செய்திகள்

15 மாதங்களுக்கு முன்பு ஆற்றுக்கடியில் தொலைந்து போன ஐபோன் ‘உயிரோடு’ மீட்கப்பட்ட அதிசயம்!

1st Oct 2019 02:44 PM | கார்த்திகா வாசுதேவன்

ADVERTISEMENT

 

ஃபோனுக்கு பேட்டரி தான் உயிர்.

எனவே இங்கு 'உயிரோடு' என்றால் போன் பேட்டரி 15 மாதங்களின் பின்னும் செத்து விடாமல் இயங்கும் நிலையில் இருக்கிறது என்று அர்த்தம்.

யூடியூபர் மைக்கேல் பென்னட் இந்த வார ஆரம்பத்தில் ஒரு விடியோவை வெளியிட்டிருந்தார். 15 மாதங்களுக்கு முன் தெற்கு கரோலினாவின் எடிஸ்டா ஆற்றுக்கடியில் தொலைந்து போன ஐபோன் ஒன்றைத் தாம் இப்போது கண்டெடுத்திருப்பதாகவும், ஆற்றுக்கடியில் நீருக்குள் மூழ்கி சேற்றில் சிக்கி இத்தனை மாதங்கள் கடந்த பின்பும் அது இன்னும் வேலை செய்யும் நிலையில் இருப்பதை அவர் ஆச்சர்யத்துடன் அந்த விடியோவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிகழ்வை ஒட்டி WDAM எனும் உள்ளூர் சேனல் ஒன்றுக்கு அவரளித்த நேர்காணலில், ஐபோனின் உரிமையாளரைக் கண்டறிவது கடினமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஏனெனில், அந்த ஐபோன் அந்நியர்கள் கையில் சிக்குகையில் கடவுச் சொல்லிட்டு உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாக்கப்பட்டிருந்தது. எனவே அந்த ஐபோனைக் கிண்டி அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க அந்த முறை கை கொடுக்கவில்லை. எனவே அதிலிருந்த சிம் கார்டை நீக்கி வேறொரு ஐபோனில் இயக்கி அதன் மூலமாக அதன் உரிமையாளர் குறித்த தகவல்களைக் கண்டுபிடித்தார் பென்னெட். 

ADVERTISEMENT

உரிமையாளர் குறித்த தகவல்கள் பெறப்பட்டதும் உடனடியாக அந்த ஐபோன் சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பிக்கப்பட்டது. ஆம், அதன் நிஜமான உரிமையாளரான பெண்ணின் பெயர் எரிக்கா பென்னெட். அவர், தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற போது கடந்த ஆண்டு(2018) ஜூன் மாதம் 19 ஆம் தேதி இந்த ஐபோனைத் தவற விட்டிருந்தார்.

நல்ல வேளையாக அந்த ஐபோன் அதன் உரிமையாளரை மீண்டும் அடைந்த போது நன்றாக இயங்கும் நிலையில் இருந்தது எரிக்கா பென்னட்டின் அதிர்ஷ்டமே.

ஐபோன் கிடைத்ததைப் பற்றி எரிக்கா என்ன சொல்கிறார் என்றால்? 

‘அவர் என்னை அழைத்த போது, இப்படித்தான் தொடங்கினார்... ஹே... நான் உன்னுடன் ஃபோன் டேக் விளையாடப் போகிறேன். அதனால் சும்மா டைப் செய்து உன் ஃபோனில் இருந்து உனக்கு தகவல் அனுப்புகிறேன். ஃபோன் கிடைத்ததைப் பற்றி இப்போது நீ எப்படி உணர்கிறாய்? என்றார்... அந்த நாள் நிச்சயமாக சர்வதேச தந்தையர் தினம் என்று தான் நினைக்கிறேன். அந்த அளவுக்கு அப்போது நான் மன நெகிழ்வுடன் இருந்தேன்’ என்று தொலைந்து போன தனது ஐபோன் கிடைத்த சந்தோஷ மனநிலையை WDAM சேனலுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் எரிக்கா பென்னட்.

ADVERTISEMENT
ADVERTISEMENT