமானம் பெருமளவு குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் செலவைக் குறைப்பதற்காக உணவகங்களில் சாப்பிடுவதை குறைத்து வருகின்றனர். 

ஆனால், கரோனா தொடக்க காலத்தை ஒப்பிடுகையில் தற்போது ஆன்லைன் உணவு டெலிவரி சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் ஆன்லைன் உணவு டெலிவரி முழுவதுமாக பழைய நிலையினை எட்டும் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலான துறைகள் முடங்கியுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் உணவு டெலிவரி இல்லை. தற்போது வணிகப் பகுதிகளை விட குடியிருப்புப் பகுதிகளில் அதிகம் டெலிவரி செய்யப்படுகிறது. சோமாட்டோவில் மட்டும் மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 7 கோடி பேருக்கு உணவு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 

ஆன்லைன் டெலிவரி செய்யும் 70 சதவிகித உணவகங்களில் தற்போது 5 சதவிகித உணவகங்கள் மட்டும் செயல்படவில்லை. வேலைவாய்ப்பு குறைவு, வருமானம் குறைப்பு, தொழிலாளர்கள் இடம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  

இடம்பெயர்வினால் பெருநகரங்களில் டெலிவரி குறைந்தும் சிறு நகரங்களில் அதிகரித்தும் காணப்படுகிறது. அதாவது பெருநகரங்களில் இருந்த 5 வாடிக்கையாளர்களில் ஒருவர் சிறு நகரத்தில் இருந்து உணவு ஆர்டர் செய்கிறார். இதன்மூலமாக, ஒட்டுமொத்தமாக மூன்றில் ஒரு பகுதியினர் புதிய இடத்திலிருந்து மீண்டும் உணவை ஆர்டர் செய்யத் தொடங்கியுள்ளனர்' என சோமாட்டோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Tags : food
ADVERTISEMENT
ADVERTISEMENT