செய்திகள்

எதைத்தான் ரொமாண்டிசைஸ் செய்வது என்று ஒரு வரம்பு இல்லையா?

2nd Oct 2019 10:56 AM | ஃபேஷன் பொன்னம்மா

ADVERTISEMENT

 

இந்தக் காலத்தில் எதைத்தான் ரொமாண்டிசைஸ் செய்வது என்று தெரியாமல் சோக நேரத்திலும் கூட மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறார்கள் சிலர். 

இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். ஒரு பெண் மாடல், பீகார் பெரு வெள்ளச் சேதத்தின் போது மிக நேர்த்தியாகவும், சற்றே கவர்ச்சியாகவும் ஆடை அணிந்து மக்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாக்கவும், உயிரைக் காக்கவும் ஓடிக் கொண்டிருக்கும் வெள்ளப் பெருக்கின் மத்தியில் நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் ‘பேரழிவின் நடுவில் ஒரு கடற்கன்னி’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருக்கின்றன. பேரிடர்களின் போது மக்களுக்கு உதவாவிட்டாலும் கூட இம்மாதிரியாக அந்த அபாயகரமான சூழலையும் ரொமாண்டிஸைஸ் செய்து தங்களுக்கான விளம்பரம் தேடிக் கொள்ள நினைக்கும் சிலரை நினைக்கையில் மிக மிகக் கேவலமாக இருக்கிறது என்ற ரீதியில் சிலர் அந்தப் புகைப்படங்களுக்கு ஆட்சேபக் கருத்து தெரிவிக்கவே புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட புகைப்பட நிபுணர் செளரப் அனுராஜ் தன் தரப்பு நியாயமாகத் தானும் சற்றுப் பொங்கி எழுந்துள்ளார். எப்படி என்றால்?

‘இம்மாதிரியான கடினமான சூழல்களில் புகைப்படம் எடுப்பதென்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதிலும் பெண்ணொருவரை இப்படி பேரபாயம் நிலவும் இடங்களுக்கு அழைத்துச் சென்று ஃபேஷன் ஃபோட்டோ ஷூட் நடத்துவது எத்தனை சிரமமானது என்று தெரியுமா? அதெல்லாம் தெரியாமல் சும்மா வீட்டில் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து கொண்டு சிலர் கருத்துத் தெரிவிக்கிறோம் என்று எதையாவது சொல்லி விட்டுப் போய்விடுகிறார்கள். வீட்டு பால்கனியில் அமர்ந்து கொண்டு கொட்டும் மழையை வீடியோ எடுத்து விட்டு பிறரது கடின உழைப்பைப் பற்றி மெத்தனமாகப் பேசுவதில் பயனொன்றும் இல்லை’ என்று அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

செளரப் அனுராஜ் டெல்லியில் (Meow Studio) மியாவ் ஸ்டுடியோ என்ற பெயரில் ஃபோட்டோ ஏஜென்ஸி நடத்தி வருகிறார். குறிப்பிட்ட இந்த ஃபோட்டோ ஷூட் நடத்துவதற்காக அதிதி சிங் எனும் ஃபேஷன் டெக்னாலஜி மாணவியை புக் செய்து மேற்கண்ட புகைப்படங்களை ‘பேரழிவின் நடுவில் ஒரு தேவதை’ என்று பெயரிட்டு சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார்.

அதற்கு நெட்டிஸன்களிடையே கிடைத்த கலவையான எதிர்க்கருத்துக்களைத் தான் மேலே குறிப்பிட்டிருக்கிறோம்.

இந்த விஷயம் மட்டும் தான் இப்படி என்றில்லை. சமூகத்தில் மக்களின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்து விடக்கூடிய பல துக்ககரமான விஷயங்களையும் இன்றைய பொருள் மய உலகில் பலர் தங்களது சுயலாபத்துக்காக ரொமாண்டிஸைஸ் செய்து புகைப்படங்கள், விடியோக்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், பட்டிமன்றங்கள் என எடுத்து வெளியிட்டுப் மக்களின் கோபத்தைக் கிளறி வருகிறார்கள்.

சில திரைப்பட இயக்குனர்கள் அழகியலைப் புகுத்தி படமெடுக்கிறோம் என்ற பெயரில் பாலியல் பலாத்கார காட்சிகளைக் கூட ரசிக்கத் தகுந்த இசைக்கோர்ப்பு, கச்சிதமான படத்தொகுப்பு, நடிகர், நடிகையரின் முகபாவங்கள் என அதிலும் ரொமாண்டிசைஸ் செய்து அத்தகைய காட்சிகளின் மீதான ஒரு அழுத்தமான ஈடுப்பாட்டை ரசிகர்களிடையே ஏற்படுத்தத் துணிந்து விடுகிறார்கள். உதாரணம் நயன் தாரா நடிப்பில் வெளியான ‘வாசுகி’ என்ற மலையாள டப்பிங் திரைப்படத்தில் அப்படி ஒரு காட்சி இடம்பெறுகிறது/. படம் சொல்லும் சேதி என்னவாக இருந்த போதும் காட்சிகள் தானே முதலில் மனதில் நிற்கின்றன.

எனவே படைப்பாளிகள்.. தயவு செய்து தாம் எதை அழகியல் என்ற பெயரில் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற நிதானத்துடன் இனிமேல் இத்தகைய காரியங்களில் இறங்கினால் நன்றாக இருக்கும்.

Image Courtesy: News 18

ADVERTISEMENT
ADVERTISEMENT