செய்திகள்

'பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் தனிமையை உணர்கின்றனர்'

14th Aug 2020 12:00 PM

ADVERTISEMENT

பொதுமுடக்க காலத்தில் பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் தனிமையை உணர்வதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. 

கரோனா பேரிடர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் பெரும்பாலானோருக்கு மனரீதியான பிரச்னைகள் ஏற்படுவதாக மனநல ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா காலத்தில் ஆண்களைவிட பெண்களே மனதளவில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தனிமையை உணர்வதாகவும் எசெக்ஸ் பல்கலைக்கழக பொருளாதார வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரமாக, கரோனா காலத்தில் மனநல பிரச்னைகளின் எண்ணிக்கை 7 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும், பெண்களில் மட்டும் இந்த எண்ணிக்கை 11 சதவிகிதத்தில் இருந்து 27 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

அனைவரும் வீட்டில் இருப்பதால் குழந்தைகள் பராமரிப்பு, குடும்பத்தினரை கவனித்துக்கொள்ளுதல் என பெண்களுக்கு வேலைகள் அதிகம் இருப்பதால் அவர்களுக்கு எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து, ஆய்வில் பங்கேற்ற பெண்களில், மூன்றில் ஒரு பங்கினர் (34%) சில நேரங்களில் தனிமையை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர். 11 சதவிகிதம் பேர் பெரும்பாலான நேரங்களில் தனிமையில் இருப்பதாகக் கூறினர். 

ஆண்களைப் பொறுத்தவரை, 23 சதவிகிதம் பேர் சில சமயங்களில் தனிமையில் இருப்பதாகவும், 6 சதவிகிதம் பேர் அடிக்கடி தனிமை உணர்வு இருப்பதாகவும் தெரிவித்தனர். இங்கிலாந்து மக்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றினால் மக்கள், குறிப்பாக பெண்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது. எனவே, குடும்ப உறுப்பினர்கள் இந்த இக்கட்டான காலகட்டத்தில் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆதரவாக இருப்பது அவசியம் என்றும் ஆய்வு பரிந்துரைக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT