கண்ணாடி சாப்பிட ரொம்ப ருசியா இருக்குங்க! வழக்கறிஞரின் வித்தியாச உணவுப் பழக்கம்..

சாஹூவின் இந்த வினோத பழக்கம் குறித்து ஷாபுரா அரசு மருத்துவமனை மருத்துவர்களில் ஒருவரான சதேந்திர பரஸ்டி என்ன சொல்கிறார் என்றால், இதெல்லாம் தேவையற்ற விபரீதப் பழக்கம். கண்ணாடி, செரிக்கக் கூடிய பொருள் அல்ல.
கண்ணாடி சாப்பிட ரொம்ப ருசியா இருக்குங்க! வழக்கறிஞரின் வித்தியாச உணவுப் பழக்கம்..

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரியைச் சேர்ந்த தயாராம் சாஹூ எனும் வழக்கறிஞர் கடந்த 40 ஆண்டுகளாக கண்ணாடி சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் எல்லோரையும் போல சாதாரண உணவுப் பழக்கம் கொண்டிருந்த தயாராம் சாஹூ திடீரென ஒருநாள் கண்ணாடி பாட்டில், பல்புகள், லிக்கர் பாட்டில்களைச் சாப்பிடத் தொடங்கி இருக்கிறார். இது முற்றிலும் பைத்தியக்காரத்தனம் என்று தெரிந்தே இருந்த போதும் இதை ஏன் செய்தார் என்று கேட்டால், அவருக்கே தெளிவான பதில் தெரியவில்லை. ஏன் என்று கேட்டால்;

தன்னைச் சுற்றியிருக்கும் மக்கள், அதிசயமாகத் தன்னைப் பார்க்க வேண்டும் என்றும், வேறு யாராலும் முடியாத ஒரு காரியத்தைத் தான் சாதித்துக் காட்டவேண்டுமென்றும் ஆசைப்பட்டு இப்படியொரு காரியத்தில் இறங்கியதாகக் கூறுகிறார் தயாராம் சாஹு. 40 ஆண்டுகளாக இந்தப் பழக்கம் தொடர்வதால் இப்போது கண்ணாடி சாப்பிடுவதென்பது தனக்கொரு அடிக்ஸனாக மாறி விட்டது என்கிறார் சாஹு. 

தன்னுடைய வித்தியாசமான பழக்கம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டால், அவர்கள், எப்போதாவது நீங்கள் பெரிய கண்ணாடித் துண்டு ஒன்றை சாப்பிட்டு விட்டீர்கள் என்றால் நிச்சயம் அது உங்களது குடலைப் பாதிக்கும் என எச்சரித்தார்கள். அந்த எச்சரிக்கையை ஏற்று இப்போதெல்லாம் அடிக்கடி கண்ணாடி சாப்பிடுவதில்லை என்ற போதும் எப்போதாவது எனக்குப் பிடித்தமான கண்ணாடி கிடைத்தால் அதை விட்டு விடவே கூடாது என்று நினைத்து அவ்வப்போது கண்ணாடி சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். என்கிறார் கூலாக. சாஹூவைப் பொருத்தவரை அவருக்கு கண்ணாடி என்பது நாம் தினமும் சாப்பிடும் காய்கறி பழங்களைப் போல ருசி மிக்க உணவாகத்தான் தென்படுகிறது என்கிறார். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் அசைவ உணவுப் பழக்கம், சிகரெட் பழக்கம், பீர் மற்றும் இதர போதை வஸ்துக்களைப் போல இந்தக் கண்ணாடி சாப்பிடும் வினோதப் பழக்கம் தன்னை மிகவும் அடிமைப்படுத்தி விட்டது, இனி அதிலிருந்து மீள்வது கஷ்டம் என்று கூட சொல்லிக் கொள்கிறார் சாஹூ!

சாஹூவின் இந்த வினோத பழக்கம் குறித்து ஷாபுரா அரசு மருத்துவமனை மருத்துவர்களில் ஒருவரான சதேந்திர பரஸ்டி என்ன சொல்கிறார் என்றால், இதெல்லாம் தேவையற்ற விபரீதப் பழக்கம். கண்ணாடி, செரிக்கக் கூடிய பொருள் அல்ல. அதை உண்பது முற்றிலும் தவறு. உணவுப் பாதை வழியாகச் செல்லும் போது நிச்சயம் கண்ணாடித் துண்டுகள் குடலைக் கிழிக்கும் அபாயம் வரலாம். குடல் மட்டுமல்ல ஏனைய உடல் உள்ளுறுப்புகளும் கூட கண்ணாடித்துண்டுகள் மற்றும் துணுக்குகளால் காயமடைய வாய்ப்புகள் அனேகம் உண்டு. எனவே இம்மாதிரியான பழக்கங்களை விட்டொழித்து விட்டு மனித குலம் எதை உண்ணலாம் என நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்களோ, அதை மட்டும் உண்பதே உத்தமம் என்கிறார்.

டாக்டர் சொல்றது தானே!

சிலருக்கு பிறர் என்ன தான் எச்சரிக்கை செய்தாலும் முதலில் புரியவே புரியாது. காலம் கடந்து தான் உணர்வார்கள். இவர்களெல்லாம் பட்டுத் தெரிந்து கொள்ளும் ரகம்.

தயாராம் சாஹூவும் அப்படித்தான் போலிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com